5,000 தமிழக இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கிய சாம்சங்

5,000 தமிழக இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கிய சாம்சங்
Updated on
2 min read

சாம்சங் இந்தியா குறித்து பொதுவாக பேசப்படும் கதை அதன் சந்தைப் பங்கு, ஸ்மார்ட்போன் வெளியீடுகள் மற்றும் உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி நிலையங்களில் ஒன்றான நொய்டா தொழிற்சாலை ஆகியவற்றைச் சுற்றி அமைந்துள்ளது.

இவை அனைத்தும் குறிப்பிடத்தக்க சாதனைகள்தான் என்றாலும் இது ஒரு பெரிய படத்தின் ஒரு பகுதி மட்டுமே. அதைவிட முக்கியமானதும், நீண்டகால தாக்கம் கொண்டதுமான ஒரு பகுதி, இந்தியாவின் மனிதவள மேம்பாடு மற்றும் புதுமை சூழலை உருவாக்குவதில் சாம்சங் வழங்கி வரும் பங்களிப்பாகும்.

இந்த மாற்றம் உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் வகுப்பறைகள், மகாராஷ்டிராவின் கோடிங் ஆய்வகங்கள், மேலும் ஐஐடி டெல்லி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களின் இன்குபேஷன் மையங்களில் நடைபெற்று வருகிறது.

சாதனங்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், டிஜிட்டல் இந்தியா வளர்ச்சிக்கு உதவும் ஒரு வலுவான புதுமை சூழலை உருவாக்குவதுதான் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக மாறியுள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 2026 நிலவரப்படி, அதன் முக்கியமான ‘சாம்சங் இன்னோவேஷன் கேம்பஸ் (SIC)’ திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் 5,000 இளைஞர்கள் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து சாம்சங் தென்மேற்கு ஆசியா நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ்பி சுன் கூறும்போது, “இந்தியாவில் நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், புதுமையும் கல்வியும் முன்னேற்றத்துக்கு உதவும் ஒரு கருவி மட்டுமல்ல. சமூகச் சேர்க்கைக்கு ஊக்கமாகவும் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

எதிர்காலத்தில் இந்த திறன்களை பெரிய அளவில் பயனுள்ள தாக்கமாக மாற்றுவது முக்கியம். சாம்சங் நிறுவனத்தில், திறமை, படைப்பாற்றல் மற்றும் ஒத்துழைப்பு மனப்பான்மை கொண்ட புதிய தலைமுறை திறமையாளர்களை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்றார்.

சாம்சங் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) திட்டங்கள் இதுவரை 15 லட்சம் மக்களுக்கு பயன் அளித்துள்ளன. 2024–25 நிதியாண்டில் ரூ.144.48 கோடியாக இருந்த சமூகப் பொறுப்பு செலவு, 2025–26-ம் ஆண்டில் ரூ.193.89 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், வகுப்பறையிலிருந்து வேலை வாய்ப்புகள் வரை மாணவர்களை வழிநடத்தும் ஒரு வலுவான திறன் மேம்பாட்டு அமைப்பை சாம்சங் உருவாக்கியுள்ளது. இந்த முயற்சியின் மையமாக எஸ்ஐசி திட்டம் அமைந்துள்ளது.

2025–26 ஆண்டுக்காக ரூ.77.25 கோடி ஒதுக்கீட்டுடன், செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், பிக் டேட்டா மற்றும் நிரலாக்கம் போன்ற முன்னேற்றத் துறைகளில் இத்திட்டம் பயிற்சி வழங்குகிறது. 2022-ம் ஆண்டிலிருந்து இதுவரை 6,500 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

அதில் 2024-ம் ஆண்டில் மட்டும் 3,500 பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 17% அதிகரிப்பைக் காட்டுகிறது. 2025-ம் ஆண்டில், இந்த திட்டம் 10 மாநிலங்களில் 20,000 மாணவர்களை சென்றடைந்து, இந்திய அளவில் 48% பெண்கள் பங்கேற்பையும், தமிழ்நாட்டில் 70% க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்பையும் பதிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்க வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஈஎஸ்எஸ்சிஐ தேசியத் திறன் விருதுகள் 2024-ல், இத்திட்டம் “ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு முயற்சி” என்ற விருதைப் பெற்றுள்ளது.

எஸ்ஐசி (SIC) திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில், 'நாளைக்கான தீர்வு' என்ற ரூ.29.88 கோடி மதிப்புள்ள திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம், ஐஐடி டெல்லியின் புதுமை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற அறக்கட்டளை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.

சமூக, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்கும் இளைஞர்களை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 2025-ம் ஆண்டு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில், 'பாரஸ்பீக்' என்ற குழு தனது புதுமையான தீர்வுக்காக முதன்மை விருதைப் பெற்றது.

தொழில்நுட்பத் துறைக்கு அப்பாற்பட்டவர்களுக்காக, சாம்சங்கின் ‘டிஜிட்டல் மற்றும் நேரடித் திறன் பயிற்சி விற்பனைத் திட்டம்’ (DOST) மூலம் விற்பனை மற்றும் சேவை துறைகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.

‘நாணம்’ (Nanum) போன்ற தன்னார்வத் திட்டங்களுடன் இணைந்து, சாம்சங்கின் இந்த முயற்சிகள் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகின்றன. இந்தியாவில் அதன் நிலையான பங்களிப்பு சாதனங்களின் விற்பனையில் அல்ல, திறமைகளை உருவாக்குவதிலேயே உள்ளது.

5,000 தமிழக இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கிய சாம்சங்
‘கருப்பொருள்’ முதலீடு வாய்ப்புகளும் உத்திகளும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in