

கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு தரமான வாகனங்கள் உற்பத்தியில் ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கோலோச்சி வந்தன. இப்போதும் வாகன துறையின் பிதாமகனாக ஜெர்மனி கருதப்படுகிறது. ‘மெர்சிடிஸ் பென்ஸ்’, ‘பிஎம்டபிள்யூ’ மற்றும் ‘ஆடி’ போன்ற நிறுவனங்கள் மூலம் உலகின் உயர்தர மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வாகனங்களுக்கு ஜெர்மனி பெயர்பெற்று விளங்குகிறது.
மறுபுறம், ஜப்பான் தனது ‘டொயோட்டா’, ‘ஹோண்டா’ மற்றும் ‘சுசூகி’ நிறுவனங்கள் மூலம் எரிபொருள் சிக்கனம் மற்றும் நீண்டகால உழைப்புக்கு முன்னுரிமை அளித்து உலகச் சந்தையைக் கைப்பற்றியது. கடந்த பல தசாப்தங்களாக இந்த இரு நாடுகளுமே வாகன துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், இன்று நிலைமை வேகமாக மாறி வருகிறது. ‘உலகின் வாகனத் தொழிற்சாலை’ என்ற பெருமையை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
இந்த சூழலில் சமீபத்தில் வெளியான ‘Brand Finance Automotive Industry’ அறிக்கை, உலகப் பொருளாதாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகின் டாப் 10 வலிமையான வாகன பிராண்ட்களில் 5 இடங்களை இந்திய நிறுவனங்கள் பிடித்துள்ளன.
குறிப்பாக, கடந்த 1901-ல் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டு, பின்னர் இந்திய மண்ணில் (சென்னையில்) வேரூன்றி, இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ராயல் என்பீல்டு.
பிராண்ட் பைனான்ஸ் 2026 அறிக்கையின்படி, உலகின் 3-வது வலிமையான வாகன பிராண்டாக உருவெடுத்துள்ளது. ராயல் என்பீல்டு தனது 88.6 (BSI) மதிப்பீட்டுடன், ‘AAA’ தரத்தைப் பெற்று இந்த சாதனையைப் படைத்துள்ளது. இது வெறும் பைக் விற்பனையால் வந்த உயர்வு அல்ல; மாறாக உலகளாவிய மக்களின் உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டால் கிடைத்தது.
ஆடி (4-வது இடம்), பெராரி (7-வது இடம்) போன்ற சொகுசு கார் ஜாம்பவான்களை பின்னுக்குத் தள்ளி, ராயல் என்பீல்டு முந்தியுள்ளது. பெராரி ஒரு எலைட் பிராண்ட். ஆனால், ராயல் என்பீல்டு என்பது உலகெங்கிலும் உள்ள பைக் பிரியர்களுக்கு ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது.