

பிராஞ்சலி அஸ்வதி
கடந்த 2022-ம் ஆண்டு, தொழில்நுட்ப உலகம் ஒரு புதிய புரட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரம். உலகமே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை நோக்கித் திரும்பியிருந்த வேளையில், 16 வயது சிறுமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர்தான் பிராஞ்சலி அவஸ்தி.
இன்று அவருக்கு 19 வயதாகிறது. தனது 16 வயதிலேயே, சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான ஒரு வெற்றிகரமான ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) உலகையே வியக்க வைத்துள்ளார். 7 வயதில் கோடிங் கற்கத் தொடங்கி, இன்று ஒரு அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் அவரது பயணம், இளம் சாதனையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாகும்.
யார் இந்த பிராஞ்சலி அவஸ்தி? - இந்தியாவில் பிறந்த பிராஞ்சலி, சிறு வயதிலேயே தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்குக் குடிபெயர்ந்தார். ஒரு பொறியாளரான அவரது தந்தையே அவருக்கு முதல் வழிகாட்டியாக இருந்தார். தந்தையின் தூண்டுதலால், பிராஞ்சலி தனது 7-வது வயதிலேயே கோடிங் (Coding) கற்கத் தொடங்கினார். நாளடைவில், அவருக்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் மெஷின் லேர்னிங் (Machine Learning) துறைகளில் அலாதி ஆர்வம் ஏற்பட்டது.
சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியான தகவலின்படி, பிராஞ்சலிக்கு 13 வயது இருக்கும்போதே, தனது பள்ளிப் படிப்புக்கு நடுவே ஒரு முக்கிய ஆராய்ச்சி ஆய்வகத்தில் இன்டர்ன்ஷிப் (Research Internship) செய்யும் வாய்ப்பைப் பெற்றார். அங்கு அவர் மெஷின் லேர்னிங் திட்டங்களில் நேரடியாகப் பணியாற்றினார். அந்த அனுபவத்தின் போதுதான், ஆராய்ச்சியாளர்கள் இணையத்தில் உள்ள கொட்டிக்கிடக்கும் கோடிக்கணக்கான தரவுகளிலிருந்து தங்களுக்குத் தேவையான சரியான தகவல்களைத் தேடி எடுப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை அவர் நேரில் கண்டறிந்தார்.
16 வயதில் `டெல்வ்.ஏஐ' தொடக்கம்: ஆராய்ச்சியாளர்களின் இந்தத் துயரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பிராஞ்சலி, ஜனவரி 2022-ல் `Delv.AI' என்ற தளத்தைத் தொடங்கினார். ஆராய்ச்சியாளர்கள் இணையத்திலிருந்து தங்களுக்குத் தேவையான பயனுள்ள தகவல்களை மிக எளிதாகவும், விரைவாக தேடவும், ஒழுங்கமைக்கவும், சுருக்கி எடுக்கவும் உதவும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டது.
அவரது இந்த ஸ்டார்ட்-அப் யோசனை மிக விரைவில் அங்கீகாரம் பெற்றது. மியாமியை தளமாகக் கொண்ட ஒரு முக்கிய ஸ்டார்ட்-அப் அக்சிளரேட்டர் திட்டத்தில் இணையும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்த வாய்ப்பு பிராஞ்சலிக்குச் சிறந்த வழிகாட்டிகளையும், பெரிய முதலீட்டாளர்களையும் அடையாளம் காட்டியது. இதன் விளைவாக, On Deck மற்றும் Village Global போன்ற முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 4,50,000 டாலர் (சுமார் ரூ.3.7 கோடி) நிதியுதவியைப் பெற்றார்.
ரூ.100 கோடி மதிப்புள்ள நிறுவனம்: அதன் பிறகு நிறுவனத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது. மிகக் குறுகிய காலத்தில் இந்தத் தளம் பெற்ற பேராதரவு மற்றும் வளர்ச்சியின் காரணமாக, பிராஞ்சலியின் 'Delv.AI' நிறுவனத்தின் மதிப்பு தற்போது சுமார் ரூ.100 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம், மிக இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய வெற்றிகரமான ஏஐ நிறுவனத்தை உருவாக்கிய இளம் நிறுவனர்களில் ஒருவராக பிராஞ்சலி அவஸ்தி உருவெடுத்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவோரான பிராஞ்சலி அவஸ்தி, அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் கணினி அறிவியல் பயின்றார். மெஷின் லேர்னிங் மற்றும் கோடிங் மீது தனக்கிருந்த தீராத ஆர்வத்தை, தனது 16 வயதிலேயே ஒரு பிரம்மாண்டமான வணிக வெற்றியாக மாற்றிக் காட்டியுள்ளார். வயது என்பது வெறும் எண்தான், திறமையும் சரியான இலக்கும் இருந்தால் எந்த வயதிலும் உலகை மாற்றும் சாதனையைப் படைக்கலாம் என்பதற்கு பிராஞ்சலியின் கதையே ஆகச்சிறந்த சான்று!