

பத்தாண்டுகளுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வந்த பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் முதற்கட்டமாக, ரூபாய் நோட்டுகளை அச்சிடும் ஆர்பிஐ-க்கு சொந்தமான நிறுவனமான 'பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்', பாலிமர் தாள்களைத் தயாரித்து வழங்குவதற்காக உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து விருப்பத்தை கோரி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செயல்முறை அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருந்தாலும், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், இந்த முன்மொழிவை இன்னும் பரிசீலித்து வருவதாகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
தற்போது பயன்படுத்தப்படும் காகித நோட்டுகளைவிட இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் 3 முதல் 4 மடங்கு அதிக ஆயுட்காலம் கொண்டவை. மேலும் இவை எளிதில் கிழியாது, தண்ணீரில் நனையாது மற்றும் கள்ள நோட்டுகளை உருவாக்குவது முற்றிலும் கடினம். பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால், முதற்கட்டமாக 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என இத்துறை வல்லுநர்கள் நம்புகின்றனர்.