

கச்சா எண்ணெய் வளம் இந்தியாவில் குறைவு. தேவையில் 80% இறக்குமதி செய்கிறோம். ஆனாலும் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தில் உலகின் வல்லரசாக இந்தியா விளங்குகிறது. இதனால் உலக நாடுகளின் பார்வை இப்போது இந்தியா பக்கம் திரும்பி உள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரி விதிப்போம் என்று மிரட்டிய அமெரிக்காவே இப்போது இந்தியாவிடம் சரணடைந்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார். ‘அமெரிக்காவின் குடுமி சும்மா ஆடாது’ என்பார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகம், உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்வு என்று நிலைமை சூடாக இருக்கும் நேரத்தில் ரூபியோ இந்தியா வந்திருப்பது சாதாரண விஷயம் இல்லை.
அக்டோபர் 21 அன்று மும்பை வந்த மார்கோ ரூபியோ, முதலில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். பிறகு குஜராத் மாநிலம் ஜாம்நகர் சென்று, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைப் பார்வையிட்டார். முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி இருவருடனும் முக்கியமான ஆலோசனை நடத்தினார்.
இந்தப் பயணத்தின் மையமாக இருந்தது எரிசக்திப் பாதுகாப்பு. மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போரும், செங்கடல் பகுதியில் கப்பல்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலும் சேர்ந்து உலக எரிசக்தி விநியோகத்தையே தடுமாறச் செய்கின்றன. குறிப்பாக, அமெரிக்கா, ஈரான் போர் காரணமாக, கச்சா எண்ணெய் போக்குவரத்து ஒருபுறம் முடங்கினாலும், சவுதியில் உள்ள அராம்கோ உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆனாலும் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் வசதி அமெரிக்காவிடம் போதுமான அளவில் இல்லை. இதனால் எரிபொருளுக்கு வளைகுடா நாடுகளை நம்பியே உள்ளது. மேலும் அமெரிக்காவுக்கு எரிபொருள் வழங்கும் ரஷ்யாவில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளும் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டுள்ளன.