

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி பகுதிகளில் இடைப்பருவ மா மகசூல் அதிகரித்துள்ள நிலையில், இங்கிருந்து சரக்கு வாகனம், ரயில் மூலம் பெருநகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் மாம்பழம் உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
இம்மாவட்டத்தில் சுமார் 33 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் மாங்கனிகள் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மா மரங்களைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விவசாயிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதுடன் மருந்து தெளித்து சீர் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். தை மாதத்தில் பூக்கள் பூக்கும். அதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மா சீசன் தொடங்கும்.