

மேற்கு ஆசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இது இந்தியாவுக்கு அந்நியச் செலாவணி மீது அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வரும்காலத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் மின்சார வாகனங்கள் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி உள்ளனர்.
கடந்த 2025-2026-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் மின்சார வாகனச் சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. சமீபத்தில் ஜேஎம்கே ரிசர்ச் அன்ட் அனலிட்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, மார்ச் 2026 வரை இந்தியாவில் மொத்தம் 86.81 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது நாட்டின் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய திருப்புமுனை ஆகும். பெட்ரோல், டீசல் வாகனங்களை நம்பியிருந்த நிலையிலிருந்து மாறி, மின்சார வாகனங்களை நோக்கி மக்கள் வேகமாக நகர்ந்து வருகின்றனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும், அரசின் ஊக்கத் திட்டங்களும், பெருகிவரும் சார்ஜிங் நிலையங்களுமே இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணங்கள்.
இருசக்கர வாகனங்கள்
மின்சார வாகனச் சந்தையில் இருசக்கர வாகனங்கள் (E2W) மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. மொத்த மின்சார வாகன விற்பனையில் இவை 55.82% பங்கை பெற்றுள்ளன.
2026-ம் நிதி ஆண்டில் மட்டும் 14.53 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது ஒரு சாதாரண எண்ணல்ல — நாளொன்றுக்கு சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகின என்பதை இது உணர்த்துகிறது.