

மாதந்தோறும் நாம் செலுத்தும் கட்டணங்கள் பல. மின்சாரம், இணையம், மொபைல் சேவைகள் இப்படியாக ஒரு பட்டியல். இதில் விரைவிலேயே செய்யறிவுக் கட்டணமும் இணையும் வாய்ப்புகள் உள்ளன.
ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்யறிவைப் பயன்படுத்துகிறோம் என்று எண்ணிப் பாருங்கள். இன்றைக்குக் கூகுளில் தேடினாலே 'ஏஐ மோட்' தான் முதலில் வருகிறது. ஒவ்வொரு கூகுள் தேடலும் செய்யறிவுப் பயன்பாடு என்றாகிவிட்டது.
செய்யறிவுப் பயன்பாட்டை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது, செய்யறிவை உதவிக்கு அழைப்பது. அதன் மூலம் நம் செயலைச் சுலபமாக்கிக்கொள்வது. உதாரணமாக ஒரு கடிதம் எழுதுகிறீர்கள்.
நீங்கள் முதல் வெர்ஷனை எழுதிவிட்டீர்கள். இருப்பினும் பிழைகள் இருக்குமோ என்னும் ஐயம். மொழி மாதிரிகளிடம் கொடுத்துப் பிழை நீக்கச் சொல்லிக் கேட்கலாம். இது உதவி வகை.
2-வது முழுக்க முழுக்க செய்யறிவு மூலமே செயலை முடித்து விடுவது. உதாரணமாக படங்கள் வரைவது. இன்றைய சூழலில் நாம் ஊடகங்களில் காணும் பல்வேறு படங்களும் செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்டதே. நம்மில் பலரும் செய்யறிவுக்கென கட்டணம் செலுத்துவதில்லை.
ஆனால் செய்யறிவு நிறுவனங்களைப் பொறுத்த வரையிலும் எந்தவொரு செயல்பாடும் இலவசமல்ல. அவற்றுக்கான பொருட் செலவுகள் உள்ளன. அதிஉயர் கணினி ஆற்றல், மின்சாரம், குளிர்வித்தல் என்று பல்வேறுவிதமான செலவுகள்.
செய்யறிவு நிறுவனங்கள் சமூக சேவை அமைப்புகள் அல்ல. அவை லாப நோக்கில் செயல்படுபவை. தவறில்லை. அவர்களால் அனைவருக்கும் அனைத்தையும் இலவசமாகத் தர இயலாது.
எனவே, இலவசப் பயன்பாடுகளுக் கென்று சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் நாம் பயன்படுத்தும் இலவச ஏஐ, தர்ம தரிசனம் போன்றது. நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடும்.