

மனநலம், எச்ஐவி போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களும் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை கட்டாயம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பொது மற்றும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
மற்ற நோய்களுக்கு காப்பீடு வழங்குவது போல் மனநல குறைபாடு தொடர்பான பாதிப்புகளுக்கும் சிகிச்சை எடுக்கும் விதத்தில் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது திட்டங்களில் மாற்றங்களை அக்டோபர் 31, 2022-க்குள் செய்து முடிக்க வேண்டும் என ஐஆர்டிஏஐ ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் அதுபோன்ற நோய்களை தங்களது பாலிசியின் சிகிச்சை பட்டியலில் சேர்க்க அதிக ஆர்வம் காட்டவில்லை.இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள், நாள்பட்ட நோயால்பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புக் காப்பீடு பாலிசிகளை வழங்குமாறு பொது மற்றும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுக்கு சமீபத்தில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் மீண்டும் ஒரு முறை ஐஆர்டிஏஐ வலியுறுத்திஉள்ளது.
கரோனாவுக்கு பிறகான வாழ்க்கை முறையில் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. அதனை கருத்தில் கொள்ளும்போது மருத்துவகாப்பீட்டு பாலிசிகளில் மனநலம் தொடர்பான சிகிச்சைக்கான கோரிக்கைகளை சேர்ப்பது என்பதுஇன்றைய சூழலில் தேவையானதாகவே பார்க்கப்படுகிறது.
இருப்பினும் மன நோய் அல்லது எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை முறை என்பது தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது. மேலும், காத்திருப்பு காலத்துக்கான வழக்கமான விதிமுறைகள் இவற்றுக்கு பொருந்துமா என்பதையும் பார்க்க வேண்டி உள்ளது.
இதுபோன்ற பாலிசிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறைசெலுத்தும் கட்டணமாக எவ்வளவு தொகையைநிர்ணயிப்பது, எப்படி செயல்படுத்துவது ஆகியவற்றை தீர்மானிப்பதும் சவாலான பணியாகவே உள்ளது. காப்பீட்டு நிறுவனங்களின் பன்முகத்தன்மை, சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை எடுத்துக்காட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.
இருப்பினும், மருத்துவ காப்பீட்டு கோரிக்கைகளில் நிறுவனங்களுக்கும், பாலிசிதாரர்களுக்கும் ஏற்கெனவேஉள்ள பிணக்குகள் பொதுவெளியில் விவாதம் ஆகி வரும் நிலையில், இந்த வகை காப்பீட்டு விண்ணப்பங்களுக்கு கவரேஜ் மறுக்கப்படாமல் இருப்பதை நிறுவனங்கள் எவ்வாறு உறுதி செய்யப் போகின்றன என்பதில்தான் இந்த கூடுதல் கவரேஜ் திட்டத்தின் வெற்றி அடங்கியுள்ளது.
| தற்கொலையில் முதலிடம்: உலக அளவில் மன விரக்தியில் தற்கொலை செய்துகொள்பவர்களின் பட்டியலில் இந்தியா 28 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 2.6 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மனநலம் பாதித்தவர்களில் 80% பேரிடம் முறையான மருத்துவக் காப்பீடு இல்லை. |
- rajanpalanikumar.a@hindutamil.co.in