

ஹெட்ஜ் பண்ட் என்பது ஒரு மாற்று முதலீட்டு திட்டமாகும். பங்குச் சந்தையின் நிச்சயமற்ற தன்மையிலிருந்து முதலீட்டை பாதுகாப்பதற்காக புதிய வியூகத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு மாற்று முதலீடே ஹெட்ஜ் பண்ட். சந்தையின் ஏற்ற இறக்க நிலையிலும் நேர்மறையான வருவாயைப் பெறுவதே இதன் முக்கிய நோக்கம்.
மியூச்சுவல் பண்ட் போல ஹெட்ஜ் பண்ட் நிறுவனங்கள் தனியாக செயல்படுகின்றன. பொதுவாக அதிக சொத்து மதிப்புகளை உடையவர்கள் மட்டுமே ஹெட்ஜ் பண்ட் திட்டத்தில் இணைய முடியும். ஹெட்ஜ் பண்ட் முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீட்டு தொகுப்பை பல்வகைப்படுத்தப்பட்ட தொகுப்பாகவே வைத்திருக்கும்.
அதாவது, நிதி மேலாளர்கள் முழு பணத்தையும் பங்குகளில் போடாமல், பத்திரங்கள், ரொக்கம், தங்கம் என பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டு தொகுப்பாகவே வைத்திருப்பர்.
ஆண் ஆதிக்கம் நிறைந்த ஹெட்ஜ் பண்ட் துறையில் இந்திய-வம்சாவளியைச் சேர்ந்த பெண்களும் தற்போது கோலோச்சத் தொடங்கியுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஐவர் இவர்கள்.
மாலா கோன்கர்: சர்கோகேப் பார்ட்னர்ஸ் என்ற ஹெட்ஜ் பண்ட் முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் மாலா கோன்கர். ரூ.15,000 கோடி முதலீட்டை இவர் நிர்வகித்து வருகிறார். பெண்கள் நிர்வகிக்கும் ஹெட்ஜ் பண்ட்களில் இது அதிகபட்ச அளவாக கருதப்படுகிறது.
திவ்யா நெட்டிமி: அவலா குளோபல் என்ற நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார் திவ்யா நெட்டிமி. இது, 100 கோடி டாலருக்கும் அதிகமான முதலீட்டுடன் தொடங்கப்பட்ட ஹெட்ஜ் பண்ட் நிறுவனமாகும்.
தேவிகா அகர்வால்: பால்யாஸ்னி அசெட் மேனேஜ்மென்ட் என்ற சிங்கப்பூர் நிறுவனத்தின் மேக்ரோ போர்ட்ஃபோலியோ மேலாளராக தேவிகா அகர்வால் உள்ளார். நவம்பர் 2022 -ல் ஹெட்ஜ் நிதி மேலாளர்களில் 50 முன்னணி பெண்களில் ஒருவராக இவர் இடம்பெற்றார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இவர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கான விஞ்ஞானியாக இருந்தவர்.
நந்திதா கோஷல்: மில்லினியம் மேனேஜ்மென்டில் சீனியர் போர்ட்போலியோ மேலாளராக நந்திதா கோஷல் உள்ளார். இது ஒரு உலகளாவிய மாற்று முதலீட்டு மேலாண்மை நிறுவனமாகும். ஹெட்ஜ் பண்ட் ஜர்னலின் 50 முன்னணி பெண்களில் இவரும் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.
ஷிகா குப்தா: ஐரோப்பிய கடன் மேலாண்மை நிறுவனமான அஸ்ட்ரா அசெட் மேனேஜ்மென்ட்டில் போர்ட்ஃபோலியோ மேலாளராக ஷிகா குப்தா, உள்ளார். நவம்பர் 2022 -ல் ஹெட்ஜ் பண்ட்களில் முன்னணி 50 பெண்களில் இவரும் இடம்பிடித்தார். இவர், பாம்பே இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேதி பொறியியல் பிரிவில் பி.டெக். பட்டம் பெற்றவர்.