

‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’ என்பது ஒரு பிரபலமான திரைப்படப் பாடல். எந்தச் செயலையும் ‘ஏன்’ என்றகேள்வியுடன் தொடங்குங்கள் என்கிறார் ‘ஸ்டார்ட் வித் ஒய்’ (Start with why) நூலின் ஆசிரியர் சைமன் சினெக். நமது காரியங்களுக்கு பின்னால் புதைந்திருக்கும் நோக்கம் மீதுநாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவர் இந்தப் புத்தகத்தில் அழுத்தமாக முன்வைக்கிறார்.
‘ஏன்’ என்பதில் தெளிவடையும் போது நாம் சிறந்த தலைவராவது உறுதி என்கிறது இந்தப் புத்தகம். பலபெரிய நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதோடு தங்களது நோக்கம் மூலமாக வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. ஆனால் சில நிறுவனங்களால் அப்படிச் செய்ய முடிவதில்லை. ஏனென்றால் அவர்கள் ‘எப்படி’ செய்கிறோம் என்பதில்தான் அதிக கவனத்தைச் செலுத்துகிறார்களே தவிர, ‘ஏன்’ அதைச் செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவதில்லை.
வெற்றிக்கான வழியாக, சைமன் சினெக் இந்தப் புத்தகத்தில் ‘ஏன்’, ‘எப்படி’, ‘எது’ என்ற பொன்வட்டக் கோட்பாட்டை முன்வைக்கிறார்.
எது: அனைத்து நிறுவனங்களும் தாங்கள் ‘எதை’ செய்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாக அறிவார்கள்.
எப்படி: தாங்கள் செய்துகொண்டிருக்கும் விஷயங்களை ‘எப்படி’ செய்து கொண்டிருக்கிறோம் என்பதில் பல நிறுவனங்களுக்குத் தெளிவுஇருக்கும்.
ஏன்: தாங்கள் செய்துகொண்டிருக்கும் விஷயத்தை ‘ஏன்’ செய்கிறோம் என்பதை சில நிறுவனங்களே கேட்டுக்கொள்கின்றன.
‘ஏன்’ இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கும் நிறுவனங்களே தனித்துவமிக்கதாக திகழ்வதாக அவர் கூறுகிறார்.
பெரும்பாலான நிறுவனங்கள் வெளிவட்டத்தில் இருந்து உள்வட்டம் நோக்கி நகர்கின்றன. அதாவது ‘எது’வில் தொடங்கி ‘ஏன்’ என்பதை நோக்கி நகர்கின்றன. தனித்துவமிக்க நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் உள்வட்டத்திலிருந்து வெளிவட்டம் நோக்கி நகர்கின்றனர். இதற்கு சிறந்த உதாரணமாகம் சைமன் சினெக் ஆப்பிள் நிறுவத்தைக் குறிப்பிடுகிறார். ஆப்பிள் நிறுவனம் ‘ஏன்’, ‘எப்படி,’ ‘எதை’ என்ற கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளிக்கிறது.
ஏன்: நாங்கள் வித்தியாசமாக சிந்திக்கிறோம். இப்போதிருக்கும் நிலையை மாற்றுவதுதான் எங்கள் குறிக்கோள்.
எப்படி: அழகான நன்கு வடிவமைக்கப்பட்ட, பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் பொருள்களைத் தயாரிப்பதன் மூலம் அதை நாங்கள் செய்கிறோம்.
எது: தலைசிறந்த கம்ப்யூட்டர்களை நாங்கள் தயாரிக்கிறோம். அதில் ஒன்றை நீங்கள் வாங்க விரும்புகிறீர்களா?
வால்மார்ட் நிறுவனம் ஆரம்பிக்கும்போது அதன் நிறுவனர் கொண்டிருந்த நோக்கமும் அவரது மறைவுக்குப் பின்னர் அந்த நோக்கங்கள் அடுத்தத் தலைமுறைக்கு சரியாக போய் சேராததன் காரணமாக அந்நிறுவனம் சந்தித்த பின்னடைவையும் சைமன் சினெக் இந்தப் புத்தகத்தில் கோடிட்டுக் காட்டுகிறார்.
நிறுவனங்கள் தங்களது தொழிலில் ‘ஏன்’ இறங்கினோம் என்பது குறித்த தெளிவுடன் இருந்தால் முடிவுகளை விரைவாக எடுக்கலாம். புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தலாம். அந்நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள்.
இதற்கு பல உதாரணங்களை இந்தப் புத்தகம் தருகிறது. நிறுவனங்கள் என்றில்லை, தனிமனிதர்கள் தங்கள் செயலை ‘ஏன்’ என்ற கேள்வியுடன் தொடங்கும்பட்சத்தில், வெற்றியை ஈட்டுவது உறுதி என்பதைப் இந்தப் புத்தகம் உணர்த்துகிறது, ‘ஏன்’என்ற கேள்வியுடன் நம்முடைய பயணத்தைத் தொடங்கினால் இந்த உலகம் நம் வசம்தான். - சுப மீனாட்சி சுந்தரம், somasmen@gmail.com