

டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடி நிகழ்வுகள் நம் நாட்டில் சமீபத்தில் அதிகரித்துள்ளது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று அனைவரும் வங்கி பரிவர்த்தனை மோசடியால் ஏமாறுகின்றனர். இந்தியா எவ்வளவு வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகிறதோ, அதற்கு ஏற்ப புதிய புதிய மோசடிகளும் உருவாகி வருகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனை மிக முக்கியமானதாக மாறி இருக்கும் சூழலில், டிஜிட்டல் பரிவர்த்தனை சார்ந்து நிகழும் மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி ‘ராஜுவும் 40 திருடர்களும்’ என்ற தலைப்பில் ஒரு சிறிய கையேட்டை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை சார்ந்து எந்தெந்த விதங்களில் மோசடிகள் மேற்கொள்ளப்படுகின்றன, மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பதைச் சாமானியர்களுக்கும் புரியும் வகையில் காமிக்ஸ் கதை வடிவில் 40அத்தியாயங்களாக இந்தச் சிறு கையேடு உருவாக்கப்பட்டிருக்கிறது. 40 அத்தியாயங்களில் 40வகையான மோசடிகள் விளக்கப்பட்டுள்ளன.
நம்மில் ஒருவராக ராஜு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நவீன மோசடி பேர்வழிகளால் அவர் எப்படி மோசடி செய்யப்படுகிறார் என்பது விளக்கப்படுகிறது. அத்தகைய மோசடித் தருணம் நமக்கு ஏற்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை ஒவ்வொரு மோசடிக் கதையின் கீழும் ரிசர்வ் வங்கி நமக்கு கூறுகிறது. இந்தச் சிறு கையேட்டின் முக்கியத்துவம் என்னவென்றால், நாம் பரவலாக அறிந்த மோசடிகள் குறித்து மட்டுமல்ல, இன்னும் பொதுத்தளத்தில் பரவலாக அறியப்படாத நவீன நூதன மோசடிகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு.. ராஜு கடை வைத்திருக்கிறார்.
அவர் கடைக்கு மோசடி வாடிக்கையாளர் ஒருவர் வருகிறார். தேவையான பொருள்களை எல்லாம் வாங்கிவிட்டு, கல்லாவில் இருக்கும் ராஜுவை நோக்கி செல்லும் அந்த வாடிக்கையாளர், தன் மொபைல் செயலி வழியாக பணம் செலுத்துவதாக கூறுகிறார். ராஜுவும் சரி என்று தலையாட்டிவிட்டு, க்யூஆர் கோர்டு அட்டையை அந்த வாடிக்கையாளர் ஸ்கேன் செய்வதற்கு ஏதுவாக வைக்கிறார். இப்போது அந்த மோசடி வாடிக்கையாளர், தன்மொபைலில் உள்ள போலிப் பரிவர்த்தனைச் செயலிக்குள் சென்று, ராஜு கடையின் க்யூஆர் கோர்டை ஸ்கேன் செய்கிறார். சில நொடிகளில் அவர் பணம் செலுத்தியதாக போலி ரசீது அவருடைய மொபைலில் தோன்றுகிறது. அந்த மோசடி வாடிக்கையாளர் அதை ராஜுவிடம் காட்டுகிறார். அதைப் பார்த்த ராஜு, அந்த வாடிக்கையாளர் பணம் அனுப்பிவிட்டதாக நம்பி, அவருக்கு நன்றி சொல்லி அனுப்புகிறார்.
கடை நேரம் முடிந்து அன்றைக்கான வரவுகளை ராஜு கணக்கிட்டுப் பார்க்கிறார். அந்தக் குறிப்பிட்ட வாடிக்கையாளிடமிருந்து பணம் வரவில்லை என்பதை அறிந்து ராஜு அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்.
ஜூஸ் ஹேக்கிங் என்று ஒரு மோசடி வகை உண்டு. டேட்டா கேபிள் மூலம் மற்றவரின் போனில் உள்ள தகவலைத் திருடுவது ஜூஸ் ஹேக்கிங் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில், நமக்கு அறிமுகம் இல்லாதவர்களின் சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்தக் கையேட்டில் ரிசர்வ் வங்கி கூறுகிறது. டேட்டா கேபிள் மூலம் மொபைலில் பதிவாகி இருக்கும் வங்கி விவரங்களை திருடி மோசடியில் ஈடுபடுவதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கிறது. ஏடிஎம் மிஷினில் போலி ஸ்கேனர் வைத்து ஏடிஎம் நம்பரைக் களவாடுவது, சமூக நலத்திட்டங்கள் மூலம் நிதி பெற்றுத் தருவதாக மோசடி செய்வது, ஆன்லைன் வேலை என்று கூறி பண மோசடி செய்வது, ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் சலுகை விளம்பரங்கள் மூலமான மோசடி, போலிச் செயலிகள் மூலமான மோசடி, பொது இடங்களில் உள்ள வைபை வழியிலான மோசடி என தற்போது இந்தியாவில் நாம் இன்னும் பரவலாக அறிந்திராத, ஆனால், பல்வேறு இடங்களில் நடந்துவரும் மோசடிகள் குறித்து இந்தக் கையேட்டில் ரிசர்வ் வங்கி தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியுள்ளது.
மொத்தம் 85 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேடு தற்போது ஆங்கிலம், இந்தி, மராத்தி ஆகிய மூன்று மொழிகளில் கிடைக்கிறது. விரைவில் தமிழிலும் வர உள்ளது. இந்தக் கையேட்டை இலவசமாகவே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். டிஜிட்டல் பரிவர்த்தனை செயல்பாடுகளை புதிதாக மேற்கொள்பவர்கள் மட்டுமல்ல, அதில் தொடர்ச்சியாக புழங்கி வருபவர்களும் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய கையேடு இது.