

வேளாண் பண்ணையில் சுற்றுலாவாசிகளைத் தங்கவைத்து அவர்களை வேளாண் பணிகளில் ஈடுபட வைத்து வேளாண் சார்ந்து புரிதல்ஏற்படுத்துவதே வேளாண் சுற்றுலா ஆகும். வேளாண் சார்ந்து மக்களிடையே புரிதல் ஏற்படுத்துவதன் வழியே வேளாண் துறையை மேம்படுத்துவது வேளாண் சுற்றுலாவின் நோக்கமாக உள்ளது.
வேளாண் அறுவடையை கொண்டாடுவது, தோட்டத்தில் விளைந்த பழங்கள், காய்கறிகளைசுற்றுலாவாசிகளே அறுவடை செய்வது, பண்ணைக் குட்டைகளில் மீன் பிடிப்பது, ஊரக வேளாண் சந்தையைப் பார்வையிடுவது, கிராமப்புற கைவினைக் கலைஞர்களிடம் பொருள்கள் வாங்குவது, மாட்டு வண்டியில் சவாரி செய்வது உள்ளிட்டவை வேளாண் சுற்றுலாவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் ஆகும். உலக அளவில் 2019-ம் ஆண்டு வேளாண் சுற்றுலாவின் மதிப்பு 42.46 பில்லியன் டாலராக (ரூ.3.4 லட்சம் கோடி) இருந்தது. 2027-ம் ஆண்டு அது 62.98 பில்லியன் டாலராக (ரூ.5.1 லட்சம் கோடி) உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
துரதிருஷ்டமான விசயம், வெளிநாடுகளில் பிரபலம் அடைந்த அளவுக்கு இந்தியாவில் வேளாண் சுற்றுலா பிரபலமடையவில்லை. இந்தியாவின் முதுகெலும்பாக வேளாண் துறை உள்ளது. ஆனால், அது சார்ந்த விழிப்புணர்வு இந்திய மக்களிடையே பரவலாக இல்லை. வேளாண் துறையை மேம்படுத்த வேளாண் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய தருணத்தில் இந்தியா உள்ளது.
வேளாண் சுற்றுலாவின் முன்னோடி: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் 1985-ம் ஆண்டில் இத்தாலிய அரசு வேளாண் சுற்றுலா திட்டத்தை உருவாக்கியது. அதன்படி,விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் சுற்றுலாவாசிகளை தங்க வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இயற்கையை நேசிக்கும் சுற்றுலாவாசிகள் வேளாண் பகுதிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். இதனால், இத்தாலிய விவசாயிகளின் வருமானமும் பெருக ஆரம்பித்தது. அதன் பலனாய் விவசாயிகளும் விவசாயத்தை ஆர்வத்துடன் மேற்கொண்டு பல புதுமைகளையும் புகுத்தினர். நாளடைவில் இத்தாலியில் உள்ள டஸ்கனி வேளாண் சுற்றுலாவுக்கு பெயர்போன பிராந்தியமாக மாறியது. இத்தாலியை தொடர்ந்து பல வளர்ந்த நாடுகளும் வேளாண் சுற்றுலாவில் கவனம் செலுத்தத் தொடங்கின. தற்போது மேலைநாடுகளில் வேளாண் சுற்றுலா பிரபலமானதாக உள்ளது.
இந்தியாவில் வேளாண் சுற்றுலா: இந்தியாவைப் பொருத்தவரையில், மகாராஷ்டிர மாநிலம் வேளாண் சுற்றுலாவில் முன்னோடியாக திகழ்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் வேளாண்மைச் சுற்றுலா வளர்ச்சிக்கழகம்தான் முதன் முதலில் இந்தியாவில் வேளாண்சுற்றுலாவிற்கு விதை போட்டது. 2004-ம் ஆண்டு வேளாண் சுற்றுலா திட்டம் மகராஷ்டிர மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக 152 வேளாண் பண்ணைகள் தேர்வுசெய்யப்பட்டு 500 விவசாயிகளுக்கு பயிற்சிவழங்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் பண்ணையில் வேளாண் சுற்றுலா தொடங்கப்பட்டது. ஆச்சர்யமூட்டும் விதமாக, வேளாண் சுற்றுலாவுக்குப் பிறகு அந்த விவசாயிகளின் வருமானம் 25 சதவீதம் உயர்ந்தது. தொடர்ந்து வேளாண் சுற்றுலா வளர்ச்சிக் கழகமானது விவசாயிகளுக்கு வேளாண் சுற்றுலா சார்ந்து பயிற்சி அளிப்பது, அங்குள்ள இளைஞர்களை சுற்றுலா வழிகாட்டியாய் நியமிப்பது, சுற்றுலாவாசிகளுக்கு உணவு தயார் செய்ய மகளிர் சுயஉதவிக் குழுக்களை பணியமர்த்துவது, பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்து வேளாண் பண்ணைகளை பார்வையிடச் செய்வது, வங்கிகளில் கடன் வசதி ஏற்படுத்தித் தருவது எனப் பலவற்றையும் செய்து வருகிறது.
இதன் விளைவாக தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 328 பண்ணைகள் வேளாண் சுற்றுலாவை செயல்படுத்தி வருகின்றன. 2018 முதல் 2020 வரையில் 17 லட்சம் சுற்றுலாவாசிகள் இந்தப் பண்ணைகளுக்கு வேளாண்சுற்றுலா வந்துள்ளனர். இதன் மூலம் அந்த இரண்டுஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.60 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மேலும், இளைஞர்கள், பெண்கள் என 1 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கர்நாடக அரசும் வேளாண் சுற்றுலாவை மேம்படுத்த கொள்கைகள் வகுத்துள்ளது. கேரள அரசும் வேளாண் சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் சில தனியார் அமைப்புகள் வேளாண் சுற்றுலாவை செயல்படுத்திவருகின்றன.
தமிழ்நாட்டின் நிலை: தமிழ்நாடு கலாச்சாரத்துக்கும் வேளாண்மைக்கும் பெயர்போன மாநிலமாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இந்திய அளவில் தமிழ்நாடு முக்கிய மாநிலமாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலாமேம்பட்ட நிலையில் இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலாவை வளர்த்தெடுப்பதற்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. அதற்கான சில யோசனைகள்:
1 முதலில் வேளாண் சுற்றுலாவுக்கு என்று தனி கொள்கையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். இதற்கென்று சுற்றுலாத்துறை சார்பில் குழுவை நியமிக்க வேண்டும்.
2 அரசு தோட்டக்கலை பண்ணைகளில் வேளாண் சுற்றுலாவை முன்மாதிரியாக செயல்படுத்த வேண்டும். அவ்வப்போது விவசாயிகளுக்கு வேளாண் சுற்றுலாவில் கைதேர்ந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சி தர வேண்டும். அத்துடன் சுற்றுலாத்துறை சார்பில் வேளாண் சுற்றுலா தொடர்பான பட்டயப் படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
3 வேளாண் சுற்றுலாவை செயல்படுத்தும் பண்ணைகளுக்கு தனி அங்கீகாரம் வழங்க வேண்டும்.
4 வேளாண் சுற்றுலாவை ஆரம்பிக்க விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் வசதி மற்றும் வரி விலக்கு வழங்க வேண்டும். இதில் கூட்டுறவு வங்கிகளையும் ஈடுபடுத்த வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகள் அந்தந்தக் கிராமங்களில் வேளாண் சுற்றுலாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க முன்வர வேண்டும்.
5 வேளாண் சுற்றுலாவை மக்களிடம் பரவலாக்க தனியார் சுற்றுலா இணையதளங்களோடு ஒப்பந்தம் செய்திட வேண்டும்.
6 பொங்கல் திருவிழாவை வேளாண் சுற்றுலாவுடன் இணைத்துக் கொண்டாடும் வகையில் திட்டங்களை சுற்றுலாத்துறை வகுக்க வேண்டும்.
7 பள்ளி மாணவர்களுக்கு வேளாண் கல்வியைஎடுத்துச்செல்லும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அந்தந்த ஊர்களில் இருக்கும் விவசாயிகளுடன் கைகோர்க்க வேண்டும்.
வேளாண் தொழிலை விட்டு மக்கள் விலகிவரும் இக்காலகட்டத்தில்,வேளாண் சுற்றுலா என்பது, ‘இந்தியா அதன் கிராமங்களில்தான் வாழ்கிறது’ என்ற காந்தியின் கூற்றை மெய்பித்துக் காட்டும்! தமிழ்நாடு கலாச்சாரத்துக்கும் வேளாண்மைக்கும் பெயர்போன மாநிலமாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இந்திய அளவில் தமிழ்நாடு முக்கிய மாநிலமாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலாமேம்பட்ட நிலையில்இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாகும்.
செ.சரத்
வேளாண் ஆராய்ச்சியாளர்
saraths1995@gmail.com
சே.தே.சிவக்குமார்
வேளாண் துறை பேராசிரியர்
sdsiva@tnau.ac.in