

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த 50 ஆண்டுகளாக அம்மாநாடு நடைபெற்றுவருகிறது. உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள், சிந்தனைவாதிகள், பொருளாதார நிபுணர்கள், தொழில் அதிபர்கள், தொழில்முனைவோர்கள் என சமூகத்தை கட்டமைக்கும் பல தரப்பினரும் கலந்துகொண்டு உலகின் போக்கு குறித்து அம்மாநாட்டில் உரையாடுவார்கள்.
இந்த மாநாட்டையொட்டி, இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் அறிக்கை வெளியாவது வழக்கம். அந்த அறிக்கை உலகின் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலையைச் சுட்டிக்காட்டி, பொருளாதார கொள்கை ரீதியாக உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய விசயங்களை உணர்த்தும். இந்த ஆண்டு, ‘கொல்லும் ஏற்றத்தாழ்வு’ (Inequality Kills) என்ற தலைப்பில் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கை என்ன சொல்கிறது?
கரோனாவுக்குப் பிறகு வெளியாகும் ஆக்ஸ்ஃபாமின் இரண்டாவது அறிக்கை இது. உலகின் ஏற்றத்தாழ்வு கரோனாவுக்குப் பிறகு மிக மோசமாக அதிகரித்து வருகிறது என்பதுதான் இவ்வாண்டு அறிக்கையின் சாராம்சம். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் 26 மணி நேரத்துக்கு ஒரு பில்லினியர் உருவாகிக்கொண்டிருக்கிறார். அதேசமயம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 99 சதவீத மக்கள் கடும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனர். 16 கோடி மக்கள் அதீத வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்றத்தாழ்வு காரணமாக தினமும் 21,300 பேர் மரணிக்கின்றனர்; பசியின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 21 லட்சம் பேர் மரணிக்கின்றனர் என்று அந்த அறிக்கைக் குறிப்பிடுகிறது.
இந்தியாவின் நிலைமை
2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கரோனா முதல் அலை மிக வேகமாக பரவத் தொடங்கியது. கரோனாவைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால், தொழில்கள் முடங்கின; பலர் வேலை இழந்தனர்; பலர் கடும் வருவாய் இழப்பைச் சந்தித்தனர்.
கோடிக்கணக்கான மக்கள் வறுமைச் சூழலுக்குள் தள்ளப்பட்டனர். முதல் அலையின் தீவிரம் குறைந்து, ஊரடங்கு படிப்படி
யாக தளர்த்தப்பட்டதை அடுத்து நாட்டின் பொருளாதாரம் சற்று மீளத் தொடங்கியது. இந்நிலையில் 2021-ம் ஆண்டு கரோனா இரண்டாம் அலை வேகம் கொள்ளத் தொடங்கியது. மீண்டும் ஊரடங்கு. மீண்டும் வருவாய் இழப்பு. ஆனால், இந்தக் காலகட்டத்தில் இந்திய பில்லியனர்கள் சொத்துமதிப்பு இருமடங்கு அளவில் அதிகரித்துள்ளது என்று இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
மார்ச் 2020 – நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.23.14 லட்சம் கோடியிலிருந்து (313 பில்லியன் டாலர்) ரூ.53.16 லட்சம் கோடியாக (719 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. அதேசமயம் 4.6 கோடி இந்திய மக்கள் மிக மோசமான வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2021-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 84 சதவீத குடும்பங்களின் வருமானம் கடுமையாக சரிந்துள்ளது. அதேவேளையில் இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 102-லிருந்து 142-ஆக உயர்ந்துள்ளது என்கிறது இவ்வறிக்கை.
கடந்த ஆண்டில் இந்தியாவில் உள்ள 100 பில்லியனர்களின் சொத்து மதிப்பு ரூ.57.3 லட்சம் கோடியாக (775 பில்லியன் டாலர்) உயர்ந்
துள்ளது. ஆனால், நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் மக்களிடம் நாட்டின் மொத்த வருவாயில் வெறும் 6% மட்டுமே சென்றுள்ளது என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பில்லியனர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. இதே இந்தியாவில் வேலையின்மை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. கரோனா காலகட்டத்தில் பொருளாதார ரீதியிலாக பெண்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். 2020-ம் ஆண்டில் இந்தியப் பெண்கள் ரூ.59.11 லட்சம் கோடி (800 பில்லியன் டாலர்)அளவில் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
மத்திய அரசின் பொறுப்பின்மை
மத்திய அரசின் அரசின் செயல்பாடுகள் குறித்தும் இந்த அறிக்கை பேசுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், சாமான்ய மக்களைப் பாதிக்கும் வகையில் மறைமுக வரி அதிகரித்து இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரி 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டதால் இந்தியாவுக்கு ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
2019-20-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-21ம் நிதி ஆண்டின் முதல் ஆறுமாதங்களில் எரிபொருள் மீதான வரி 33 சதவீதம் அளவில் உயர்ந்தது. கரோனாவுக்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 79 சதவீதம் அதிகமாகும். ஏழைகள், நடுத்தர வர்க்கங்கள் அவர்களுக்கு தகுதிக்கு மீறி வரி கட்டி வருகிற நிலையில், பில்லியனர்களிடம் அவர்களின் வருவாய்க்கு பொருத்தமான வரியை வசூலிக்கவில்லை என்று குறிப்பிடுகிறது.
சுகாதாரம் மற்றும் கல்வி
சுகாதார ரீதியிலான இந்தியாவில் மிக மோசமான ஏற்றத்தாழ்வு இருப்பதாக இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவின் மோசமான சுகாதார கட்டமைப்பை கரோனா இரண்டாம் அலை வெளிச்சமிட்டுக்காட்டியது. போதிய அரசு மருத்துவமனை கிடையாது. மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை கிடையாது. அந்தவகையில், இந்தியாவில் மக்கள் மருத்துவ வசதி மற்றும் செலவினம் சார்ந்து மிக மோசமான நெருக்கடியில் உள்ளனர். இந்திய மக்கள் தங்கள் வருமானத்தில் 62 சதவீதத்தை மருத்துவத்துக்காக செலவிடுகின்றனர்.
கல்வியை எடுத்துக்கொள்வோம் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தில் கல்வியின் பங்கு முக்கியமானது. கரோனா சூழல் காரணமாக மாணவர்கள் கல்வி ரீதியாக கடும் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் சூழலில், 2021-ம் ஆண்டில் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு 6% குறைந்திருக்கிறது. கல்வியை டிஜிட்டல் தளத்துக்கு மாற்றியதன் காரணமாக மாணவர்களிடையே கல்வி சார்ந்து ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரிவினர்கள்ஒருபுறம் வறுமையில் தள்ளியது மட்டுமல்லாமல், பெரும்பாலான மாணவர்களால் ஆன்லைனில் படிப்பதற்குத் தேவையான ஸ்மார்ட் போன் வாங்க பணம் இல்லால் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் பல குழந்தைகள் பள்ளிக்கு செல்லமுடியாமல் குழந்தை தொழிலாளர்களாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
கரோனா காலகட்டத்தில் இந்திய தனியார் பள்ளிகள் தங்களது கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளன. இந்தியப் பெற்றோர்கள், தங்களது வருமானத்தில் 15 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணத்துக்கு செலவிடுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தனியார் கல்வி அமைப்புகளின் கட்டண உயர்வு ஏழைகளையும் விளிம்புநிலை மக்களையும் பாதிக்கக்கூடும். இந்தச் சமநிலையற்ற அணுகுமுறை வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் போன்றவற்றில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் ஏற்கனவே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகரிக்கக்கூடும்.
கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, உணவு, குடிநீர்போன்ற அடிப்படை சேவைகளை அரசாங்கம் வழங்கும்விதம் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய இத்தகைய சேவையை அரசால் மட்டுமே சரியான முறையில் வழங்க முடியும். இதற்குப் பதிலாக அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்களை நம்புவது பொருளாதார சமத்துவமின்மைக்கே வழிவகுக்கும்.
பில்லினர்களுக்கு தனி வரி
இந்தியாவில் உள்ள 98 பில்லினிய குடும்பங்களுக்கு 4 சதவீத சொத்துவரி விதித்தால் இரண்டு வருடங்கள் சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் செலவினங்களை கவனித்துக் கொள்ளலாம் அல்லது பதினேழு வருடங்களுக்கு நாட்டின் மதிய உணவு திட்டத்திற்கு அல்லது ஆறு ஆண்டுகளுக்கு சமக்ரா சிக்ஷா அபியான் போன்ற திட்டங்களுக்கு செலவிடலாம்.
இதேபோல 98 பணக்காரர்களுக்கு ஒரு சதவீத சொத்து வரி விதித்தால் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கோ அல்லது இந்திய அரசின் பள்ளிக் கல்வி எழுத்தறிவுத் துறைக்கு ஓர் ஆண்டு நிதி அளிக்க முடியும் என்ற தகவல்களை இவ்வறிக்கைத் தருகிறது. மேலும் இந்த மெகா பணக்கார குடும்பங்களுக்கு வெறும் ஒரு சதவீத சொத்துவரி விரித்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த தடுப்பூசி திட்டத்துக்கு நிதி உதவி அளிக்க முடியும் என்கிறது இந்த அறிக்கை.
“நெல்லு விளைஞ்சிருக்கு, வரப்பு உள்ள மறஞ்சிருக்கு, காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்!” என்னும் நிலைமைதான் இன்னும்நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஆக்ஸ்ஃபாம் அறிக்கை நமக்கு உணர்த்துகிறது!
தொடர்புக்கு: somasmen@gmail.com