Published : 08 Feb 2021 08:32 AM
Last Updated : 08 Feb 2021 08:32 AM

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்திருக்கிறதா பட்ஜெட்?

karthi@gkmtax.com

கரோனாவுக்கான தடுப்பூசி எப்போது வரும் என்பதைவிட, ‘மத்திய பட்ஜெட்டில் நமக்கு ஏதாவது ஆறுதலான அறிவிப்பு இருக்குமா’ என்ற எதிர்பார்ப்பே தொழில்துறையினரிடமும், மக்களிடமும் சமீப வாரங்களாக இருந்துவந்தது. வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டால், கையில் கொஞ்சம் காசு மிஞ்சும் என்று ‘மிடில் கிளாஸ்’ மக்கள் நினைத்தார்கள். கடன் தள்ளுபடி அல்லது வட்டி தள்ளுபடி அறிவிக்கப்பட்டால், கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடலாமே என்று சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் எதிர்பார்த்தன. ஆனால், அப்படி ஒரு இனிப்பை, ‘இந்தா பிடியுங்கள்’ என்று, இந்த மத்திய பட்ஜெட் ஊட்டிவிடவில்லை.

தைரியமான முடிவு

ஆற, அமர, தீர விசாரித்து யோசித்துப்பார்த்தால், 2021-22 ஆம் நிதிஆண்டிற்கான மத்திய பட்ஜெட், கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தின் சுமையை, யார் மீதும் ஏற்றி சிரமம் தரவில்லை. நாட்டின் பொருளாதாரம் விரைவாக மீள்வதற்கு, நீண்டகால வளர்ச்சிக்கு, பட்ஜெட் வாயிலாக, ஒரு அடித்தளமிடப்பட்டுள்ளது.
அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ.1.75 லட்சம் கோடி திரட்டுவது; இரண்டு அரசு வங்கிகள், ஒரு ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியை தனியாருக்கு வழங்குவது என்று அதிரடியான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இது மிகத் தைரியமான முடிவு. உள்கட்டமைப்பு, கட்டுமானம், மருத்துவம், சுகாதாரம், வேளாண்மை, பாதுகாப்பு என்று அவசிய, அத்தியாவசிய துறைகளுக்கு தாராளம் காட்டப்பட்டுள்ளது.

இனிமேல், வருங்கால வைப்பு நிதி பங்களிப்புக்கான வட்டி வருமானத்தில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ள தொகைக்கு வருமான வரி உண்டு. உதாரணமாக, ரூ.4 லட்சம் வந்தால், ரூ.2.5 லட்சத்திற்கு வரி இல்லை. மீதமுள்ள, ரூ.1.5 லட்சத்திற்கு வருமான வரி வசூலிக்கப்படும். அதேபோல, வருங்கால வைப்பு நிதி செலுத்தும்போது, தொழிலாளர் பங்களிப்பை உரிய நேரத்தில் நிறுவனம் செலுத்தத் தவறினால், அது வருமான வரிக்கழிவாக கருதப்படாது. அதற்கும் வரி கட்ட வேண்டும்.

இனி தப்பிக்க முடியாது

வருமான வரித்துறையினர், தங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் சோதனை நடத்துவார்கள். வரி ஏய்ப்பு, வருமானத்திற்கான ஆதாரம் இல்லாமல் அதிகமான சொத்து இருக்கும் பட்சத்தில் அபராதம், சிறை தண்டனை வரையிலான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில், புகாருக்கு உள்ளானவர், தங்கள் தரப்பு நியாயங்களை விளக்கி, பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, வருமான வரித்துறையின்கீழ் ‘தீர்வு ஆணையம்’ (Income Tax Settlement Commission - ITSC) இயங்கி வந்தது. அபராதம், சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க அது ஒருவாய்ப்பாக இருந்தது. பிப்ரவரி முதல் தேதியில் இருந்து தீர்வு ஆணையம் கலைக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, வருமான வரி சோதனையின்போது சிக்குபவர்களுக்கு, கசப்பான செய்தி.

கொள்முதலுக்கும் வரி

வரும் ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து ரூ.50 லட்சத்திற்குமேல் கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு, 0.1 சதவீதம் டி.டி.எஸ். (Tax Deducted at Source) பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது பெரிய தொகை இல்லையென்றாலும், வரிதாரர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தவே செய்யும்.

வரி வசூலுக்கு ஆதாரமாக இருக்கும், பண பரிவர்த்தனை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவே, வருமான வரித்துறை இந்த நடவடிக்கையில் இறங்க இருக்கிறது. ஆனால், இந்த புதிய நடைமுறை அவசியமற்றதாகவே கருதப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.டி. நடைமுறை வாயிலாகவே, இதை கண்காணிக்க முடியும். பிறகு எதற்காக புதிய நடைமுறை என்ற கேள்வி எழுகிறது.

நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம்

வருமான வரிவிதிப்பை பொறுத்தவரை, தனிநபர் வருமான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டிருந்தால், வரியாக செலுத்துவதில் மிச்சமாகும் பணத்தையும் மக்கள் செலவு செய்வார்கள். அதன் மூலம் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதை கருத்தில் கொண்டாவது, தனிநபர் வருமானவரி உச்ச வரம்பை உயர்த்தி இருக்கலாம். ஆனால், அந்த அறிவிப்பு வரவே இல்லை. இது நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது.

ஒரு வரிதாரரின், வருமான வரி கணக்கை, அவர் தாக்கல் செய்த ஒன்பது மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று வருமான வரி அதிகாரிகளுக்கும், இந்த பட்ஜெட் காலக்கெடு நிர்ணயித்திருக்கிறது. 5 சதவீதத்திற்கும் குறைவான பண பரிவர்த்தனை உள்ளவர்களுக்கு வரி கட்டாய தணிக்கை வரம்பு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருமான வரிக்கணக்குகளை மறு ஆய்வு செய்யும் காலம் 6 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருப்பது வரிதாரர்களது சுமையை குறைக்கும்.

வரி அதிகாரிகளுக்கும், சாமானியர்களுக்கும் இடையிலான தொடர்புகளை முகமற்றதாக மாற்றுவதற்கான முயற்சிக்கு ஏற்ப, வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (Income Tax Appellate Tribunal) மேல்முறையீடு செய்ய முகமற்ற மதிப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் வரை மொத்த வருமானம் மற்றும் ரூ.10 லட்சம் வரை சர்ச்சைக்குரிய வருமானம் உள்ளவர்களுக்கு இந்த முறையில் தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் மற்றும் டெபாசிட் வட்டியில் மட்டுமே வருமானம் பெறும் 75 வயதான முதியவர்கள், இனி வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது இல்லை. அந்த நடைமுறை
யில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. ஆனால், ஓய்வூதியமும், வட்டியும் ஒரே வங்கியிலிருந்து பெறப்பட வேண்டும் என்று அறிவித்திருப்பது, முதியவர்களுக்கு முழு பலன் அளிக்குமா என்று யோசிக்க வைக்கிறது.

பங்குச் சந்தையில் எல்ஐசி

குறைந்த விலையில், அதாவது, ரூ.45 லட்சத்திற்குள் வீட்டு வசதி, 2022 மார்ச் 31 ஆம் தேதி வரை வாங்கப்படும் கடன்களுக்கு ரூ.1.5 லட்சம் கூடுதல் வட்டி விலக்கு (பிரிவு 80EEA) அளிக்கப்பட்டிருக்கிறது. இது கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும். மேலும், வீட்டுக்கனவில் உள்ள நடுத்தர மக்களுக்கு நிம்மதி அளிக்கும். வருமான வரி போர்ட்டலில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள ‘முன்கூட்டியே நிரப்பப்படும் படிவ’த்தில் (pre-filled form) சம்பளம், மூலதன ஆதாயம் (Capital gain), ஈவுத்தொகை (Dividend), வட்டி மூலம் பெறப்படும் வருமானம் (Interest income), டிடிஎஸ் போன்ற விவரங்கள் வரிதாரர்களின் தளத்தில் தாமாகவே முன் கூட்டியே நிரப்பப்பட்டுவிடும். இதனால், வரி செலுத்தும்போது, தகவல்கள் விடுபட வாய்ப்பு இல்லை..

அரசு வங்கிகளின் மறுமுதலீடுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வழங்கப்படுவது வங்கித்துறை மீள உதவும். முதன்முறையாக, பங்குச் சந்தையில் எல்ஐசி தடம் பதிக்கிறது. நடுத்தர மக்கள் நம்பி பணம் போடும் எல்.ஐ.சி. மீதான நம்பகத்தன்மையை இது பாதிக்குமா என்பதை தற்போது கணிப்பது கடினம். டிவிடெண்ட் தொகைக்கு வருமான வரிப்பிடித்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

டிவிடெண்ட் வருமானத்தின் மீதான, முன்னரே செலுத்தப்படும் வரி பொறுப்பானது, டிவி டெண்ட் அறிவித்தபின் அல்லது டிவிடெண்ட் செலுத்திய பின்னரே எழும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குறைந்த ஒப்பந்த விகித நன்மை வழங்கப்படும். ஸ்டார்ட்-அப் தொழிலுக்கான வரி விடுமுறை 2022 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. அதேபோல் ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வதற்கான மூலதன ஆதாய விலக்கு 2022 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செய்வீர்களா ஆபீசர்ஸ்?

2021-22 - ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், மொத்த செலவினம், ரூ.34,83,236 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில், ரூ,34,50,305 கோடியாக இருந்தது. 135 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், வரி வருவாய் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான பணம், மக்களின் அன்றாட உழைப்பில் இருந்து பெறப்படுவது என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

துறைகள் ரீதியாக ஒதுக்கப்படும் பணம் முறையாக செலவழிக்கப்படுகிறதா. எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது போன்றவை குறித்த வெளிப்படைத் தகவல்கள் ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியில் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டால், அது அரசின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். அதிகாரி
களும், மக்கள் பிரதிநிதிகளும் அதற்குகான பொறுப்பை ஏற்கச் செய்ய வேண்டும்.

இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்ப்பையும், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை. என்றாலும், கரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் சுமையை, மக்கள் மீது ஏற்றாமல், ‘கோவிட் வரி’ போன்று புதிய வரிகளை தலையில் கட்டாமல், பொருளாதார இழப்பில் இருந்தும் மீளவேண்டும், மக்களையும் சிரமத்தில் ஆழ்த்தக்கூடாது என்ற அக்கறையோடு, எச்சரிக்கையாக நுட்பத்துடன் இந்த மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x