

விவசாயம், பால்வளம் உள்ளிட்டவற்றில் நாம் சுய சார்பை எட்டிவிட்டோம் என்று கூறினாலும், மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதில் நாம் இன்னமும் வெளிநாடுகளை நம்பித்தான் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் சீனாவின் கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் அவ்வளவாக இல்லை என்றாலும், அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், வந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்தியா எந்த அளவுக்குத் தயாராக உள்ளது என்பது கேள்விக்குறியே. இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிப்பதற்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் (ஏபிஐ) பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக 70 சதவீத மூலப் பொருட்கள் சீனாவிலிருந்துதான் இறக்குமதியாகின்றன.
தற்போது கரோனா வைரசின் பிறப்பிடமாக அறியப்படும் வூஹான் பகுதியைச் சேர்ந்த ஹூபெய் பகுதியிலிருந்துதான் இவை பெறப்படுகின்றன. நோய் எதிர்ப்பு மருந்துகளான மெட்ரோனிடஸோல், குளோரம்பினிகால், அஸித்ரோமைசின் ஆகியவை மட்டுமின்றி வைட்டமின் பி1, பி6 உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இங்கிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. மருந்து மூலப்பொருட்கள் மட்டுமின்றி போரக்ஸ், தாமிரம், ஜிப்சம், கல் உப்பு, நிலக்கரி, மக்னீசியம் போன்ற கனிமங்களும் இப்பகுதியில் இருந்துதான் பெருமளவு இறக்குமதி ஆகின்றன. இப்பகுதியில் இயங்கிவரும் அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் மூடிவிட்டது சீன அரசு. இதனால் இந்தியாவுக்கான மருந்து மூலப் பொருள் சப்ளை கடந்த 20 நாட்களாக நின்றுபோயுள்ளது. இதன் காரணமாக மூலப் பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் இதற்கான விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன. இதன் விளைவாக மருந்து, மாத்திரைகளின் விலைகளும் கணிசமாக (10%-15%) உயர்ந்துள்ளன. சில மருந்துப் பொருட்களின் விலை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. உள்நாட்டில் மருந்துப் பொருள் விலையேற்றத்தைத் தடுக்க மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
பிப்ரவரி 10-ம் தேதிக்குப் பிறகு நிலைமை சீரடையும் என சீன நிறுவனங்கள் முன்னர் தெரிவித்தன. ஆனால், அதற்கான அறிகுறிகள் தெரியாத நிலையில் எவ்வளவு காலம் மருந்து பொருட்களுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும் என்பது தெரியாமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் திணறி வருகின்றன.
பெரும்பாலான மூலப்பொருட்கள் உயிரி சார்ந்தவையாகும். இவை நொதித்தல் அடிப்படையில் தயாரிக்கப்படுபவை. உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பிறப்பிடத்தில் உள்ள ஆலைகளிலிருந்து நொதித்தல் அடிப்படையிலான மூலப்பொருட்களை வாங்குவது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதை அரசு உணர வேண்டும். மூலப்பொருள் தயாரிப்பில் இயங்கி வந்த ஒரே அரசு நிறுவனம் ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட்தான். அதுவும் 2003-ம் ஆண்டிலிருந்து நலிவடைந்துவிட்டது. இதை விற்பது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. நிறுவனத்தைக் குறைந்தபட்ச முதலீடு செய்து சீரமைத்தால் அதாவது இயந்திர சாதனங்களை வாங்கினால் இறக்குமதி செய்யும் மூலப்பொருட்களில் 50 சதவீதத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனம் அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களுக்கென்று சில பொறுப்புகளும், கடமைகளும் உண்டு. அனைத்து நிறுவனங்களுமே லாபம் ஈட்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இதை அரசு உணர வேண்டும். ஹெச்ஏஎல் நிறுவனத்தை சீரமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற நெருக்குதல் ஏற்படுவதைத் தடுக்க முடியும். இனிமேலாவது மருந்து உற்பத்தியில் சுய சார்பை எட்ட அரசு முயற்சி செய்யலாம். அப்போதுதான் மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை உள்ளது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்.