

டொயோட்டா நிறுவனம் சிறிய அளவிலான எஸ்யூவி மாடல் ஒன்றை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல், டொயோட்டா யாரிஸின் நவீன மாடலின் அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. தயாரிப்பில் இருக்கும் இந்த மாடலுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆனால் உள் வட்டாரங்களில், இந்த புதிய மாடல் டொயோட்டா பி- எஸ்யூவி என்று அழைக்கப்படுகிறது.
டிஎன்ஜிஏ – பி தொழில்நுட்ப வகையில் தயாராகும் இந்தப் புதிய எஸ்யூவி, 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த எஸ்யூவி, ஐரோப்பியச் சந்தையை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வந்தாலும், ஆசிய சந்தையிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியச் சந்தையில் டொயோட்டா, பிஎஸ் 6 கீழ் உருவாக்கப்பட்ட இனோவா கிரஸ்டாவை சமீபத்தில் அறிமுகம் செய்தது. வரும் ஏப்ரல் முதல் இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்கள் பிஎஸ்6 விதிகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்ற நிலையில், டொயோட்டா இந்தியச் சந்தையில் பிஎஸ்6 மாடல்களை அதிகம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.