Published : 14 Oct 2019 01:14 PM
Last Updated : 14 Oct 2019 01:14 PM

வாடிக்கையாளர்களே எங்கள் பலம்

ரத்னா ஃபேன் ஹவுஸ் விஜய் கிருஷ்ணமூர்த்தி

என்னதான் நவீனம், தொழில் நுட்பம் வந்துவிட்டாலும், கைராசி, சென்டிமென்ட் இவையெல்லாம் தமிழர்களின் ரத்தத்தோடு கலந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அமேசானும், பிளிப்கார்ட்டும் மாறி மாறி ஆஃபர்களை அள்ளி வழங்கினாலும், வீட்டு உபயோகப் பொருட்கள் என்று வந்துவிட்டால் நேரடியாகக் கடைக்கு வந்துதான் வாங்கிச் செல்கிறார்கள் என்கிறார் ரத்னா ஃபேன் ஹவுஸ் நிர்வாகி விஜய் கிருஷ்ணமூர்த்தி.

சென்னை தி நகர் பாண்டிபஜார் பகுதியில் சாலை உட்பட கடைகளும் கூட பலவித மாற்றங்களை அடைந்துவிட்டன. ஆனால், அங்கு ராஜாபாதர் தெருவில் இருக்கும் ரத்னா ஃபேன் ஹவுஸ் மட்டும் இன்னும் பழமை மாறாமல் அப்படியே இருக்கிறது. ஆனால், உள்ளே இருக்கும் பொருட்கள், அவற்றின் சேவை என அனைத்துமே காலத்துக்கு ஏற்ப, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மெருகேறிக்கொண்டிருக்கிறது.

ஒரு குடும்பத்தில் தாத்தா, மகன், பேரன் என மூன்று தலைமுறையினரும் வந்து பொருட்களை வாங்கிக்கொண்டு அதே மாறாத மகிழ்ச்சியுடன் செல்லும் போக்கும் இன்றும் அப்படியே இருக்கிறது. ரெட்டிபட்டி சுவாமிகளின் சிஷ்யர் மாம்பலம் சுவாமிகள், அவரை அடுத்து தந்தை கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து தற்போது மகன் விஜய், ரத்னா ஃபேன் ஹவுஸை நிர்வகித்து வருகிறார்.

70 ஆண்டுகள் ஆகிவிட்டன. போட்டிகள் அதிகமாகிவிட்டன. ஆனால், இப்போதும் ஒரே ஒரு கிளையோடு ரத்னா ஃபேன் ஹவுஸ் சிறந்து விளங்குவது எப்படி என்று அவரிடம் கேட்டபோது, யோசிக்காமல் ‘வாடிக்கையாளர் சேவை’ என்றார். எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் விதத்தில் எங்களுடைய சேவை தரமாகவும் விரைவாகவும் தரப்படுகிறது. இதே சேவையை இன்னொரு கிளையைத் திறந்து அங்கும் வழங்க முடியாமல் போய்விட்டால் வாடிக்கையாளர்
களின் நம்பகத்தன்மையை இழக்கும் நிலை வரலாம். இந்த கிளை மூலமே நாடு முழுவதும் சேவை வழங்க நாங்கள் எங்களைத் தயார் படுத்தியிருக்கிறோம். எங்களுடைய நோக்கம் லாபம் பார்ப்பதல்ல.

விளம்பரம் செய்வதில் கூட இன்றும் அதே பழைய பாணியைக் கையாள்கிறீர்கள். ஏன் என்று கேட்டதற்கு, ‘எங்களுடைய வாடிக்கையாளர்களை நாங்கள் நன்றாக தெரிந்தும் புரிந்தும் வைத்திருக்கிறோம். விளம்பரங்களில் தொடர்ச்சியாக நாங்கள் எங்களை ஈடுபடுத்திக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், அதில் எங்களுடைய அடையாளத்தை இழந்துவிடாமல் அதே பழமையைத் தொடர்கிறோம். எங்களுக்கு விளம்பரத்துக்கு குரல் கொடுப்பவர் இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா.

அவர்தான் இன்றும் எங்களுடைய எல்லா விளம்பரங்களுக்கும் குரல் கொடுக்கிறார். புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தும்போது, விழாக் காலங்களின்போது என ஒவ்வொரு முறையும் அவரை வைத்துத்தான் விளம்பரங்களைத் தயார் செய்கிறோம். இன்று வாடிக்கையாளர்களுக்கு நிறைய சாய்ஸ்கள் உள்ளன, ஆன்லைனில் கூட ஆர்டர் செய்யும் வசதி பெருகிவிட்டது.

குறிப்பாக சென்னை நகரத்தில். ஆனாலும், இன்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு உங்களுடைய கடையைத் தேடி வருகிறார்கள். வாடிக்கையாளர்களை எப்படி திருப்தி படுத்துகிறீர்கள் என்று ஒரு நீளமான கேள்வி கேட்டோம். பொறுமையாகக் கேட்டவர், புன்னகைத்தபடியே “அப்பா சொல்வார் ஒவ்வொரு மகிழ்ச்சியான வாடிக்கையாளரும் இன்னொரு வாடிக்கையாளரை அழைத்து வருவார் என்று.

வாடிக்கையாளர்கள் இப்போது தாங்கள் வாங்கும் பொருட்கள் குறித்த புரிதல்களோடுதான் கடைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு எல்லா விதமான தகவல்களும் இணையத்தில் கிடைத்துவிடுகின்றன. எத்தனை சதுர அடி அறைக்கு எத்தனை டன் ஏசி போட வேண்டும் என்பது கூட தெரிந்துவைத்திருக்கிறார்கள்.

விலையை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். ஆனால், பொருளை மட்டும் நேரடியாகப் பார்த்துத்தான் வாங்குகிறார்கள் இன்னமும். எங்கள் கடைக்குள் ஒருவர் ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று வந்துவிட்டால், அவருக்கான அனைத்து விதமான பொருட்களும் தயாராக இங்கு இருக்கும். அதுமட்டு மல்லாமல், பொருட்கள் குறித்து விளக்குவது மட்டுமல்லாமல், நேரடியாகவே பொருட்களை இயக்கியும் டெமோ காட்டுவோம்.

ஏசியில் எவ்வளவு யூனிட் பவர் செலவாகிறது என்பது நேரடியாக அவர்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். வாட்டர் ப்யூரிஃபயருக்கும் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் ஒன்றை நிறுவியுள்ளோம். நேரடியாக பொருட்களின் செயல்பாடு என்ன, பலன் என்ன என்பதை விளக்குகிறோம். ரத்னா ஃபேன் ஹவுஸ் வந்தால் எல்லா தேவைக்குமான பொருட்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் பெற்றிருக்கிறார்கள். மாடல்கள், பயன்பாடுகள், தேவைகள் என அனைத்தையும் அறிந்து அதற்கேற்ப பொருட்களைத் தேர்ந்தெடுத்து ஸ்டாக் வைத்திருப்போம். எங்களுடைய பலமே மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களும், எங்கள் ஊழியர்களும்தான்.

முன்னணி நிறுவனங்கள் அனைத்துமே எங்களுடன் இணக்கமாக பயணித்து வருகின்றன. வாடிக்கையாளர்களின் தேவையை நாங்கள் அறிந்திருப்பதால் எங்களிடம் யோசனைகள் கேட்பார்கள். அவர்களுடைய தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்று பொருட்கள் குறித்து விளக்குவார்கள். அதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் விற்பனைக்கு வெளியிடுவதற்கு ஒரு வாரம் முன்பேரத்னா ஃபேன் ஹவுஸில் வைத்து அறிமுகப்படுத்துவதும் கூட நடக்கும். ரத்னா ஃபேன் ஹவுஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல நிறுவனங்களுக்கும் கூட கைராசியான கடை என்கிறார் பெருமிதத்துடன். “வடபழனியில் கிடங்கு ஒன்றை அமைத்துள்ளோம். பண்டிகைக் காலங்களுக்கு முன்பே தேவையான அளவில் ஸ்டாக்குகளை தயாராக வைத்துக் கொள்வோம்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் பொருள் எப்போதும் எங்களிடம் இருக்கும். இரண்டு மூன்று நாட்கள் இழுப்பது போன்ற பிசினஸ் எங்களிடம் இல்லை. இதனாலேயே மக்களுக்கு ரத்னா ஃபேன் ஹவுஸ் நெருக்கமாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் இலவச டெலிவரி செய்கிறார்கள்.

இன்ஸ்டாலேஷனுக்கும் எங்கள் ஆட்கள் வந்து செய்து கொடுக்கிறார்கள். வாடிக்கை யாளர்களுக்கு எண்ட்-டு-எண்ட் சேவையை வழங்குவது ரத்னா ஃபேன் ஹவுசின் சிறப்புகளில் முக்கியமானது” என்கிறார். அதேபோல் பொருட்களில் வாடிக்கையாளர்கள் பிரச்சினை இருப்பதாக புகார் அளித்தால் உடனடியாக நிறுவனத்தைத் தொடர்புகொண்டு தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.

குறிப்பாக பிரபல நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிரச்சினைகள் அடிக்கடி வருவதாக வாடிக்கையாளர்கள் கூறியதை அடுத்து அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை முற்றிலுமாக நிராகரித்துவிட்டதாகச் சொன்னார். ஐந்தாண்டுகளாக அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ரத்னா ஃபேன் ஹவுசில் விற்பனை செய்யப்படவில்லை. தரம், விரைவான சேவை, வாங்கக்கூடிய விலை இவை ரத்னா ஃபேன் ஹவுஸ் கடைபிடிக்கும் தொழில்தர்மம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x