Published : 23 Sep 2019 11:08 AM
Last Updated : 23 Sep 2019 11:08 AM

ஆட்டோமொபைல் வீழ்ச்சி ஓலா, உபர் காரணமா?

ஜெ.சரவணன்
saravanan.j@hindutamil.co.in

நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது மோடி தலைமையிலான பாஜகவின் இரண்டாம் ஆட்சி. ஆனால், அதற்குள் ஆயிரம் விமர்சனங்கள். காரணம் பொருளாதார வீழ்ச்சி. ஜிடிபி 5%. வேலையின்மை விகிதம் 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு. எல்லா துறைகளிலும் வர்த்தகம் சரிவு. அதிலும் குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கக்கூடிய ஆட்டோமொபைல் துறை வரலாறு காணாத விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

சில நிறுவனங்கள் வேலையில்லா விடுமுறை நாட்களை அறிவிக்கின்றன. சில நிறுவனங்கள் வேலையிலிருந்து பணியாளர்களை நீக்குகின்றன. நாட்டின் பொருளாதாரம் என்ன ஆகுமோ, அது நம்மை எந்த வகையில் பாதிக்குமோ என்று மக்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன் ஆட்டோமொபைல் துறையின் விற்பனை வீழ்ச்சிக்கு ஓலா, உபர் போன்ற டாக்சி சேவைகளை மக்கள் பயன்படுத்துவதுதான் காரணம் என்று கூறியிருந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அவருடைய இந்த பதிலில் நிதியமைச்சருக்கான பொறுப்போ, பொருளாதாரம் குறித்த புரிதலோ துளியும் இருப்பதாகத் தெரியவில்லை எனும் அளவுக்கு விமர்சனங்கள் இருந்தன. உண்மையில் ஓலா, உபர் போன்றவற்றால் இந்திய ஆட்டோமொபைல் சந்தை பாதித்திருக்கிறதா?

ஆட்டோமொபைல் துறையின் முக்கியத்துவம்

இந்தியப் பொருளாதாரத்தில் வாகனச் சந்தைக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. காரணம் பொருளாதாரம் சக்கரத்தின் மீது சுழன்றுகொண்டிருக்கிறது. வர்த்தகத்துக்கு போக்குவரத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதனால் நேரடியாக ஆட்டோமொபைல் துறையின் பங்கு பொருளாதாரத்தில் கணிசமாக இருந்தால், மறைமுகமாக பெருமளவு பங்கு வகிக்கிறது. இந்திய ஜிடிபியில் ஆட்டோமொபைல் துறையின் நேரடி பங்கு 7.5 சதவீதம். கிட்டதட்ட 4 கோடி நேரடி வேலைவாய்ப்புகளையும் இந்தத் துறை வழங்கிக்கொண்டிருக்கிறது. இத்தகையத் துறையின் சமீபத்திய வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஆட்டோ மொபைல் துறை என்பது... நிச்சயம் ஓலா, உபர் நான்கு சக்கர பயணிகள் வாகன விற்பனையை சற்று பாதித்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட்போன் யுகத்தில் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறுபட்டது. இவர்களுக்கு ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கேட்ஜெட்டுகளுக்கும் டேட்டாவுக்கும் செலவு செய்யவே வருமானம் போதவில்லை. இஎம்ஐ கட்டி கார் வாங்குவதைவிட ஓலா, உபரில் வித விதமான கார்களில் ஜாலியாகப் பயணித்துவிட்டுப் போகலாம் என்ற போக்கு நிலவத்தான் செய்கிறது.

ஆனால், ஆட்டோமொபைல் துறையின் விற்பனை வீழ்ச்சிக்கு இதுமட்டுமே காரணமா என்றால், இல்லை. சொந்தமாகக் காரில் பயணித்தாலும், வாடகைக்கு பயணித்தாலும் கார் என்பது தேவையாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் விற்பனை சற்று பாதித்தாலும், இத்தகைய கடும் சரிவுக்கு ஓலா, உபர் காரணமாக இருக்க வாய்ப்பே இல்லை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே இதற்கு உதாரணம். சொல்லப்போனால், சொந்தமாகக் கார் வாங்கி ஏதோ ஒரு நாள் ஓட்டுபவர்களைவிட, கார் வாங்கி ஓலா, உபரில் வாடகைக்கு ஓட்டி வருமானம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் நகரங்களில் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

மேலும், சொமட்டோ, ஸ்விக்கி, உபர் ஈட்ஸ் போன்ற வேலைவாய்ப்புகள் அதிகரித்தபோது, வாகன விற்பனையும் கணிசமாக அதிகரித்தது. எனவே ஓலா, உபர் வாகன விற்பனையில் சரிவை ஏற்படுத்திவிட்டது என்று முடிவு செய்துவிட முடியாது. ஆட்டோமொபைல் துறை என்பது வெறும் கார்கள் மட்டுமே அல்ல. இருசக்கரம், மூன்று சக்கரம், வர்த்தக வாகனங்கள், கனரக வாகனங்கள் என அனைத்தும் அடங்கியதுதான். எனவே எல்லாவற்றையும் உள்ளடக்கித்தான் இந்தச் சரிவை மதிப்பிட முடியும்.

வீழ்ச்சிக்கு என்னதான் காரணம் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணம் அரசின் அவசர அவசரமான திட்ட அறிவிப்புகளும் நடைமுறைப்படுத்தல்களும்தான். ஒரேநாளில் நாட்டை தலைகீழாக மாற்றிவிடும் போக்குதான் அனைத்து அறிவிப்புகளிலும் தெரிகிறது. ஆட்டோமொபைல் துறையில் பிஎஸ் 4 தர நிர்ணய முறைக்கு முடிவுகட்டிவிட்டு பிஎஸ் 6 தர நிர்ணய முறையைக் கொண்டுவர உத்தரவிடப்பட்டது.

அதற்கு நிறுவனங்கள் தயாராவதற்குள்ளாகவே எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க பெரும் அழுத்தம் ஆட்டோமொபைல் துறைக்குத் தரப்பட்டது. அனைத்துக்கும்மேல் இவற்றையெல்லாம் அமல்படுத்த நிறுவனங்களுக்கு குறைவான காலக்கெடு விதிக்கப்பட்டது. இது நிறுவனங்களின் இன்வென்ட்ரியை வெகுவாகப் பாதித்தது.

அடுத்த காரணி ஜிஎஸ்டி. நாட்டின் மிக முக்கியமான துறையாக ஆட்டோமொபைல் இருந்தாலும் அதற்கான ஜிஎஸ்டியை அரசு குறைக்கவே இல்லை. கார்களை ஆடம்பரப் பொருள் என்ற நிலையிலேயே அரசு வைத்திருக்கிறது. ஆனால், ‘ரூ.1000 கட்டி காரை வீட்டுக்கு ஓட்டிச் செல்லுங்கள்’ போன்ற விளம்பரங்களும், வங்கிகளின் தாராள கடன் வசதிகளும், கார்களை ஆடம்பரப் பொருள் என்பதிலிருந்து சாதாரண பொருளாக மாற்றி வருடங்கள் ஆகின்றன. இவை தவிர வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியத்தை கூட்டியது, பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவராதது, வாகனப் பதிவுக் கட்டணத்தை உயர்த்தியது போன்ற அரசின் பல்வேறு முடிவுகள் கணிசமாக ஆட்டோமொபைல் துறையை பாதித்துள்ளன.

நிறுவனங்கள் குழம்பியது ஒருபக்கம் என்றால் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குழம்பிப் போனார்கள். பிஎஸ் 6 தரத்தில் வாகனம் வரும்போது எதற்காகப் பழைய வாகனத்தை வாங்க வேண்டும் என்ற மனநிலை உண்டானது. எலெக்ட்ரிக் கார்கள் வாங்க வேண்டுமென்றால் சார்ஜிங் பிரச்சினைகள் எப்படி இருக்கும், அதற்கான போதுமான உட்கட்டமைப்பு இல்லையே என்ற பேச்சுகளும் அடிபட்டன.

இப்படி நிறுவனங்கள்-வாடிக்கையாளர்கள் இரண்டு தரப்பிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், சமீபத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய அதிநவீன கார்களை சந்தைக்கு வருவதற்கு முன்பாகவே புக்கிங் செய்ய ஆர்வம் காட்டியிருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். உதாரணத்துக்கு ஹுண்டாய் வென்யு, எம் ஜி ஹெக்டார், டாடா ஹாரியர், கியா செல்டோஸ் போன்றவை. இவற்றில் பெரும்பாலான கார்கள் விற்றும் தீர்ந்தன.

இதற்கிடையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வேண்டுமென்றே விற்பனை சரிவு இருப்பதாகக் காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீன் கண்டெல்வால் கூறியதுபோல், அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காகவே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வீழ்ச்சியில் இருப்பதாகக் கூறிக்கொள்கின்றனவோ என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது. வாகனத் துறையின் வீழ்ச்சிக்கு நிறுவனங்களின் அதிகபட்ச உற்பத்தியே காரணம் என்று ராஜிவ் பஜாஜ் கூறியிருப்பதையும் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். சந்தையில் நான்தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்று எல்லா நிறுவனங்களும் போட்டி போட்டு தயாரிப்புகளைத் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்து குவித்தால் பிரச்சினை வராமல் இருக்குமா?

பொருளாதாரத்தின் இருதுருவங்கள்

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, நுகர்வும் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பலமுறை கூறியதுபோல் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு பகுதியினர் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது. கிராமப்புற மற்றும் வேளாண் பிரிவினரும், முறைசாரா தொழில் அமைப்பினரும் மிகப்பெரிய இடம்பெயர்வை கடந்த ஐந்தாண்டுகளில் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இதற்கு அரசின் தீர்மானங்களே காரணம்.

முதலில் ஜிடிபி கணக்கிடும் முறையை மாற்றி அமைத்ததால் இந்தியப் பொருளாதாரத்தின் போக்கு கணிக்க முடியாததாக மாறியது. இரண்டாவது, நகரங்களை மையமாகக் கொண்டே அனைத்து திட்டங்களையும் வகுத்தது. ஸ்மார்ட்சிட்டி, ஸ்டேண்ட அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என அனைத்துமே நகரங்களை மையமாகக் கொண்டவையாகவே இருந்தன. கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் பாஜக அரசில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமே இல்லை.

ஏன் கிராமப் பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம்? நகரங்களில் நுகர்வு என்பது கிட்டதட்ட இறுதிப்புள்ளியை எட்டிவிட்டதாகவே கூறலாம். இங்கே வீடுகளும், கார்களும் குவிந்து கிடக்கின்றன. சாலையில் இறங்கிப் பார்த்தாலே தெரியும். இருசக்கர வாகனங்களை விட கார்கள் அதிகம் என்று. இனியும் கார்கள் விற்பனை ஆக வேண்டுமெனில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களிலிருந்துதான் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும்.

ஆனால், அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. எந்த ஒரு திட்டத்தையும் ஆராய்ந்து அதன் சாதக பாதகங்களைப் புரிந்துகொண்டு அதற்கான ஏற்பாடுகளைத் திட்டமிட்ட பிறகே நடைமுறைப்படுத்த வேண்டும். அரசின் அறிவிப்புகள் ஒன்றும் பிறந்தநாள் பரிசுகள் அல்ல, ரகசியமாக வைத்திருந்து சர்ப்ரைஸ் கொடுப்பதற்கு. அப்படி ஏற்கெனவே சர்ப்ரைஸாக கொடுத்த ‘டிமானிட்டைசேஷன்’ பரிசு ஒன்றே, போதும் போதும் என்றாகிவிட்டது. ‘புதிய இந்தியா’ என்று பிரதமர் கூறும்போதெல்லாம் மக்கள் பதறுகிறார்கள். போகிறப் போக்கில் அடித்துவிடுவது அல்ல பொருளாதாரம். இனியேனும் அரசு பொருளாதாரத்தின் கூறுகளை ஆராய்ந்து திட்டங்களையும், பிரச்சினைக்கான உண்மையான காரணங்களையும் அறிவிக்
கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x