

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com
முதல் பேரிடர். 1973. அரபு நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் நடந்த போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் தந்து உதவியது. இதற்கு, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஆதரவளித்தார்கள். பதிலடி கொடுக்க, அரபு நாடுகளிடமிருந்த சக்தி வாய்ந்த ஆயுதம், பெட்ரோல். உலகப் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தியும், சப்ளையும், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (Organization of Petroleum Exporting Countries – சுருக்கமாக OPEC) என்னும் கூட்டணியால் நிர்வகிக்கப்படுகின்றன. அன்று இதன் அங்கத்தினர்கள் 12 நாடுகள் - இரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, வெனிஜுலா, கட்டார். இந்தோனேஷியா, லிபியா, ஐக்கிய அரபுக் குடியரசு, அல்ஜீரியா, நைஜீரியா, ஈக்வடார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கானடா, ஜப்பான், நெதர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளுக்கும் பெட்
ரோலிய ஏற்றுமதியை ஓப்பெக் தடை செய்தது. தட்டுப்பாட்டால், பேரலுக்கு 3 டாலர்களாக இருந்த விலை 12 டாலர்களாக எகிறியது. அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் ரேஷன் செய்யப்பட்டன. முன்னேறிய நாடுகளின் உயிர்மூச்சு பெட்ரோலியப் பொருட்கள். 1973 எண்ணெய் நெருக்கடி (1973 Oil Crisis) என்று அழைக்கப்படும் இந்த நெருக்கடியால், அவர்களின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. குறிப்பாக, அமெரிக்கக் கார்த் தொழில். பெட்ரோல் தட்டுப்பாட்டால், புதியகார்கள் வாங்குவோர் யாருமில்லை.
ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட் ஆகியோர் தொழிலாளிகளை ஆயிரக் கணக்கில் நீக்கம் செய்தார்கள்.
டொயோட்டோவின் ஏற்றுமதியில் முதல் இடம் அமெரிக்காவுக்குத்தான். ஜப்பானியத் தயாரிப்புகள் என்றாலே, தரமும், விலையும் குறைவானவை என்னும் பிம்பம் இருந்தது. டொயோட்டோ இதை மாற்றினார்கள். ஜெனரல்
மோட்டார்ஸ், ஃபோர்ட் ஆகிய இருவருக்கும் சவால் விடும் தரம். சகாய விலை. இதனால், வருடா வருடம், அதிக அமெரிக்கர்கள் டொயோட்டோ வாகனங்களை வாங்கிக்கொண்டிருந்தார்கள். 1968–ல் அமெரிக்க ஏற்றுமதி 2,79,087 வாகனங்கள்: 1972 –ல் 7,24,552. இதைப் பயன்படுத்திக்கொள்ள, டொயோட்டா தங்கள் முயற்சிகளை அமெரிக்காவில் முடுக்கி விட்டிருந்தார்கள். 1967 – ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில், பிரம்மாண்டமான அமெரிக்கச் செயலகம் எழுந்தது. டொயோட்டாவுக்கான தனி டீலர்கள் எண்ணிக்கை, 1967 – ல் 719 ஆக இருந்தது; 1973 – ல் 951 ஆக உயர்ந்தது. அனைத்திலும் ஏகப்பட்ட முதலீடு.
1973 – ல் பெட்ரோல் நெருக்கடியால், டொயோட்டோவின் விற்பனை ஜப்பான், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வருடம் முடிந்தது. உலகெங்குமிருந்த எல்லாக் கார்த் தயாரிப்பாளர்களும் நஷ்டத்தில். ஒரே ஒரு விதிவிலக்கு, டொயோட்டோ தான். அப்படி என்ன மந்திரம் இவர்களிடம் இருக்கிறது என்று எல்லோரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அந்த ரகசியம் - ”டொயோட்டா உற்பத்தி முறை” (Toyota Production System – சுருக்கமாக TPS). TPS மூலமாக டொயோட்டோ விற்பனைக்கு ஏற்றபடி உற்பத்தியைக் குறைத்தார்கள். சேதாரத்
தைக் கட்டுப்படுத்தினார்கள். அதே சமயம், எண்ணெய் நெருக்கடி தற்காலிகப் பிரச்சினை
தான், விரைவில் கருமேகங்கள் விலகும் என்னும் நம்பிக்கை. ஆகவே, தொழிலாளிகளோடு பேசினார்கள்.
பிரச்சனையை விளக்கினார்கள். ”கம்பெனிக்கு இப்போது இரண்டு வழிகள் மட்டுமே. முதல் வழி, ஆயிரக்கணக்கானோரை வேலை நீக்கம் செய்வது. இதை நாங்கள் விரும்பவில்லை. இரண்டாம் வழி, நாம் எல்லோரும்
சம்பளத்தைப் பத்து சதவிகிதம் குறைத்துக் கொள்ளச் சம்மதித்தால், எல்லோரும் வேலையில்
தொடரலாம்.” தொழிலாளிகள் இரண்டாம் வழிக்குச் சம்மதித்தார்கள். அதே சமயம், ”இது மேனேஜ்மென்ட் பிரச்சனை மட்டுமல்ல, நம் டொயோட்டோ குடும்பத்தின் பிரச்சனை” என்னும் உணர்வு. வேறென்ன வேண்டும் ஜெயிப்பதற்கு? டொயோட்டோ நஷ்டமில்லாமல், சொற்ப லாபமாவது பார்த்தது இதனால்தான்.
1974. எண்ணெய் நெருக்கடி முடிந்தது. அமெரிக்கர்கள் பெட்ரோல், டீசல் குடிக்கும் பெரிய கார்களை விரும்பவில்லை. சிறிய கார்களுக்கு மாறத் தொடங்கினார்கள். ஜெனரல் மோட்டார்ஸும், ஃபோர்ட் கம்பெனியும், டொயோட்
டோவின் வெற்றிக்கு, கொரோனா போன்ற அவர்களின் சின்னக் கார்கள் ஒரே காரணம் என்று நினைத்
தார்கள். ஜெனரல் மோட்டார்ஸ் “பின்ட்டோ” (Pinto) என்னும் சிறிய காரையும், ஃபோர்ட், ‘‘வேகா”
(Vega) என்னும் சிறிய காரையும் அறிமுகம் செய்தார்கள். அடுத்த ஐந்து வருடங்கள். இரு
வரும் இமாலயப் பிரயத்தனம் செய்தார்கள். பின்ட்டோவும், வேகாவும் மாபெரும் தோல்வி. இந்தத் தோல்வி, டொயோட்டோவின் வெற்றிக்குப் பாதை போட்டது. அமெரிக்கக் கார்களின் தரத்தில் விரக்தியடைந்த அமெரிக்கர்கள் டொயோட்டோ கார்களுக்கு மாறினார்கள். அமெரிக்காவின் கார்கள் இறக்குமதியில் டொயோட்டோ முதலிடம் பிடித்தது.
ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட் இருவருக்கும் வந்தது ஞானோதயம், டொயோட்டாவின் வெற்றிக்குச் சின்னக் கார்கள் தயாரிப்பு காரணமல்ல, ஒரு அடையாளமே; உண்மையான மந்திரச்சாவி – TPS. டொயோடோவுக்குப் பாராட்டு மழை
கொட்டியது. அவர்களும் TPS பற்றிய விவரங்களை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்கள். பல்வேறு தொழில் துறையினரும் பின்பற்றத் தொடங்கினார்கள். பலன் கண்டார்கள். இறக்குமதி மூலம் அமெரிக்காவில் டொயோட்டா ஆழமாகக் காலூன்றிவிட்டார்கள். அங்கே தொழிற்சாலை தொடங்க முடிவெடுத்தார்கள். ஆனால், கொஞ்சம் தயக்கம். அமெரிக்கக் கார்த் தொழிலாளர்கள் யூனியன்கள் மிகப் பலம் கொண்டவை. இவர்களை, எப்படிச் சமாளிப்பது?
திறந்தது ஒரு ஆச்சரியக் கதவு.
ஜெனரல் மோட்டார்ஸ், TPS – ஐக் கடைப்பிடிக்க விரும்பினார்கள். இருவருக்குமிடையே பேச்சுவார்த்தைகள். இரண்டு கைகள் நான்காயின. 1984. ஜெனரல் மோட்டார்ஸ் – டொயோட்டா கூட்டுறவில், ‘‘நும்மி” (New United Motor Manufacturing Inc., சுருக்கமாக NUMMI) பிறந்தது. தொழிற்சாலையில் வாரம் 6,000 கார்கள் தயாரிப்பு – 3,000 ஜெனரல் மோட்டார்ஸ்
பிராண்டில்; 3,000 டொயொட்டா பிராண்டில். 1973 எண்ணெய் நெருக்கடி உலகப் பொருளா
தாரத்துக்கும், அமெரிக்கக் கார்த் தொழிலுக்கும் வந்த சாபக்கேடுதான். ஆங்கிலத்தில், Blessing in disguise என்னும் வார்த்தைப் பிரயோகம் உண்டு. டொயோட்டாவுக்குச் சாபத்தை வரமாக மாற்றிய சக்தி - TPS.
1988–ல் டொயோட்டா அமெரிக்காவில் சொந்தத் தொழிற்சாலையும் தொடங்கினார்கள். கிடுகிடுவென்று வளர்ச்சி. 2007. முதல் மூன்று மாதங்கள். ஜெனரல் மோட்டர்ஸ் விற்பனை 22,60,000 வாகனங்கள்; டொயோட்டா விற்பனை 22,35,000 வாகனங்கள். 77 வருடங்களாகக் கார்த்தொழிலில் முதல் இடத்தில் இருந்த ஜெனரல் மோட்டார்ஸ் பதவி போச். புதிய சக்கரவர்த்தி – டொயோட்டா.
டொயோட்டா மனம் நிறைய வண்ண வண்ணக் கனவுகள். காற்றிலேறி விண்ணைத் தொடும் ஆசைகள். “விஷன் 2010” (Vision 2010) என்று திட்டம் தீட்டினார்கள். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய பகுதிகளில் இருந்த தொழிற்சாலைகளை விரிவாக்கவும், புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும், முயற்சிகள் ஆரம்பம்.
அடுத்த வருடமே அடித்தது ஒரு சுனாமி. தகர்த்தது கனவுக் கோட்டைகளை. அந்த சுனாமியின் பெயர் “இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல்” (Subprime Mortgage Crisis). இதை எளிமையாக இப்படி விளக்கலாம்.
2005 காலகட்டத்தில், அமெரிக்க வங்கிகள், கடன் வாங்குவோரின் திருப்பிக் கொடுக்கும் திறனுக்கு மிஞ்சிய கடன் கொடுத்தார்கள்.
வாங்கியவர்களும், தங்கள் வருமான எல்லைகளுக்கு மீறிய பெரிய வீடுகள் வாங்கினார்கள், ஏராளமான
குடியிருப்புகளும், வீடுகளும் விரைவாக எங்கும் கட்டப்பட்டன. 2008 – ல் குமிழி வெடித்தது. கடன் வாங்கியவர்களால் கடனையும், வட்டியையும் திருப்பித் தர இயலவில்லை. வங்கிகள் வீடுகளை ஜப்தி செய்தன. இருந்தவை அதிக வீடுகள். வாங்க ஆளில்லை. ஆகவே, வீடுகளை விற்றாலும், கொடுத்த கடனைவிடக் குறைவாக வசூல். இதனால், வங்கிகள் திவாலாகும் நிலை. இந்த நோய் விரைவில் உலகம் முழுக்கப் பரவியது. வங்கிகளே மூச்சுவிடத் திணறினால், பிற பிசினஸ்கள் என்னவாகும்? அனைத்து நாடுகளிலும், பங்குச் சந்தை சரிந்தது. தொழில் வளர்ச்சி வீழ்ந்தது. அமெரிக்கக் கார் உலக ஜாம்பவான்கள் ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட், க்ரைஸ்லர் ஆகியோரின் வாகனங்களை வாங்குவாரில்லை.
அவர்கள் கஜானா காலி. லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழக்கும் சோகம். அமெரிக்க அரசு கடன் தந்து இந்தக் கார்த் தயாரிப்பாளர்களைக் கை தூக்கிவிட்டது. ஆடிக்காற்றில் டொயோட்டா அம்மியும் பறந்தது. 2008 – 2009 நிதியாண்டு. விற்பனை 49 சதவிகிதச் சரிவு. 76 வருட வரலாற்றில் முதன் முதலாக நஷ்டம் – 400 கோடி டாலர்கள்.
டொயோட்டா அதிரடி ஆக் ஷன் எடுத்தார்கள். பெரிய கார்களின் உற்பத்தியை நிறுத்தினார்கள். சீனாவிலும், ரஷ்யாவிலும் மார்க்கெட்டிங்கை வலுப்படுத்தினார்கள். தங்களின் 11 தொழிற்சாலைகளில் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தினார்கள். யாரையும் வேலை நீக்கம் செய்யவில்லை. அவர்களுக்கு TPS – ல்
பயிற்சி தந்தார்கள். உற்பத்தியின் பல்வேறு அம்சங்களில், தொடர் முன்னேற்றத்துக்கான ப்ராஜெக்ட்கள் செய்யச் சொன்னார்கள்.
ஜெனரல் மோட்டார்ஸ், திவால் நிலைமையில் இருந்தபடியால், இருவரின் கூட்டு முயற்சியான “நிம்மி” தொழிற்சாலை மூடப்பட்டது. 4,000 ஊழியர்களின் சம்பளம் மிச்சம். இன்னொரு முக்கிய திருப்பம், சின்னக் கார்களின் விற்பனை ராட்சச வளர்ச்சி. இவற்றால், 2009 ஜூன், ஜூலையில் டொயோட்டோ லாபப் பாதைக்குத் திரும்பிவிட்டது.
1973 – ல் வந்த எண்ணெய் நெருக்கடியும், 2008 – ன் இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கலும், மாறுவேடத்தில் வந்த வரங்களாகிவிட்டன. எல்லாம் நலமே, ஆகஸ்ட் 28, 2009 வரை. இந்த நாள், டொயோட்டா வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.
(புதிய பாதை போடுவோம்!)