

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா? என்ற விஷயம்தான் வங்கிகளில் நமது பணத்தை எடுப்பதற்கு நீண்ட நேரம் நிற்பதைக் கூட மறக்கடிக்கும் விஷயமாக மாறியுள்ளது. போட்டி நடத்தி வீர தீரத்தை இளைஞர்கள் நிரூபிப்பது அல்லது மாடுகளை கொடுமைப்படுத்துவது வேறு பிரச்சினை.
பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையன்று வேண்டாத பொருளென்று துணி, டயர் என அனைத்தையும் போட்டு கொளுத்துவார்களே அதை நினைத்தால்தான் மிகுந்த கவலையாக இருக்கிறது. தீயிட்டு கொளுத்துவதில் என்ன பிரச்சினை இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். அதனால் எழும் புகை, அதன் தொடர் விளைவாக ஏற்படும் உடல் ரீதியான பாதிப்பு, சூழல் பாதிப்பு என பட்டியல் நீள்கிறது.
புகையால் ஏற்படும் பாதிப்புகளால் ஆண்டுக்கு இந்தியாவில் வீணாகும் தொகை ரூ. 5.46 லட்சம் கோடி. நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இது 5.7 சதவீதமாகும். கடந்த மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இத்தகைய அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.புகை பிடித்து உயிரிழப்பவர்களுக்கு இணையாக காற்று மாசுகளால் உயிரிழப்போர் இந்தியாவில் அதிகம்.
நுரையீரல் சார்ந்த நோய்கள், நுரையீரல் புற்று நோய் போன்ற பாதிப்புகளால் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழக்கின்றனர். ஐரோப்பியர்களின் நுரையீரல் செயல்பாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களின் நுரையீரல் 30 சதவீதம் பலவீனமாக இருப்பதற்குக் காரணமும் புகைதான். தலைநகர் டெல்லிதான் இப்பூவுலகின் மிக மோசமாக காற்று மாசடைந்த நகரமாகும்.
கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டிய நிலையும். ஒரு வாரத்துக்குக் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கும் அளவுக்கு டெல்லியின் காற்று மாசு இந்திய அரசியலில் மட்டுமின்றி சர்வதேச அரங்கிலும் விவாதப் பொருளானது.
உலகிலுள்ள மிக மோசமான காற்று மாசு நகரங்களில் 20 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) மற்றொரு அதிர்ச்சி தரும் தகவலைப் பதிவு செய்துள்ளது. குவாலியர், அலாகாபாத் ஆகிய நகரங்கள் இப்பட்டியலில் உள்ள முன்னணி மாசு நகரங்களில் ஒன்றாகும். காற்று மாசால் பாதிக்கப்பட்டு சராசரியாக 5 சதவீதம் முதல் 10 சதவீத பணியாளர்கள் வேலைக்கு வருவதில்லை என்று தொழிலகக் கூட்டமைப்பான அசோசேம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் புகை மாசு அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் வாயுக்கள் இவை அனைத்துக்கும் மேலாக சூளைகளில் பயன்படுத்தப்படும் எருவாட்டி முக்கியக் காரணமாகும். இந்தியாவில் 10 கோடி வீடுகளில் இன்னமும் விறகடுப்புதான் புழக்கத்தில் உள்ளது. ஆண்டுக்கு 14 கோடி டன் மரங்கள் எரிக்கப்படுகின்றன. சராசரியாக நபர் ஒருவர் ஆண்டுக்கு 206 கிலோ மரத்தை எரிக்கப் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
முகமூடிகள் பயன் தருமா?
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்த அதேசமயம், புகையிலிருந்து காக்க உதவும் முகமூடிகளின் விற்பனை அங்கு அமோகமாக அதிகரித்ததுதான் உடனடி பலன். ஆனால் இத்தகைய முகமூடிகள் எந்த வகையிலும் பாதுகாப்பைத் தராது என்ற மருத்துவர்களின் பரிந்துரை செவிடன் காதில் ஊதிய சங்காக ஒலித்தது. இன்னமும் பச்சை நிற சர்ஜிகல் முகமூடியை அணிந்தபடிதான் டெல்லிவாசிகள் திரிகின்றனர்.
சர்வதேச அளவில் காற்று மாசுதான் மிகவும் மோசமான உயிர்க்கொல்லி மாசாகக் கருதப்படுகிறது. உலெகங்கிலும் சிசு மரணங்கள் அதிகரிப்புக்கு காற்று மாசு முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது. உலக அளவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் நாடுகளாக 180 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியா 141-வது இடத்தில் இருப்பதிலிருந்தே இங்கு நிலவும் சுற்றுச் சூழல் உலகிற்கு உணர்த்தப் போதுமானது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கிய காரணிகளில் காற்று மாசு முக்கியமானதாகக் கூறப்படுகிறது. தொழிலாளர் உழைப்பு பாதிக்கப்படுவதால் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு காற்று மாசு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. தொழிலாளர்கள் நோய் வாய்ப்பட்டு விடுமுறை எடுத்ததில் மட்டும் 5,539 கோடி டாலர் இந்திய தொழில் துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் ஜிடிபியில் 0.84 சதவீதமாகும்.
வாகன புகை
வாகனங்கள் வெளியிடும் புகை சூழல் பாதிப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் உள்ளிட்ட தனி நபர் வாகனங்கள் எவ்வித புகைக் கட்டுப்பாட்டு வரம்பிற்குள்ளும் வருவதில்லை. இவற்றைக் கண்காணிக்க போதுமான அளவில் பணியாளர்களும் இல்லை.
இந்தியாவில் உள்ள நகரங்களில் பொதுப்போக்குவரத்தில் முக்கிய அங்கம் வகிப்பது ஆட்டோக்கள்தான். இதை நம்பி பல குடும்பங்கள் வாழ்கின்றன என்றாலும், இவற்றின் பெருக்கமும், இவற்றின் மாசு வெளியிடும் அளவும் அதிகமாகவே இருக்கின்றன.
மாநில அரசுகள் நிர்வகிக்கும் போக்குவரத்து பஸ்களும் காற்றை மாசுபடுத்துவதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. 2005-ம் ஆண்டிலிருந்து பாரத் 4 என்ற புகை கட்டுப்பாட்டு அளவீடு இருந்தாலும், பழைய வாகனங்கள் இன்னமும் புழக்கத்தில் இருந்துகொண்டு சூழலை மாசுபடுத்துகின்றன. 1992-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாகனங்களும் புழக்கத்தில் இருக்கும்போது வாகன மாசை எப்படி கட்டுப்படுத்துவது?
கலப்படம்
வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவை நிர்ணயிப்பதில் அவை பயன்படுத்தும் எரிபொருளும் முக்கிய காரணியாகும். பெரும்பாலான பகுதிகளில் கலப்பட எரிபொருள் விற்கப்படுவதும் காற்று மாசுக்குக் காரணமாகிறது.
உதாரணமாக பெட்ரோல் விலை உயரும்போதெல்லாம், அதனுடன் பயன்படுத்தும் உயவு எண்ணெய் அளவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். பொதுவாக ஒரு லிட்டர் பெட்ரோலுடன் 25 மி.லி. உயவு எண்ணெய் சேர்ப்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றால் சிலர் 50 மி.லி. முதல் 100 மி.லி வரை சேர்க்கின்றனர். இதனால் அதிக கிலோமீட்டர் ஓடும் என்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் பெட்ரோல் அடர்த்தி அதிகரிப்பால் என்ஜினிலிருந்து வெளியேறும் புகையின் அடர்வு அதிகமாகி கரும்புகையாக மேலெழும்புகிறது.
வாகன நெரிசல்
பெரு நகரங்களில் பொது போக்குவரத்தைக் காட்டிலும் தனி நபர் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாகிவிட்டது. நீண்ட நேரம் வாகனங்கள் நிற்பதால் எழும் புகை அப்பிராந்தியத்தை மாசடையச் செய்துவிடுகிறது. பெருநகரங்களில் வாகனங்கள் ஒரு மணி நேரத்தில் 20 கி.மீ தூரத்தைக் கடப்பதே மிகவும் அரிதான விஷயமாகும். வாகன நெரிசலுக்கு புகழ்பெற்ற பெங்களூர் நகரில் 50 சதவீத குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதிலிருந்தே காற்று மாசின் கொடூரம் புலனாகும்.
பசுமை வாயுக்கள்
பசுமை என்றவுடன் சூழல் பாதுகாப்பு என கருத வேண்டாம். ஓஸோன் படலத்தை பாதிக்கும் வாயுக்களான குளோரோ புளோரோ கார்பன் (சிஎப்சி) வாயுக்களே பசுமை வாயுக்கள் எனப்படுகின்றன. 2009-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியா ஆண்டுதோறும் 1.65 கிகா டன் கரியமில வாயுவை வெளியிடுகிறது. சர்வதேச அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனா 6.9 கிகா டன்னும், அமெரிக்கா 5.2 கிகா டன் அளவுக்கு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இந்தியாவில் தனிநபர் கரியமில வாயு வெளியேற்றம் சராசரியாக 1.4 டன்னாக உள்ளது. அமெரிக்காவில் இது 17 டன்னாகவும், சீனாவில் 5.3 டன்னாகவும் உள்ளது.
பொருளாதார இழப்பு நாட்டுக்கு என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள பொறுப்புகளைத் தட்டிக் கழித்தோ அல்லது புரிந்துகொள்ளாமலோ செயல்பட்டால், நமது எதிர்கால சந்ததியினர் நிச்சயம் ஆஸ்துமா நோயாளிகளாக உருவாவது நிச்சயம். நமது செயல்பாடு எந்த அளவுக்கு சுற்றுச் சூழலை பாதிக்கிறது என்பதை உணர்ந்து செயல்படாத வரை சூழல் காப்பு என்பது வெறும் பெயரளவில் மட்டுமே நிற்கும்.