

ஹிந்திப் பட உலகின் `விழா’ நாயகன் அமிதாப்பச்சன்தான் அந்த நிறுவனத்தின் விளம்பர தூதர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு ஆடை வடிவமைத்துத் தந்த நிறுவனத்தை வாங்கிய இந்திய நிறுவனம் அது. இளைஞர்களின் ஏகோபித்த பிராண்ட்டாக விளங்கிய அந்நிறுவனத் தயாரிப்புகள் இன்று இருந்த இடம் தெரியவில்லை.
அது எந்த நிறுவனம் என்கிறீர்களா..? ஆடை உற்பத்தியில் இந்தியாவில் முன்னணியாளராக திகழ்ந்த எஸ் குமார்ஸ் நிறுவனத்துக்குத்தான் இந்த நிலை.
கடன் கொடுத்த வங்கிகளுக்கு, அந்த நிறுவனத் தின் சொத்துகளை விற்று கடனை அளிக்குமாறு மும்பை நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு ஏற்ற விற்பனையாளரையும் தேர்வு செய்ய வலியுறுத்தியுள்ளது.
எஸ் குமார்ஸ் நிறுவனத்துக்கு ஏன் இந்த நிலைமை...?
73 ஆண்டு பழமையான நிறுவனம்
சங்கர்லால் சூரஜ்மல் காலிஸ்வால் மற்றும் சந்திராவதி சங்கர்லால் காலிஸ்வால் என்பவர்களால் 1943-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்நிறுவனம். சுதந்திரத்துக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் 90களில் எழுச்சிமிக்க பிராண்டாக உருவானது.
2000-வது ஆண்டில் எஸ் குமார்ஸ் நேஷன்வைட் லிமிடெட் (எஸ்கேஎன்எல்) என்று பெயர் மாற்றம் பெற்றது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்துக்கு மத்தியப் பிரதேசத்தில் தேவஸ் எனுமிடத்திலும், கர்நாடக மாநிலம் மைசூரிலும் ஆலைகள் உள்ளன.
1998-ம் ஆண்டில் இந்நிறுவனம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ரீட் அண்ட் டெய்லர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை தயாரிக்கவும் இந்தியாவில் விற்பனை செய்யவும் வழிவகுத்தது இந்த ஒப்பந்தம். இதையடுத்தே ரீட் அண்ட் டெய்லர் தயாரிப்புகளின் விளம்பர தூதரானார் அமிதாப்பச்சன்.
2006-ம் ஆண்டில் கார்மிசேல் ஹவுஸ் என்ற பிராண்டு பெயரில் முற்றிலும் லினன் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. இளைஞர்களுக்கென விசேஷமாக நிறுவனம் உருவாக்கிய தயாரிப்புதான் `பெல்மான்ட்’. ஆயத்த ஆடைகளான இவை பெரும் வரவேற்பைப் பெற்றன.
2008-ம் ஆண்டில் இத்தாலியைச் சேர்ந்த லெகுய்னோ என்ற பிராண்டை கையகப்படுத்தியது இந்நிறுவனம். உயர் ரக காட்டன் பேண்ட், ஷர்ட் ஆகிய தயாரிப்பில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முன்னணி நிறுவனமாக இது திகழ்ந்தது. இந்நிறுவனத் தயாரிப்புகளை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியது எஸ்குமார்ஸ்.
இதையடுத்து சர்வதேச அளவில் பிரபலமான டோனா காரண் எனும் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது. ஆனால் இது 2012-ல் முறிந்துபோனது.
2009-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பிரபலங்களுக்கு ஆடை வடிவமைத்துத் தந்த ஹார்ட்மார்க்ஸ் கார்ப்பரேஷனைக் கையகப்படுத்தியது எஸ்குமார்ஸ்.
இதுவரை எல்லாமே நிறுவனத்துக்கு ஏறுமுகம்தான். ``ஃபேப்ரிக் ஆப் இந்தியா’’ என்றே இந்நிறுவனம் அழைக்கப்பட்டது. ஆனால் வீழ்ச்சி எப்படித் தொடங்கியது, மூடும் நிலைக்கு நிறுவனத்தைத் தள்ளியது எது?
2012-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.470 கோடி. ஆனால் இன்றோ இந்நிறுவனத்தின் கடன் சுமை ரூ.4,000 கோடிக்கு மேல்.
2012-ம் ஆண்டில் ரீட் அண்ட் டெய்லர் பிராண்ட் மூலம் பொதுப்பங்கு வெளியீடு வழியாக ரூ.1,000 கோடி திரட்ட திட்டமிட்டது. ஆனால் அது எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. பங்குச் சந்தை சூழல் சரியில்லாதபோது பொதுப் பங்கு வெளியிட்டது நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
தவறான நிர்வாகத் திறமையால் மிகப் பெரிய நிறுவனம்கூட அழிந்து போகும் என்பதற்கு எஸ் குமார்ஸின் வீழ்ச்சியே சிறந்த உதாரணம் என்கின்றனர் இத்துறையைச் சேர்ந்தவர்கள்.
பெரிய, பெரிய விரிவாக்கத் திட்டங்களை மேற்கொண்ட நிறுவனம், அதற்கேற்ப முதலீடு வந்துகுவியும் என எதிர்பார்த்தது. ஆனால் முதலீடுகள் வரவில்லை. கடன் சுமையோடு வட்டிச்சுமை நிறுவனத்தின் கழுத்தை நெறித்துவிடும் என்பது இந்நிறுவன விஷயத்தில் நிரூபணமாகிவிட்டது என்கின்றனர்.
எஸ்கேஎன்எல் நிறுவனத்தின் முதலீட்டாளர்களான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழும நிறுவனங்களான ஆஞ்சநேயா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட், நெஸ்ஸேஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சன்சார் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வசம் இருந்த பங்குகளை விற்கவும், பெரிய நிறுவனங்களிடம் அடகு வைக்கவும் தொடங்கின.
இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் நிறுவனம் மீதான நம்பிக்கை சரிந்தது.
நிறுவனத்தின் சந்தை மதிப்பு 73 சதவீதம் சரிந்தது. ஓராண்டுக்கு முன் ரூ.942 கோடியாக இருந்தது ரூ.255 கோடியாக சரிந்தது.
இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்த நிதி நிறுவனங்கள் தங்கள் வசமிருந்த பங்குகளை சந்தையில் விற்பனை செய்தன.
நிறுவனத்தின் செயல்பாடு, இலக்கு ஆகியவற்றில் தெளிவு கிடையாது. நிறுவனத்தை சரிவர நிர்வகிக்கவில்லை. இதனால் செயல்பாடுகள் குறைந்து வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாக நிறுவனத்தை ஆய்வு செய்த டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரீட் அண்ட் டெய்லர் மற்றும் பெல்மான்ட் விற்பனையகங்களை பிரத்யேகமாக அமைத்தது. இதற்காக அதிக வாடகை செலவிட்டது. இது செயல்பாட்டு லாபத்தை கடுமையாக பாதித்துவிட்டதாக நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
2012-ம் ஆண்டில் நிறுவன பதிவாளர் இந்நிறுவனம் நிர்வாக விதிமுறைகளை மீறியது தொடர்பாக விசாரணை நடத்தத் தொடங்கினார். இதையடுத்து ரூ.26.80 என்ற விலையிலிருந்த பங்கு விலை ரூ. 19.70 ஆக சரிந்தது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் இந்நிறுவனம் கையகப்படுத்தி நடத்தி வந்த ஹெச்எம்எக்ஸ் அக்யுசேஷன் கார்ப்பரேஷன் நிறுவனம் அமெரிக்க திவால் சட்டத்தின்படி மறுசீரமைப்பு கோரியது. இந்த நிறுவனத்தின் கீழ் பிரபல பிராண்டுகளான ஹார்ட் ஷேஃப்னர் மார்க்ஸ, ஹிக்கி பிரீமென் ஆகியன கடும் பாதிப்புக்குள்ளாயின. இதனால் வட அமெரிக்காவில் விரிவாக்கம் செய்யவிருந்த முயற்சி நின்றுபோனது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்தவர்கள் அடுத்தடுத்து வெளியேறியதும் நல்ல அறிகுறியாகப்படவில்லை. அலோக் பானர்ஜி, தருண் ஜோஷி, ஆஷிஷ் அமின், ஜனக் தவே, மணிஷ் மல்லிக் ஆகியோர் வெளியேற்றம் பெரும் பின்னடவை ஏற்படுத்திவிட்டது.
மூன்று ஆண்டுகளில் கடன் சுமை இரு மடங்காக உயர்ந்துவிட்டது.
நிறுவனத்தை மூடிவிட்டு சொத்துகளை விற்று கடன் தொகையை திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடன் கொடுத்த வங்கிகள் நீதிமன்றத்தை நாடின.
பல மனுக்கள் வந்தபோதிலும் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஐசிஐசிஐ வங்கி, ஏஎன்இஸட் வங்கி, ஐஎல் அண்ட் எப்எஸ் பைனான்சியல் சர்வீசஸஸ் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றது.
நிறுவனர் நிதின் காலிஸ்வால் நாட்டைவிட்டுச் செல்லக் கூடாது என்பதற்காக பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
கடன் தொகையை அடைத்துவிட்டு, புதிதாகக் கடனை பெற்று நிறுவனத்தை நடத்த முயன்றபோது, நிறுவனத் தலைவர் நிதின் காலிஸ்வாலுக்கு இயக்குநர் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மும்பையைச் சேர்ந்த பங்குச் சந்தை தரகர் பாரத் ஜெயந்திலால் படேல் என்பவர், நிறுவனத்தை தவறாக வழிநடத்தும் காலிஸ்வால் தலைவராகத் தொடரக் கூடாது என்றார்.
தற்போது நிறுவன முதலீட்டாளர்கள் வசம் 96 சதவீத பங்குகள் உள்ளன. தலைவர் நிதின் காலிஸ்வால் குடும்பத்தினர் வசம் 3.59 சதவீத பங்குகளே உள்ளன.
நிறுவன மறு சீரமைப்பு திட்டத்தின்படி (பிஐஎப்ஆர்) மீண்டும் செயல்பட வேண்டும் என்பதே முதலீட்டாளர்களின் விருப்பம். ஆனால் …
2012-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.470 கோடி. ஆனால் இன்றோ இந்நிறுவனத்தின் கடன் சுமை ரூ.4,000 கோடிக்கு மேல்.