எண்ணெய் கசிவு தரும் பாடம்...

எண்ணெய் கசிவு தரும் பாடம்...
Updated on
2 min read

சென்னை மெரீனா, சமீப காலமாக சர்வதேச அளவுக்கு கவனத்தை ஈர்த்த பகுதி. சமூக வலைதளத்தில் ஒன்றிணைந்த இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டம், அதையடுத்து நடந்த வன்முறை, பிறகு அப்பகுதியில் தடை உத்தரவு என தொடர்ந்து செய்திகளில் இடம் பெற்று வருகிறது.

இப்போது அங்கு உருவாகியுள்ள மற்றொரு பூதாகரமான பிரச்சினை போதிய கவனமின்றி அன்றாட செய்திகளைப் போல பதிவாகி வருகிறது. கடந்த வாரம் சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு இப்பிராந்தியம் முழுக்க கச்சா எண்ணெய் பரப்பாக மாற்றியுள்ளது.

எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தால் எண்ணெய் கசிந்துவிட்டது என்று அனைவரும் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதன் விபரீதத்தை பலரும் உணரவில்லை என்றே தோன்றுகிறது. சுமார் 70 டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் கடலில் கலந்துள்ள அளவு அதைவிட பல மடங்கு என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஒரு டன் கச்சா எண்ணெய்யை 7 பீப்பாய்களில் நிரப்பலாம். ஒரு பீப்பாய் 158 லிட்டர் கொள்ளளவு கொண்டது. 70 டன் கலந்துள்ளது என்றாலே ஏறக்குறைய 490 பீப்பாய் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. ஒரு பீப்பாய் 56 டாலர். கடலில் சிந்திய கச்சா எண்ணெய்யின் மதிப்பு 27,440 டாலர் (சுமார் ரூ. 18 லட்சம்).

தெற்கு கடல் பகுதியில் 32 கி.மீ. தூரத்துக்கு வெறும் கருமையான படிவம்தான் காட்சிதருகிறது. பாலவாக்கம் கடற்கரைப் பகுதி வரை பரவியுள்ள இந்த எண்ணெய் படலம் மேலும் பரவும் என தெரிகிறது. இப்போது பரவியுள்ள எண்ணெய் படலம் சூரிய வெப்பதில் நாளொன்றுக்கு 7 டன் வீதம் ஆவியாகும் என்றும் ஒவ்வொரு நாளும் 10 டன் அளவுக்கு அடுத்தடுத்த பகுதிக்கு கடலில் ஒருவாரத்துக்கு பரவும் என்றும் மத்திய சுற்றுச் சூழல் அமைப்பு கணித்துள்ளது.

தினசரி 750 பேர் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 65 டன் எண்ணெய் கடலிலிருந்து உறிஞ்சப்பட்டுள்ளது. இது தவிர 54 டன் எண்ணெய் கலந்த சகதி அகற்றப்பட்டுள்ளது. மேலும் எர்ணாவூர் பகுதியிலிருந்து கூடுதலாக 22 டன் எண்ணெய் சகதி அகற்றப்பட்டுள்ளன. இதுவரையில் 600 டன் சகதி அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எண்ணெய் விளைவு

வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தி மகிழ்ச்சியாக பயணிக்க உதவும் எண்ணெய் கடலில் பரவினால் அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்பதை பலரும் உணர்வதில்லை. எண்ணெய் படலம் மேலிருக்கும்போது சூரிய கதிர்கள் கடல் நீரினுள் புகாது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துபோகும். இப்போதே பல கடல் ஆமைகள் இறந்து கரையில் ஒதுங்குகின்றன. கடல் பறவைகளின் இறக்கைகளில் எண்ணெய் படிந்து அவை பறக்கமுடியாமல் உயிரிழந்துள்ளன.

மீன்கள் பல இறந்து ஒதுங்குகின்றன. இதனால் காசிமேடு பகுதியில் முற்றிலுமாக மீன்பிடி தொழில் முடங்கியுள்ளது. இந்த விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து மக்கள் மீன் வாங்குவதையே தவிர்க்கின்றனர். இதனால் மீன் வியாபாரம் முற்றிலுமாக முடங்கிப்போனது. விபத்தில் வெளியான கச்சா எண்ணெய்யின் மதிப்பைக் காட்டிலும் பல மடங்கு அதை அப்புறப்படுத்துவதற்கு செலவிடப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடைந்தாலும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் முற்றிலுமாக நீங்க ஓராண்டாவது ஆகும் என்று சூழலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் 2013-ம் ஆண்டு 1,000 லிட்டர் எண்ணெய் மும்பை கடலில் கசிந்தது. அதற்கு முன் 2010-ம் ஆண்டு மும்பை பகுதியில் இதே போல இரண்டு கப்பல்கள் மோதியதில் 800 டன் எண்ணெய் கடலில் கலந்தது. கச்சா எண்ணெய் அவசியமாகிவிட்ட நிலையில் அதைக் கையாள்வது மற்றும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட வேண்டும்.

சென்னை கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பைக் கட்டுப் படுத்துவதில் போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாததன் காரணமாக அதை விரைவாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது கண்கூடாக தெரிந்தது. கடலிலிருந்து சேகரிக்கப்படும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்க முடி யாது என்கிற நிலையில், இதையும் எண்ணெய் சகதியையும் அதன்பிறகு எப்படி அப்புறப்படுத்த உள்ளனர் என்பதும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

இப்பொழுதுகூட எண்ணெய்யை வாளியில் பிடித்துதான் கன்டெய் னர்களில் நிரப்பி வருகின்றனர். இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இது போன்ற மிகப் பெரிய விபத்துகள் நிகழும்போது அதைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்கள் இல்லையெனில் அதற்கு நாம் கொடுக்கும் விலை அதிகமாகவே இருக்கும் என்பதையே சென்னை நிகழ்வு நமக்கு கற்றுத் தரும் பாடமாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in