

வங்கிகளுக்கு மிகப் பெரும் நெருக்கடியாக இருப்பது அவற்றின் வாராக்கடன்தான். உருக்கு, மின்துறை, கட்டமைப்பு, சர்க்கரை ஆலைகள் என பெரும் நிறுவனங்கள் கடன் பெற்றுவிட்டு அவற்றை செலுத்தாமல் உள்ளன.
இது தவிர விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் வங்கிகளில் கடன் பெற்று நாட்டை விட்டு தப்பியோடி விட்டனர். இவர்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளும் அவற்றை திரும்பப் பெற முடியாமல் திணறுகின்றன.வாராக் கடன் வசூலை முடுக்கிவிட அரசு கொண்டு வந்ததுதான் திவால் மசோதா சட்டம்.
ஐபிசி எனப்படும் இந்த சட்டத்தின்படி திவால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதை செயல்படுத்த வேண்டிய ரிசர்வ் வங்கி இதற்கான உத்தரவுகளை தனது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள வங்கிகளுக்கு பிறப்பித்தது.
ஆனால் இவ்விதம் திவால் மசோதா நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும், இது குறித்து 2018 பிப்ரவரியில் ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கை சட்ட விரோதமானது என்றும் அதை செயல்படுத்த தடை விதிப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்துவிட்டது.
கடனை திரும்ப செலுத்த போதிய நிதி ஆதாரம் இருந்தும் அதை வேண்டுமென்றே செலுத்தாத நபர்கள் ஒருபுறம், நாட்டை விட்டு ஓடிப்போன தொழிலதிபர்கள் மறுபுறம் என வங்கித்துறை விழிபிதுங்கியிருக்கும் நிலையில், வங்கிகளுக்கு வாராக்கடனை திரும்பப் பெறுவதற்கு மிகச் சிறந்த வாய்ப்பாக கருதப்பட்ட திவால் மசோதா நடைமுறையைச் செயல்படுத்த விதிக்கப்பட்ட தடை வாராக் கடன் வசூலில் மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.
திவால் சட்டப்படி, நிறுவனங்கள் பெற்ற கடன் தொகையை திரும்ப செலுத்துவதில் ஒரு நாள் தாமதமானாலும் அவை வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்படும். அடுத்து நிறுவனங்களை சீரமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். இதற்கு 6 மாத கால அவகாசம் அளிக்கப்படும். 180 நாள்களுக்குப் பிறகு அவற்றின் சொத்துகளை முடக்கி ஏலம் விடுவது போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். நாடு முழுவதும் திவால் நடைமுறை சட்டம் மேற்கொள்ளப்பட்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 1,484 ஆகும்.
இவற்றில் உற்பத்தித் துறை 612, ரியல் எஸ்டேட் 235, கட்டுமானம் 153, மொத்த, சில்லரை வர்த்தகம் 151, ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட்கள் 41, மின்துறை 38, போக்குவரத்து 39 என அனைத்து துறை நிறுவனங்களும் வாராக் கடன் பட்டியலில் உள்ளன. இவற்றில் ரூ. 2,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்ற நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கையை உடனடியாக தொடங்கலாம் என ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கைக்குத்
தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரூ. 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கை 70. இவை வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய கடன் தொகை ரூ. 4 லட்சம் கோடி. இதில் மின்துறை நிறுவனங்கள் பங்கு மட்டுமே ரூ.2 லட்சம் கோடியாகும்.
மின்துறை நிறுவனங்களின் நிலுவைக்கு அரசியல் காரணங்களும் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நிறுவனங்களுக்கு தற்காலிகமாக நிவாரணம் அளிப்பதாக இருக்கலாம். நிறுவனத்தை சீரமைத்துக் கொள்ள, திவால் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க இது உதவலாம். ஆனால் இதற்கு மாற்றாக விரைவிலேயே புதிய விதிமுறைகளை ஆர்பிஐ கொண்டு வரும் என கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளது வாராக் கடன் வசூல் நடவடிக்கையில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கும்.
நீதிமன்ற தீர்ப்புகள் பல சமயங்களில் வரவேற்புக்குரியதாகவே அமையும். ஆனால் நிதி சார்ந்த சீரமைப்புக்காக கொண்டு வரப்பட்ட திவால் நடைமுறையை செயல்படுத்துவதில் மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது துரதிருஷ்டமே.