

மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் டிவிடெண்டின் அளவு கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. 2024-25 நிதியாண்டுக்கான டிவிடெண்டாக ரூ.2.69 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் வரலாற்றில் மத்திய அரசுக்கு வழங்கப்படும் அதிகபட்ச டிவிடெண்ட் தொகையாகும். 2023-24 நிதியாண்டில் கொடுக்கப்பட்ட ரூ.2.1 லட்சம் கோடியை விட 27.4 % அதிகம்.
அரசின் வங்கியாக செயல்படும் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வருடமும் ஈட்டுகின்ற வருமானத்திலிருந்து நடைமுறைச் செலவுகள் மற்றும் எதிர்பாராத செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளை கழித்தது போக மீதி உள்ள உபரி வருமானத்தை மத்திய அரசுக்கு டிவிடெண்டாக கொடுக்க வேண்டும். 1934 ரிசர்வ் வங்கி சட்டம் 47-வது பிரிவு, இந்த உபரி வருமான மாற்றத்துக்கு வழிவகை செய்கிறது. மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி அல்லாத வருமானத்தில் இந்த டிவிடெண்ட் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது.