

அமெரிக்காவைச் சேர்ந்த பங்கு வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் இந்திய பங்குச் சந்தைகளில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக புகார் எழுந்துள்ளது. டெரிவேட்டிவ்ஸ் பகுதியில், குறிப்பாக பேங்க் நிப்டி மற்றும் நிப்டி குறியீட்டில் (இண்டெக்ஸ்) மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்துக்கு இந்திய பங்குச் சந்தை வாரியம் (செபி) தடை விதித்துள்ளது.
முக்கிய குற்றச்சாட்டுகள்: குறியீட்டு விலையை ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் செயற்கையாக மாற்றும் வகையில் பெரிய அளவில் பேங்க் நிப்டி கன்ஸ்டிடியூன்ட் பங்கை ரொக்கம் மற்றும் பியூச்சர்ஸ் சந்தைகளில் வாங்கி, அதே நேரத்தில் இண்டெக்ஸ் ஆப்ஷனில் பெரிய ஷாட் பொசிஷன் எடுத்து லாபம் பார்த்தது. டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் மூலம் இந்நிறுவனத்துக்கு ரூ.4,843 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக லாபம் கிடைத்ததாக செபி கூறுகிறது. இந்த பணம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.