

தமிழ்நாட்டில் ஸ்டார்ட்-அப் வளர்ச்சி எப்படி உள்ளது? - ‘ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு’ திட்டம், தமிழ்நாட்டில் புதிய தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய திட்டமாகும். இதன்மூலம் நிதியுதவி, வழிகாட்டுதல் மற்றும் தொடக்க கால பராமரிப்பு தொடர்பாக ஆதரவு வழங்கப்படுகிறது. 2022-ம் ஆண்டுக்கான ஸ்டார்ட்-அப் இந்தியா தரவரிசையில் தமிழ்நாடு ‘சிறந்த செயல்பாட்டாளர்’ என அங்கீகாரம் பெற்றது.
சென்னையின் ‘ஸ்டார்ட்-அப்’ எகோ சிஸ்டம் அமைப்பு, ஆசியா பகுதியில் 18-வது இடத்தில் உள்ளது.இந்தியாவில் சுமார் 1,42,450-க்கும் மேற்பட்ட ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் உள்ளன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 9,450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாடு அதன் ஸ்டார்ட் அப் சூழலின் வளர்ச்சியில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது. இது தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் என்ன? - ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக முதல் 3 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. இது முதன்மை முதலீட்டை அதிகரிக்க உதவுகிறது. மேலும், ‘STARTUPTN’ தொடக்க நிதி உதவியாக ‘TANFUND’, ‘TANSEED’ போன்ற திட்டங்களை வழங்குகிறது. இதன் மூலம் தொடக்க நிதி மற்றும் வளர்ச்சி நிதி பெற முடிகிறது. தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடு திரட்ட ‘AngelsTN’ மற்றும் ‘ஸ்டார்ட்-அப் தமிழா’ போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பதிவு மற்றும் ஒழுங்கமைப்பு முறைகளை அரசு எளிதாக்கி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான செயல்முறைகளை சுலபமாக்கியுள்ளது. பிரத்யேக சொத்துகளுக்கான (IPR) சலுகை மற்றும் காப்புரிமை பெறுவதற்கு ஆதரவு வழங்கப்படுகிறது. இந்த அனைத்து உதவிகளும் திறன் மேம்பாட்டு பயிற்சி, இன்குபேட்டர் வழிகாட்டுதலுடன் இணைந்து வளர்ச்சிக்கு உதவுகின்றன. மேலும், தேசிய ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளரமுறை (NSWS) மூலம், அனைத்து அரசு அனுமதிகளையும் ஒரே இடத்தில் எளிதாக பெற முடிகிறது.
‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களை நடத்துபவர்கள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினைகள் என்ன? அவற்றுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் தீர்வுகள் என்ன? - ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, வருமானம் ஈட்டுவது மற்றும் நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் சிக்கலான விதிமுறைகள், திறமையான பணியாளர்களுக்கு தட்டுப்பாடு மற்றும் சந்தையில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக, அரசு ‘Seed funding’ போன்ற தொடக்க நிதி உதவியை வழங்குகிறது.
மேலும், TNIFMC மூலமாக நிதி திரட்டுவதில் உதவி வழங்கப்படுகிறது. பதிவு மற்றும் அனுமதி முறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை விரைவாகவும் எளிதாகவும் நிறைவேற்ற முடிகிறது. திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் ஆரம்ப பராமரிப்பு வழிகாட்டுதல் மூலம் நிறுவனங்களின் திறனை அரசு மேம்படுத்துகிறது.
‘எந்த துறையின் கீழ் ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் அதிகம் தொடங்கப்படுகின்றன? - பல்வேறு துறைகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளன. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இந்த துறை விரிவடையும் நிலையில், புதிய தொழில்நுட்பங்களில் ஆர்வம் கொண்ட பலர் தொழில் தொடங்க முன்வருகின்றனர். ஆரோக்கிய தொழில்நுட்பம், தொலை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துறைகளிலும் நிறுவனங்கள் அதிகம் தொடங்கப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக, உணவு மற்றும் பானம் (Food and Beverages), கல்வி தொழில்நுட்பம் (ஆன்லைன் கல்வி) ஆகிய துறைகளில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. வேளாண்மை தொழில்நுட்ப துறையிலும் புதுமையான தீர்வுகளுடன் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன.
புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு உங்கள் ஆலோசனை என்ன? - முதலில் சந்தை தேவையை கண்டறிந்து அதை ஆராய்ந்து உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒரு வணிகத் திட்டத்தை உருவாக்க வெண்டும். அதில் நிதி, இலக்குகள், முன்னேற்றம் ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும். நிறுவனத்தை பதிவு செய்து, பணியாளர்களை தேர்வு செய்து, ஆராய்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் அடுத்த கட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மேலும், நிதி ஆதரவு மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் பணிகளை தொடர வேண்டும்.
தமிழ்நாட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு உதவும் மண்டல அலுவலகங்கள் எங்கு உள்ளன? - தமிழ்நாட்டில் பல நகரங்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான முக்கிய மையங்களாக விளங்குகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருநெல்வேலி. ஒசூர், ஈரோடு ஆகிய நகரங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. அங்கு நிதி உதவி, வழிகாட்டுதல் மற்றும் மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், ஆன்லைன் வழியிலும் நிறுவனங்களை பதிவு செய்து, தேவையான உதவிகளைப் பெற முடியும். இணையதளங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகள் மூலம், புதிய வணிகங்களுக்கான பதிவு, நிதி உதவி, ஆலோசனை மற்றும் துறை சார்ந்த பயிற்சிகளை எளிதாக பெற முடியும்.
பெண்களுக்கு வழங்கப்படும் சிறப்பு திட்டங்கள் என்ன? - இந்தியாவில் பெண் தொழில்முனைவோருக்கு பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மஹிளா சம்ருதி யோஜனா, பெண்கள் தொழில்முனைவோர் தளம் (WEP), முத்ரா யோஜனா, ஸ்டாண்ட்-அப் இந்தியா, மஹிளா சக்தி கேந்திரா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா, டிஜிட்டல் ஸ்டார்ட்-அப் திட்டங்கள் ஆகிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை வணிக நடைமுறையில் தொடங்கி, தொழிலை வளர்க்கவும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்டவற்றுக்கும் உதவுகின்றன.
சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு நிதியுதவி வழங்கும் சிறப்பு திட்டங்கள் என்ன? - சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு வணிகத்தை தொடங்க உதவும் வகையில் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டத்தை (AABCS) தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் திட்ட செலவினத்தில் 35% அளவுக்கு, அதிகபட்சம் ரூ.1.5 கோடி வரை நிதி வழங்கப்படுகிறது. இந்த தொகையை நிலம், தொழிற்சாலை, இயந்திரங்கள், பரிசோதனை உபகரணங்கள், கணினி சாதனங்கள் ஆகியவற்றை வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
- rajagopal.l@hindutamil.co.in