

திருவிழா பூண்டிருக்கும் இடத்தில் கொண்டாட்டம் நிறைந்திருக்கும். அன்றைய சங்ககாலம் தொட்டு திருவிழா மானுடர்களை கொண்டாட்டத்தில் தழைக்க வைத்து வருகிறது. இந்திரவிழா, தை நீராட்டு, நீர் விழா, உள்ளி விழா, பங்குனி விழா, பூந்தொடை விழா, கோடியர் விழா, கார்த்திகை விழா எனப் பல்வேறு வகையான விழாக்கள் சங்க காலத்தில் கொண்டாடப்பட்டதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
இப்படி காலம் தொட்டு கொண்டாடி வரும் விழாக்களை வேளாண் சுற்றுலாவோடு ஒன்றிணைக்கும் பட்சத்தில் திருவிழாக்கள் அதன் தன்மை மாறாது நிலைத்து நிற்கும். குடும்ப விழாக் கொண்டாட்டத்தை எடுத்துக்கொண்டால் திருமணம், காதுகுத்து என்று பலவகையும் இருக்கும். இவற்றை வேளாண் சுற்றுலா இருக்கும் பண்ணைகளில் கொண்டாடலாம். ஆம், வளர்ந்த நாடான அமெரிக்காவில் 2022-ம் ஆண்டில் மட்டும் எண்ணிக்கையில் 24 லட்சம் திருமணங்கள் நடந்துள்ளன.
அதில் கிட்டத்தட்ட 10.5 லட்சம் திருமணங்கள் வேளாண் சுற்றுலா பண்ணைகளில் தான் அரங்கேறியுள்ளன. அதாவது 2002-ம் ஆண்டில் வெறும் இரண்டு சதவீதம் அளவுக்கு மட்டுமே வேளாண் சுற்றுலா பண்ணைகளில் நடந்த திருமணங்கள் 2022-ம் ஆண்டில் இருபது சதவீதம் அளவுக்கு வளர்ந்துள்ளது. மேலும் பெரும்பாலான அமெரிக்கர்களிடையே வெளிப்புற இயற்கை சூழ்ந்த இடங்களை கொண்டிருக்கும் வேளாண் சுற்றுலா பண்ணைகளில் திருமணம் நடத்தும் பாங்கு வளர்ந்து வருவதாக ஆய்வு கூறுகிறது.
அதற்கு பசுமை படர்ந்த ரம்மியமான சூழல், புகைப்படம் எடுக்கத்தகுந்த பல வகையான புற வெளிகள், பழங்காலத்துத்தன்மை கொண்ட வடிவமைப்புகள் போன்றவை முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. தற்போது நம் இந்தியாவிலும் திரைப்பிரபலங்கள் பசுமை சூழ்ந்த பண்ணைகளில் திருமணம் நடத்த ஆர்வம் கொள்கின்றனர். சில தொழில்முனைவோர் அதனை தொழிலாக எடுத்து முன்னணி நகரங்களில் நடத்தி வருகின்றனர்.
குடும்ப விழாவுக்கு அடுத்து மக்களின் பொது விழாவான பொங்கல், கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் போன்ற விழாக்களையும் வேளாண் சுற்றுலா பண்ணைகளில் ஒருங்கிணைக்கலாம். உதாரணத்துக்கு பொங்கல் விழாவை எடுத்துக்கொண்டால் பொங்கல் வைப்பது, அதனை ஒட்டி விருந்து வைப்பது மற்றும் இடத்துக்கு தகுந்தவாறு நடைபெறும் திருவிழாக்களான மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்றவற்றோடு பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சார நடனங்களையும் இணைத்து சுற்றுலாவாசிகளுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தரலாம்.
அவை கிராமிய கலைஞர்களுக்கும் நல்லதொரு வேலைவாய்ப்பாக அமையும். மேலும் அழிந்து வரும் நிலையில் இருக்கும் கிராமிய கலைகளை மேம்படுத்துவதாகவும் அவை அமையும். விழாக்கள் மட்டுமின்றி முன்னணி நிறுவனங்களும் அவர்களின் தொழில் சார்ந்த கூட்டங்களையும், நிகழ்வுகளையும் வேளாண் சுற்றுலா பண்ணைகளில் நடத்த முன்வரலாம். அவ்வளவு ஏன் காலத்துக்கும் நினைவுகளை சுமக்கும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு தொடங்கி இலக்கிய விழாக்கள் வரை நடத்த சிறந்த தேர்வாக வேளாண் சுற்றுலா பண்ணைகள் நிச்சயம் இருக்கும்.
- saraths1995@gmail.com