வணிகவழி வேளாண் சுற்றுலா 05: மாணவர்களுக்கு வேளாண் கல்வி

வணிகவழி வேளாண் சுற்றுலா 05: மாணவர்களுக்கு வேளாண் கல்வி
Updated on
2 min read

நெல் இன்னமும் மரத்தில்தான் விளைகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கும் சில மாணவர்களிடத்தில் வேளாண் கல்வியை, அதன் அனுபவத்தை நாற்று நடுவதிலிருந்து வளர்ந்த நெல்மணிகளுடன் உறவாடுவது வரை எடுத்துச்செல்ல ஆகச்சிறந்த வழி வேளாண் சுற்றுலாதான். பள்ளிமற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண்மை சார்ந்த செய்முறை வகுப்புகளை அனுபவப் பாடங்களாக கற்றுக்கொடுக்க வேளாண் சுற்றுலா வழிவகுக்கும்.

வேளாண் சுற்றுலாவில் இருக்கும் சுவாரசியமே எதனையும் ரசனையுடன் கண்டுணரும் தருணம்தான். என்னதான் ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களை உட்கார வைத்து மரம், செடி, கொடி வகைகள் பற்றியும் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் பற்றியும் உரக்கக் கூறி பாடம் நடத்தினாலும், அவர்களை வேளாண் பண்ணைக்கு அழைத்துச் சென்று கைப்பட பழங்களை ரசித்து அறுவடை செய்ய வைத்து ருசிக்கச் சொல்லும்போது அதனின் தனிச்சுவை மூலம் அவர்கள் கற்றுக்கொள்ளும் பாடம் அலாதியானது.

இன்றும் சில இடங்களில் நகரத்தில் வசிக்கும் பிள்ளைகளின் கால்தடம் வயல் மண்ணில் படாமலேயே இருந்து வருகிறது. அதற்கு நேரமின்மை, அவர்களின் கட்டமைக்கப்பட்ட வாழ்வு மற்றும் அதனை சார்ந்த பணி என எத்தனையோ காரணங்கள் உள்ளன. இருந்தாலும் வளரும் பிள்ளைகளை மண்ணின் வாசத்தை நுகரச் செய்யுங்கள், செம்மண் புழுதியில் விளையாடச் சொல்லுங்கள், வயக்காட்டு சேற்றில் கால்வைக்கச் சொல்லுங்கள், வளர்ந்து நிற்கும் தோட்டத்து பயிர்களை நலம் விசாரிக்கச் சொல்லுங்கள், பூவில் தேன் எடுக்கும் தேனீக்களை அடையாளம் காட்டுங்கள்.

பனைமரத்தின் ஓலை நுனியில் கலைநயத்துடன் கூடு கட்டும் தூக்கணாங் குருவியை காட்டுங்கள், மரங்களில் காய்த்துக் குலுங்கும் கனிகளை எட்டிப் பிடித்து பறிக்கச் சொல்லுங்கள், வாய்க்கால் நீரில் முகம் கழுவச் சொல்லுங்கள். மண்வெட்டியில் மண்ணெடுக்க வையுங்கள், துள்ளித்திரியும் ஆட்டுக்குட்டியுடன் கொஞ்சி விளையாடச் சொல்லுங்கள், பண்ணைக்குட்டையில் ஆர்ப்பரித்து நீந்திச் செல்லும் பறவையை காட்டுங்கள், மாட்டுவண்டியில் சவாரி போகச் சொல்லுங்கள்.

இவைகளோடு பயிரிடும் விவசாயிகளின் அனுபவங்களையும் கேட்டுவரச் சொல்லுங்கள். இவையனைத்தையும் பெற்றோர்களால் கூட்டிச்சென்று சொல்லித்தர முடியாவிட்டாலும், வேளாண் சுற்றுலா மூலம் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த முடியும். இது பயிர்த்தொழில் பழகுவதின் விருப்பத்தை எதிர்வரும் மாணவ தலைமுறையினர்களிடத்தில் எடுத்துச் செல்லும்.

மேலும் தற்போதைய நிலையில் வேளாண் சுற்றுலா மூலம் வேளாண் கல்வியைத் தருவது முக்கியத்துவம் வாய்ந்தது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் தன்னுடைய தட்டில் இடப்படும் உணவு எப்படி உற்பத்தி ஆகிறது, அதனை யார் உற்பத்தி செய்கிறார்கள் என்பதையெல்லாம் வெறும் புத்தகப் பாடத்துடன் நின்றுவிடாமல், அதனை செய்முறை பாடத்துடன் அனுபவ விவசாயிகளைக் கொண்டு மாணவர்களிடத்தில் கலந்துரையாடச் செய்யலாம்.

அந்தக் கலந்துரையாடல் விவசாயிகளை வெறும் உற்பத்திக் கேந்திரம் என்ற கோணத்தில் மட்டுமே பார்க்கக் கூடாது, ஒடுங்கிப்போன முகமும் வாடி நிற்கும் தோற்றமும் கொண்டவர்கள் விவசாயிகள் என்கிற எண்ணங்களை உடைக்க வேண்டும். விவசாயி என்பவர் வெளியுலகைக் கற்றுத்தெரிந்தவர், மேன்மைமிகு உழைப்புக்கு சொந்தக்காரர், தனது தேவைகளை தயங்காது விஞ்ஞானிகள் நிறைந்த சபையில் தட்டிக்கேட்கும் மாண்பு கொண்டவர்கள் என மாணவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் பள்ளிப்பாடத்தில் வேளாண் சுற்றுலாவை சேர்க்க வேண்டும். அதனை வழிநடத்திச் செல்ல அனுபவ விவசாயிகளை அந்தந்த பள்ளிகளே கண்டறியலாம். பண்ணையை பார்வையிட்டு, அங்குள்ள சிறப்பு அம்சங்களை கண்டுணர்வதற்கு உண்டாகும் தொகையை பள்ளிகள் விவசாயிகளுக்கு வழங்கலாம்.

மேலும் வேளாண் சுற்றுலா மூலம் அவ்வப்போது வேளாண்மைப் பல்கலைகழகங்களுக்கும், வேளாண் கண்காட்சிக்கும் அழைத்துச் செல்வதுடன், வேளாண் சுற்றுலாமூலம் அறிந்து கொண்டதை எடுத்துக்கூறும் வகையில் பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மாதிரித் தோட்டம் அமைக்க அறிவுறுத்தலாம்.

- saraths1995@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in