

நீண்ட காலமோ குறுகிய காலமோ எப்போது வேண்டுமானாலும் பணமாக மாற்றக்கூடிய தங்க முதலீட்டுக்கான இன்னொரு வழிமுறைதான் கோல்ட் இடிஎஃப். கோல்ட் இடிஎஃப் என்பது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் இன்னொரு முகமாகும். ஆகவே, மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய சில அடிப்படை விஷயங்களை முதலில் பார்ப்போம். கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தையில் நாம் நேரடியாகவும் முதலீடு செய்யலாம் அல்லது இதைப் பற்றி விவரம் அறிந்த இன்னொருவர் மூலமாகவும் செய்யலாம்.
அதாவது நாம் ஒரு காரை வாங்கினால், நாமே நேரடியாக ஓட்டலாம் அல்லது ஒரு ஓட்டுநரை வைத்தும் ஓட்டலாம். இரண்டிலுமே நீங்கள் காரில் பயணம் செய்யக் கூடிய வசதி கிடைக்கிறது. இதில் ஓட்டுநரை வைத்து நாம் காரில் பயணம் செய்யும் வகைதான் மியூச்சுவல் ஃபண்ட். நம்முடைய பணத்தை, முறையாக முதலீடு செய்யக் கூடிய வித்தையை தெரிந்தவர்கள் மூலமாக முதலீடு செய்வதைப் பற்றி பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது, ஒரு ஃபண்ட் மேனேஜர் பொதுமக்களிடமிருந்து பணத்தை திரட்டி, அவற்றை கடன் பத்திரங்களில், பங்குச் சந்தையில் அல்லது இரண்டிலுமே முதலீடு செய்து, முதலீட்டாளர்களுக்கு, லாபத்தை ஈட்டிக் கொடுப்பதாகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பல்வேறு நிதி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. ஒரு நிதி நிறுவனம் பல்வேறு வகையான திட்டங்களை வழங்கலாம். ஃபண்ட் மேனேஜர் என்பவர் ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்கு பொறுப்பானவர் ஆவார்.
இந்த மியூச்சுவல் ஃபண்ட் என்பதை யார் நடத்துகிறார்கள்? இவர்களை நம்பி பணம் போடலாமா? சீட்டு கட்டி, ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு ஓடி விடுகிறார்களே? அதைப் போன்று இதிலும் பிரச்சினைகள் வருமா? நிறைய கேள்விகள் மனதில் ஓடலாம். முதல் விஷயம் பயப்பட வேண்டாம். இந்தியாவில் வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது. இதுபோல பங்குச் சந்தை முதலீட்டு சந்தையை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் செபி (Security Exchange Board of India) கண்காணிக்கிறது.
இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும், செபிஅமைப்பிடம் முறையாக அனுமதி பெற்றவர்களாகவே இருப்பார்கள். ஆகவே இவர்கள் திடீரென்று ஓடி விடுவார்கள் என்ற பயம் தேவையில்லை. அதேசமயம் நாம் செய்யும் மியூச்சுவல் பண்டின் முதலீடு, பங்குச் சந்தையின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டு மாறும். மியூச்சுவல் ஃபண்ட் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்கலாம்.
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பல்வேறு வகையான திட்டங்களை அவ்வப்போது வெளியிட்டும். உதாரணமாக ஒரு திட்டத்துக்கு A என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். இந்தத் திட்டம் பொதுமக்களுக்கு புதிய பண்ட் வெளியீடு (NFO - New Fund Offer) என அறிமுகம் செய்யப்படும்.
இந்தத் திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். குறைந்த பட்சமாக ₹1000 முதலீடு செய்ய வேண்டும். ஒரு யூனிட்டின் விலை ₹10/- ஆகும். நாம் ஆயிரம் ரூபாய்க்கு, 100 யூனிட்டுகளை வாங்கியிருக்கிறோம். இந்தத் திட்டத்
தில் 10 நபர்கள், தலைக்கு ₹1000/- முதலீடுசெய்தால், இந்தத் திட்டத்துக்கு மொத்தம் ₹10,000/- வசூல் ஆகியிருக்கும், கொடுத்திருப்பது 1000 யூனிட்டுகள் ஆகும்.
இந்த பணத்தை A திட்டத்தை நிர்வகிக்கும் ஃபண்ட் மேனேஜர் முறையாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வார். ஒரு வருடம்கழித்து, இந்த முதலீட்டின் மதிப்பு ₹12000/-ஆக உயர்ந்துள்ளதாக வைத்துக் கொள்ளலாம். இப்போது ஒரு யூனிட்டின் மதிப்பு என்பது₹12000/1000 Units = ₹12/- ஆகும். இதைநிகர சொத்து மதிப்பு (Net Asset Value)என்று சொல்லுவோம். அதாவது A என்றதிட்டம், 20% லாபத்தை கொடுத்துள்ளது. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப, NAV மதிப்பு கூடலாம் அல்லது குறையலாம்.
பொதுவாக பங்குச் சந்தையின் ஏற்றத்தைவிட, அதிக அளவில் லாபத்தைக் கொடுக்கும் திட்டங்கள், சிறப்பான திட்டங்கள் பார்க்கப்படும். பங்குச்சந்தையின் ஏற்றத்தைவிட, குறைவான வளர்ச்சியை காட்டும் திட்டங்கள், மோசமான திட்டங்கள் ஆகவும் பார்க்கப்படும். இது அந்தந்த திட்டங்களை நிர்வகிக்கும் ஃபண்ட் மேனேஜர்களை பொறுத்த விஷயம். மியூச்சுவல் ஃபண்ட் குறித்து சுருக்கமாக பார்த்திருக்கிறோம். இந்த மியூச்சுவல் பண்டுக்கும், கோல்டு இடிஎஃப் என்ற முதலீட்டு திட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பதை வரும் வாரம் பார்ப்போம்.
- trarulrajhan@ectra.in