பணமின்றி அசையாது உலகு 10: மருத்துவ காப்பீடு சில விளக்கங்கள்

பணமின்றி அசையாது உலகு 10: மருத்துவ காப்பீடு சில விளக்கங்கள்
Updated on
2 min read

‘செலவல்ல.. பாதுகாப்பு..’ என்ற தலைப்பில் மருத்துவ காப்பீடு குறித்த சென்றவார கட்டுரை குறித்து சில மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. நன்றி, பாராட்டுபோன்றவற்றைத் தவிர ஒருசில மின்னஞ்சல்களில் கேள்விகளும் வந்திருக்கின்றன.

"எனக்கு, என் நிறுவனமே மருத்துவ காப்பீடு கவரேஜ் கொடுக்கிறது. அதுபோக நானும் ஒன்று தனியாக எடுக்க வேண்டுமா?” என்பது ஒரு கேள்வி. "நான், அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கிறேன். எனக்கு அரசு வழங்கும் மருத்துவ காப்பீடு இருக்கிறது. அது போதுமல்லவா?” என்று மற்றொரு கேள்வி.

"உடல் நலக்குறைவு வந்த பிறகு காப்பீடு எடுத்தால் அதற்கு பணம் தர மாட்டார்கள். பிறகு எதற்கு காப்பீடு” மற்றும், "காப்பீடு இருந்தால் மட்டுமே சிகிச்சை பெறுவது சுலபம் என்று சொல்ல முடியாதாமே” என்று ஒருவர் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்.

முதலில், பணி ஓய்வு வயது வரை வேலை நிச்சயம்’ என்கிற உத்தரவாதம் இல்லாத தனியார் நிறுவன ஊழியர்களின் மருத்துவ காப்பீடு குறித்த கேள்விக்கு பதில்.

பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி கொடுக்கின்றன. அப்படி வழங்கப்படும் காப்பீடுகள் பெரும்பாலும் 'குழு மருத்துவ காப்பீடு பாலிசி’ களாக இருக்கலாம். நிறுவனங்கள் கொடுக்கும் பாலிசி தொகை போதுமானதாக இல்லாதபட்சத்தில், தனியாக, கூடுதலாக ஒரு பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது.

"போதுமான அளவு என்பது எவ்வளவு?” என்று கேட்கலாம். அது அவரவர் வயது, குடும்பஉறுப்பினர்களுடைய எண்ணிக்கை, அவர்கள் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்தது.

தவிர, ‘பணிஓய்வு வரை நிச்சய வேலை’ மற்றும் அதன் காரணமாக நிறுவனம் தரும் மருத்துவ காப்பீடு இல்லாதவர்கள், அதாவது தனியார் நிறுவன ஊழியர்கள் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன.

முதலாவது, வேலை மாறும் நேரங்களில், புதிதாக வேலைக்கு சேரும் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு கிடைக்காமல் போகலாம். ஆம். எல்லா நிறுவனங்களும் இந்த காப்பீட்டு வசதியைத் தருவதில்லை. காரணம், சேமநலநிதி பணிக்கொடை போல காப்பீடு என்பது சட்டப்படி தந்தே ஆக வேண்டிய 'ஸ்டாச்சுடெரி வெல்ஃபேர்’ அல்ல. அப்படி தராமல் விட்டுவிட்டால், புதிய வேலையில் சேரும் நேரம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் வரக்கூடிய பெரிய மருத்துவ செலவுகளை சமாளிக்க சொந்தமாக மருத்துவ காப்பீடு பாலிசி எடுக்க வேண்டிவரும்.

பாலிசி எடுக்கும் நேரம் தன் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வயது, உடல்நிலை ஆகியவற்றை வைத்து கட்டவேண்டிய பிரீமியம் முடிவாகும். அது கூடுதலாக இருக்கலாம். தவிர, அந்த சமயம் ஏற்கெனவே வந்து புகுந்துகொண்டு விட்ட உடல்நல கேடுகளுக்கு 'இன்சூரன்ஸ் கவரேஜ்’ தர முடியாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் தவிர்த்துவிடும்.

புதிதாக வேலைக்கு சேரும் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு கொடுத்தாலும், காப்பீட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தம் காரணமாக, புதிதாக சேர்ந்தவர்களின் சில உடல்நலக்குறைவுகளுக்குமுதல் சில மாதங்கள் வரை அல்லது சிலஆண்டுகளுக்கு ‘வெயிட்டிங் பீரியட்’ காரணமாக மருத்துவ காப்பீடு இல்லை எனலாம். 'வெயிட்டிங் பீரியட்’ காலத்தில் அவருக்கோ குடும்பத்தாருக்கோ உடல்நலக் குறைவு ஏற்பட்டால் காப்பீடு பணம் கிடைக்காது.

மேலே பார்த்த இரண்டு காரணங்களுக்காகவும் தனியார் நிறுவன ஊழியர்கள் தனியேகூடுதலாக ஒரு பாலிசியை, ஓரளவு தொகைக்காவது, வயது குறைவாக இருக்கும் நேரமே எடுத்து வைத்துக் கொள்வது பாதுகாப்பு.

தற்சமயம் ஆசிரியர்கள் உள்பட தமிழக அரசின் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. கணவன், மனைவி மற்றும் 25 வயதுக்குகுறைவான பிள்ளைகளுக்கும் பட்டியலில்குறிப்பிட்டப்பட்டிருக்கும் உடல்நலக் குறைவுகளுக்கு, தேர்வுசெய்யப்பட்ட 450 -க்கும் சற்று அதிகமான மருத்துவமனைகளில், 'கேஷ்லெஸ்’ முறையில் சிகிச்சை கிடைக்கும். சிறுநீரக கோளாறுகள், கேன்சர் போன்ற சிலவற்றின் சிகிச்சைகளுக்கு ரூ.20 லட்சம் வரை கொடுக்கிறார்கள். பணி ஓய்வுக்குப் பிறகு கணவன் மனைவி இருவருக்கும் வேறு ஒரு மருத்துவ காப்பீடு பாலிசி வழங்கப்படுகிறது.

தங்கள் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் தேவைப்படலாம் என்ற நிலையிருப்பவர்கள் ஒரு தொகைக்கு தனியே ஒரு பாலிசி எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே உள்ள உடல்நலக்குறைவுகளுக்கு மருத்துவ காப்பீடு பலன் தராது என்ற ஒருவரின் அபிப்பிராயம் குறித்து.

அது உண்மைதான். ஆனால், பாலிசி எடுத்த பிறகு வரக்கூடிய உடல்நலக் குறைபாடுகளுக்கு என்ன செய்வது? அதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கின்ற இளமை காலத்திலேயே, சம்பாதிக்க தொடங்கிய உடனே மருத்துவ காப்பீடு பாலிசி எடுப்பது உதவும்.

இறுதியாக, ‘மருத்துவ காப்பீடு பாலிசி வைத்திருப்பவர்களுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை என்ற அபிப்பிராயம் குறித்து. அது உண்மையில்லை என்று சொல்ல முடியாது. அது அவரது சொந்த அல்லது கேள்விப்பட்ட அனுபவமாக இருக்கலாம். பெரும்பாலானவர்கள் பாண்டியன் சொன்னதைப் போலவே அவர்களுக்கு மருத்துவ காப்பீடு பெரும் உதவியாக இருப்பதாகவே சொல்கிறார்கள்.

ஒரு சிறிய செலவில் பெரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்துகொள்ள முடியும் என்கிற ஒரு வாய்ப்பு மருத்துவ காப்பீடு வடிவில் இருக்கிறது. பயன்படுத்திக் கொள்கிறவர்களுக்குப் பயன்.

- writersomavalliappan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in