

ஒரு மாலை நேரம். வயல்வெளியின் வரப்பில் நடந்து செல்லும் ஒருவர் திடீரென நின்றுவிடுகிறார். அவரது பாதையைக் கடந்து எந்தச் சத்தமும் இல்லாமல் ஒரு நீண்ட உருவம் மெதுவாக நகர்கிறது. அது ‘ஒரு பாம்பு!’ என்கிற வார்த்தை மனதில் தோன்றியவுடன், இதயத் துடிப்பு அதிகரிக்கிறது.
சில அடிகள் பின்னோக்கி நகர்கிறார். பாம்பைப் பார்த்தவுடன் பயப்படுவது மனிதனின் இயல்பாக மாறிவிட்டது. ஆனால், அந்தப் பயத்துக்குப் பின்னால் இருக்கும் உண்மையை அறிந்துகொண்டால், பாம்புகளைப் பற்றிய நமது பார்வை முற்றிலும் மாறிவிடும்.
மாறுபட்ட உயிரினம்
புவியில் சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவரும் உயிரினங்களில் பாம்புகளும் ஒன்று. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பாம்பு இனங்கள் உயிர் வாழ்கின்றன. இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட இனங்களும், தமிழகத்தில் ஏறத்தாழ 100 வகைப் பாம்புகளும் பதிவாகியுள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடர்ந்த காடுகள் முதல் கடற்கரைப் பகுதிகள்வரை, வறண்ட புதர்க்காடுகள் முதல் விவசாய நிலங்கள்வரை, தமிழகத்தின் பல்வேறு வாழிடங்களில் பாம்புகள் முக்கிய அங்கமாக உள்ளன.
அவற்றில் ஒரு சில இனங்கள் மட்டுமே அதிக விஷத்தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்துவதில்லை. இருந்தாலும் அவற்றைக் கண்டவுடனேயே அடித்துக் கொல்லும் போக்கு அதிகரித்துள்ளது.
பாம்புகளின் உடலமைப்பு மற்ற உயிரினங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இரண்டாகப் பிரிந்த நாக்கின் உதவியால் காற்றில் உள்ள மணத்துகள்களை உணர்ந்து சுற்றுப்புறத்தை அறிந்துகொள்கின்றன.