

ஜார்க்கண்ட் மாநிலம், ஜம்ஷெட் பூருக்குத் தெற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பித்தர்தாரி எனும் சிற்றூரின் அருகே, கறுப்பு வெள்ளைக் கோடுகளுடன் கூடிய பாறை வெளிப்பாட்டைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார் புவியியலாளர் திரிஸ்ரோதா சௌத்ரி.
இந்தியப் புவியியல் ஆய்வு மைய (Geological Survey of India) அறிவியலாளரான அவருக்கு, அது பூமியின் உயிர் வரலாற்றையே புரட்டிப்போடும் கண்டறிதலாக அமையும் என்று அப்போது தெரியாது. அந்தப் பாறையில் தென்பட்ட கார்பன் எந்த மூலத்திலிருந்து படிந்தது என்பதை மட்டுமே அறியத் தொடக்கத்தில் அவர் விரும்பினார். ஆனால் அந்தத் தேடல், பூமியின் தொடக்கக் கால உயிரினத்தின் தடயத்தை வெளிக்கொணரும் ஆய்வாக விரிவடைந்தது.
இப்போது, சௌத்ரியும் சர்வதேசக் குழுவும் மேற்கொண்ட ஆய்வு, பூமியில் உயிர் எப்போது தோன்றியது என்கிற பெரும் புதிருக்குப் புதிய பதிலை அளித்திருக்கிறது. சிங்பூம் நிலைக் கண்டப்பகுதியில் (Singhbhum Craton) அமைந்துள்ள ‘பித்தர்தாரி தீப்படிகக் கல்' (Bhitardari Chert) பாறையில், 349.7 கோடி ஆண்டுகள் பழமையான உயிரினத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதுவரை நேரடியாகக் காலம் நிர்ணயிக்கப்பட்ட உயிரியல் தடயத்துடன் கூடிய பாறைகளிலேயே இது மிகவும் பழமையானது என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வு முடிவுகள் Proceedings of the National Academy of Sciences (PNAS) இதழில் 2026 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டன. இந்தியப் புவியியல் ஆய்வு மையம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UCLA), பிரான்ஸின் இஃப்ரமெ (Ifremer), நெதர்லாந்தின் நேச்சுரலிஸ் பல்லுயிர் மையம் ஆகிய நிறுவனங்களின் அறிவியலாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
வேதித் தடயம்
‘பாறையில் உயிர்த் தடயம் கிடைத்தது' என்று சொல்லும்போது, எலும்புக்கூடு அல்லது நுண்ணோக்கியில் தெரியும் உயிரணு வடிவம் போன்ற ஓர் ‘உடல்' கிடைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு. ஆனால் இந்தப் பாறையில் அப்படி உடலோ, செல் வடிவமோ கிடைக்கவில்லை.
இவ்வளவு நீண்ட காலத்தில் ஏற்பட்ட வெப்பம், அழுத்தம் ஆகியவற்றால் அத்தகைய நுண்ணிய உடல் அமைப்புகள் முழுவதுமாக அழிந்துவிட்டன. மிச்சம் இருப்பது, அந்த உயிரினங்கள் சுற்றுச்சூழலிலிருந்து குறிப்பிட்ட விதத்தில் கார்பனைத் தேர்ந் தெடுத்து உள்வாங்கிய முறையின் வேதிக் கையெழுத்து மட்டுமே. உயிரினம் இறந்து, உடல் முழுமையாக மறைந்த பின்னும், அது உலகுடன் தொடர்புகொண்ட விதம் பாறையில் நுண்ணியக் கையெழுத்தாகப் பதிந்திருக்கும். இதையே அறிவியலாளர்கள் ‘உயிர்த் தடயம்' (biosignature) என்கின்றனர்.