அமோனியா கசிவு மரணத்துக்குப் பின்னால் சட்ட மீறல்கள்!

அமோனியா கசிவு மரணத்துக்குப் பின்னால் சட்ட மீறல்கள்!
Updated on
3 min read

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் கண்ணிகைப்பேர் கிராமத்தில் செயல்படும் St. Peter & Paul Seafoods Exports Pvt. Ltd. கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் 2026 ஜூன் மாதம் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவில் 19 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், சுமார் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

சம்பவம் நடந்து சில நாள்களுக்குப் பரபரப்பாக பேசப்பட்டது, பின்னர் மறக்கப்பட்டவிட்டது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெற்றுள்ள அரசின் ஆய்வு ஆவணம் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்துகிறது.

அரசு ஆய்வின்படி, அமோனியா குளிரூட்டும் அமைப்பில் இருந்த inlet valve செயலிழந்ததால் உயர் அழுத்தத்தில் இருந்த திரவ அமோனியா வெளியேறி நச்சு வாயுவாகப் பரவியது. தொழிலாளர்கள் ஓய்வெடுக்கப் பயன்படுத்திய அறைகளிலேயே தங்கியிருந்ததாகவும், அந்த அறைகளுக்குள் அமோனியா பரவி அவர்கள் சிக்கியதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்று முன்பு சொல்லப்பட்டு வந்த நிலையில், அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகளால் இது விபத்து அல்ல நிறுவனத்தின் நிர்வாக சீர்கேடுகளாலும் அரசின் கண்கானிப்பு குறைபாடுகளாலும் நேரிட்ட தவிர்த்திருக்கக்கூடிய உயிரிழப்பே.

பாதுகாப்பு ஏற்பாடுகள் எங்கே?

அமோனியா போன்ற ஆபத்தான வேதிப்பொருள் பயன்படுத்தப்படும் இந்த தொழிற்சாலையில் அமோனியா கசிவைக் கண்டறியும் கருவி, தானியங்கி எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி போன்றவை இல்லை. அவசரகால பாதுகாப்புத் திட்டமோ முறையான பாதுகாப்பு நடைமுறைகளோ இல்லை.

அபாயகரமான வேதிப்பொருள்கள் குறித்து தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி, தகவல் வழங்கப்படவில்லை. வேதிப்பொருள்கள் வைக்கப்படும் இடத்துக்கும் தொழிலாளர்கள் தங்கும் இடத்துக்கும் இடையே போதிய இடைவெளி இல்லை, தீயணைப்புக் கருவிகள் அவசரநிலையில் பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை. உடலில் வேதிப்பொருள் பட்டால் உடனடியாகக் கழுவுவதற்கான அவசர காலப் பாதுகாப்பு வசதிகள் இல்லை. அமோனியா குளிரூட்டும் அமைப்பின் முக்கிய குழாய்கள் முறையாகப் பரிசோதிக்கப்படவில்லை. சுவாசப் பாதுகாப்புக் கருவிகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட எதுவும் வழங்கப்படவில்லை.

மேலும், இதுபோல் ஆபத்தான நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயமான முன் மருத்துவப் பரிசோதனையும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட வேண்டும் என சட்ட விதிகள் சொல்கின்றன. ஆனால், எந்த மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என அரசு ஆய்வு பதிவுசெய்கிறது. இவை அனைத்தும் உணர்த்துவது ஒன்றைத்தான், தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்கவேண்டிய ஒவ்வொரு பாதுகாப்பு வளையத்திலும் பல ஓட்டைகள் இருந்துள்ளன. கேட்பாரின்றி தொழிலாளிகள் சுரண்டப்பட்டுள்ளனர்.

250 பேருக்கு உரிமம், பணியிலோ 305 பேர்!

தொழிற்சாலைக்கு 250 தொழிலாளர்களை பணியில் அமர்த்த மட்டுமே உரிமம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 19.06.2026 அன்று 305 பேர் பணியில் இருந்துள்ளதாக அரசு ஆவணம் தெரிவிக்கிறது. இதில் 152 ஆண்களும் 153 பெண்களும் அடங்குவர்.

உரிமத்தைத் புதுப்பிப்பதற்கான விண்ணப்பமும் தாக்கல் செய்யப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட 55 பேர் கூடுதலாகப் பணியாற்றியுள்ளனர். குறைந்தப்பட்சம் தொழிலாளர்களுக்கான உணவக வசதிகூட இல்லை என ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

மிகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்களில் ஒன்று, ஆய்வின்போது 13 வயது குழந்தை ஒருவர் தொழிற்சாலையில் பணியாற்றியது கண்டறியப்பட்டது. 14 வயதுக்குக் குறைவான குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆபத்தான பணிகளில் 14 முதல் 18 வயதுக்கு உள்பட்ட இளம் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், அமோனியா குளிரூட்டும் அமைப்பு கொண்ட இந்த ஆபத்தான தொழிற்சாலையில் 15 முதல் 17 வயதுக்கு உள்பட்ட இளம் தொழிலாளர்கள் 21 பேர் பணியில் இருந்ததாக ஆய்வு ஆவணம் பதிவுசெய்கிறது.

புலம்பெயர் தொழிலாளர்களும் பாதுகாப்பற்ற நிலையும்

விபத்தில் உயிரிழந்தவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, மருத்துவ வசதி, தங்குமிடம் உள்ளிட்ட சட்டபூர்வ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்கிற கேள்வியும் எழுகிறது. தொழிற்சாலையில் மூன்று ஒப்பந்ததாரர்களின் கீழ் 182 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்ததாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களைப் பற்றிய சுயவிவரப் பதிவுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் ஆய்வில் குற்றச்சாட்டு உள்ளது.

X-Reflex naja

பாதுகாப்பு மட்டுமல்லாமல் அடிப்படைத் தொழிலாளர் உரிமைகளிலும் விதிமீறல்கள் பதிவாகியுள்ளன. வார விடுமுறை நாளிலும் வேலை, கூடுதல் வேலை நேரத்துக்கான முறையான பதிவின்மை, வருகை, விடுப்பு பதிவுகள் முறையாக பராமரிக்கப்படாமை, இளம் தொழிலாளர்களுக்கான பதிவுகள் இல்லாமை, ஊதியத்துடன் கூடிய விடுப்பு விவரங்கள் புதுப்பிக்கப்படாமை உள்ளிட்ட குறைபாடுகள் அரசின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பலியான பிறகும் விதிமீறலா?

உயிர் பலி ஏற்பட்டும் தொழிலாளிகள் சுவாசிக்க முடியாத நிலையிலும் உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், 12 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய எழுத்துபூர்வ அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதாவது, ஆபத்து ஏற்பட்டால் அதை தடுப்பதற்கான பாதுகாப்பு அமைப்புகள் தோல்வியடைந்ததுடன், சம்பவத்துக்கு பின்னரும் சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்ததாக அரசு ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.

பதில் இல்லா கேள்விகள்

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலமாக கிடைத்த இந்த ஆவணத்தை ஒரு தனியார் தொழிற்சாலையின் விதிமீறல்களின் பட்டியலாக மட்டும் பார்க்க முடியாது. தொழிற்சாலையில் வளர்ச்சி என்பது உற்பத்தி அதிகரிப்பை மட்டும் நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது. உற்பத்தி அதிகரிக்கும்போது தொழிலாளர்களின் பாதுகாப்பும் அதே அளவில் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் லாபம் நிறுவனத்துக்கு, ஆபத்து தொழிலாளர்களுக்கு என்கிற நிலை தொடருமானால் அது தொழில்துறை வளர்ச்சி அல்ல.

  • இந்த விதிமீறல்கள் ஏன் முன்கூட்டியே கண்டறியப்படவில்லை?

  • கண்டறியப்பட்ட சில விதிமுறை மீறல்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

  • அமோனியா வாயு போன்ற ஆபத்தான வேதிப்பொருள்களுடன் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தொழிலாளர் ஆய்வுத்துறை என்ன செய்தது?

  • ஆபத்தான நிலையில் இருக்கும் இது போன்ற வேலைகளை குழந்தைகள் செய்யும் அளவுக்கு கண்காணிக்கும் அமைப்பு எப்படி தோல்வியடைந்தது என்பவையே கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.

19 உயிர்களைப் பறிபோன இந்தச் சம்பவத்தில் வெறும் இழப்பீடு வழங்குவது மட்டும் போதாது. முழுமையான சட்ட விசாரணை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம், காயமடைந்த தொழிலாளர்களுக்கு நீண்டகால மருத்துவப் பாதுகாப்பு, புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைப் பாதுகாப்பு, குழந்தை - இளம் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை ஆகியவை அவசியம். தொழிலாளர்களின் பாதுகாப்பு முதலாளியின் விருப்பம் அல்ல, அது சட்டபூர்வமான கடமை. அந்தக் கடமை காகிதத்தில் மட்டுமல்ல, தொழிற்சாலையின் ஒவ்வொரு பணியிடத்திலும் நடைமுறையில் உறுதிசெய்யப்பட வேண்டும். இல்லையெனில் மரணங்கள் தொடரும் என்பதே உணர்த்தப்பட்டுள்ளது.

- கட்டுரையாளர் மோசஸ் பிரபு, அறிவியல் எழுத்தாளர்.

தொடர்புக்கு: pulicatprabhu13@gmail.com

அமோனியா கசிவு மரணத்துக்குப் பின்னால் சட்ட மீறல்கள்!
நடிகர் விக்ரமுக்கு ஒரு திறந்த மடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in