ஊர்த் தேன்சிட்டு |படங்கள்: ரமா நீலமேகம் |
சின்ன பறவைக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள்!
தேன்சிட்டுகள் பெயருக்கு ஏற்ப ரொம்பச் சின்ன ஆனால் அழகான, வண்ணமயமான பறவைகள். உலகில் உள்ள 146 வகைகளில் இந்தியாவில் 13 வகைள் உள்ளன. அவற்றில் ஏழு வகைகளைப் பார்த்து, நான் ஒளிப்படம் எடுத்துள்ளேன்.
தமிழ்நாட்டில் ஊர்த் தேன்சிட்டு (Purple rumped sunbird), ஊதா தேன்சிட்டு (Purple sunbird), பெரிய தேன்சிட்டு (Lotens sunbird), சின்ன தேன்சிட்டு (Crimson backed sunbird) ஆகியவற்றைக் காண முடியும். இவற்றில் முதல் மூன்றும் தமிழகம் முழுவதும், குறிப்பாக, சென்னை போன்ற நகர்ப்புறங்களிலும் காணலாம். சின்ன தேன்சிட்டை மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காண முடியும்.
சென்னையின் தேன்சிட்டுகள்
என் பறவை நோக்குதல் பயணத்தின் தொடக்கம் பெரும்பாலும் சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவன (IIT-M) வளாகத்தில்தான் நிகழ்ந்தது! அங்கு பெரிய மரங்கள், கருவேல மரங்களில் இருந்தபடி பறவைகள் எழுப்பும் ஓசை, எந்தப் பகுதியிலிருந்து வருகிறது, அது எந்தப் பறவையென்று அறிய எனக்குப் பயிற்சி கொடுத்த பறவைகளில் ஊர்த் தேன்சிட்டுகள் முதலிடத்தில் உள்ளன.
இந்தப் பறவைகளால் பல நேரம் என் கழுத்து சுளுக்கிக்கொண்டுள்ளது! இப்பறவைகள் ஒரு விநாடிகூட அமைதியாக உட்காராது! கிளைக்குக் கிளை, பூவுக்குப் பூ தாவிக்கொண்டே இருக்கும்! இவற்றை ஒளிப்படம் எடுப்பதற்குள் நம்மை ஒரு வழி செய்துவிடும்! பல நேரத்தில் இலை, குச்சி, பறவையின் வால் அல்லது அலகு மட்டும்தான் ஒளிப்படத்தில் நமக்குக் கிடைக்கும்! ஊதா தேன்சிட்டு தரைமட்டத்தில் உள்ள சீமைநாயுருவி (Stachytarpheta jamaicensis) அல்லது தங்க அரளி போன்ற தாவரங்களுக்குத் தேன் அருந்த வரும்போது கண்ணுக்கு நன்றாகப் புலப்படும்.
