

மலபார் சறுக்கித்தவளை
மேற்குத் தொடர்ச்சி மலையிலும் சறுக்கித் தவளைகள் வாழ்கின்றன. அதற்கு, ‘மலபார் சறுக்கித் தவளைகள்’ (Rhacophorus malabaricus) என்று பெயர். ஆண்டின் பெரும்பகுதி மரங்களின் மேல் வாழும் இவை, தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும் இனப்பெருக்கத்துக்குத் தயாராகும்.
இனப்பெருக்கம் தரைப்பகுதியில்தான் நடைபெற்றாக வேண்டும். ஆகவே, முதலில் ஆண் தவளை மரத்திலிருந்து கீழே இறங்கும். இது பெண் தவளையின் அளவில் மூன்றில் ஒரு பங்கே இருக்கும். பகலில் செடிகளின் மறைவில் தங்கி, இரவானதும் நீரில் இறங்கும். மேலே மரக்கவிகையில் தங்கியிருக்கும் பெண் தவளைகளை அழைக்க, அது பாடத் தொடங்கும்.
இதன் வாழ்க்கை அவ்வளவு எளிதான தில்லை. எட்டு மாதங்களாக இவ்வகைத் தவளைகளுக்காகக் காத்திருந்த பாம்பு உள்ளிட்ட இரைக் கொல்லிகள் நீர்நிலைகளைச் சுற்றிக் காத்திருக்கும். இத்தவளைகளைப் பாம்புகள் நிலத்தில் கொல்வதில்லை.
மாறாக, தவளை நீருக்குள் தாவும்வரை காத்திருக்கும். ப்ளாப்! தவளை தாவியதும் எழும் சிற்றலைதான் பாம்புக்கு அடையாளம். பாம்பு நீருக்குள் இறங்கித் தவளையைக் கவ்வும். பிறகு நீருக்குள் மூழ்கும். அங்கு தவளை மூச்சடங்கி இறக்கும்வரை காத்திருந்து, பிறகே அதை விழுங்கத் தொடங்கும்.