

குறிஞ்சி, முல்லை
ஆயிரம் மலர்களே... தொடரை எழுதத் தொடங்கிய பிறகு வெளியில் செல்லும்போதெல்லாம் தாவரங்களைச் சற்றே கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன். அறிவியல் துறையில் ஈடுபடும்போது முதலில் செய்ய வேண்டியது உற்றுநோக்குவது.
வண்டியில் செல்லும்போதுகூட மலர்ந்திருக்கும் மரங்கள், மாறுபட்டுக் காணப்படும் தாவரங்களைக் கவனிக்கத் தொடங்கியுள்ளேன். நகரச் சூழலில் அயல் தாவரங்கள் பெருமளவு புகுத்தப்பட்டுவிட்டன.
அதனால் இயல் தாவரங்களைக் காணும்போது கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நமது இலக்கியங்களில் கூறப்பட்ட தாவரங்கள், மலர்களை இன்றைக்கும் காண முடியும்போது, அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அவசியம் போற்ற வேண்டும்.
காரணம், அவை நம் அறிவியல் புரிதலை, பண்பாட்டுடனான உறவை, மரபின் மீதான பிடிப்பை வெளிப்படுத்துகின்றன. மனிதர்களால் உருவாக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில், சித்தன்னவாசல் ஓவியங்கள் போன்ற கலைப்படைப்புகளை மரபுச் சின்னங்களாகப் போற்றுகிறோம்.
அவற்றைவிடக் காலத்தால் முற்பட்ட, இயற்கைத் தொடர்ச்சி கொண்ட தாவரங்களும், நம் க்மரபுப் புதையல்தானே. அவற்றைப் போற்றுவதும் பாதுகாப்பதும்தானே முறை. ஆனால், நடைமுறை என்னவாக இருக்கிறது?
தமிழ்ப் பெயரும் ஆபத்தும்
தென் அமெரிக்காவைச் சேர்ந்த மரம் நாகலிங்கம். ஆப்ரிக்காவைச் சேர்ந்த மரம் மரச்சுரை (Sausage Tree / Kigelia africana). இதற்குச் சிவ குண்டலம் என்று பெயருள்ளது. இந்த மரங்கள் தமிழ்ப் பெயரைப் பெற்றது மட்டுமல்லாமல் பெருந்தெய்வ வழிபாட்டில் முக்கிய இடத்தைப் பிடித்து, மக்களிடையே குறிப்பிடத்தக்க மதிப்பையும் பெற்றுவிட்டன.
அதேபோல் அச்சி நறுவிலி (Cordia sebestena) அமெரிக்காவைச் சேர்ந்த மரம். இது போன்ற பல அயல் தாவரங்களின் மலர்கள், தோற்றம், அழகு, நறுமணம் உள்ளிட்டவற்றைக் கண்டு நானும் வியந்திருக்கிறேன். ஆனால், இந்த மரங்கள் நம் சூழலியல் தொகுதிக்கு அந்நியமானவை.
நம் மண்ணின் உயிர்ப்பன்மை, உயிரினங்களுக்கு மிகக் குறைவாகவே இவை பங்களிக்கின்றன. எனவே, இவை அயல் தாவரங்கள் என்பதைச் சுட்டும் வகையில் பெயர்களில் மாற்றம் தேவை (எ.கா. சீமைக் கருவேலம்). இது குறித்து அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். முக்கியமாக அயல் தாவரங்கள் ஏற்படுத்தும் ஆபத்து குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்க வேண்டும்.
அயல் தாவரங்களுக்குக் கிடைத்த ஊக்குவிப்பு, இயற்கையாகவே அவற்றுக்கு எதிரிகள் குறைவாக இருப்பது போன்றவை, நமது இயல் தாவரங்களுக்கான இடத்தை வலிந்து பிடுங்கிக்கொள்கின்றன.