

பெரம்பலூர் சாத்தனூர் பகுதியிலும், விழுப்புரம் திருவக்கரை பகுதியிலும் தேசிய கல்மரப் பூங்காக்கள் உள்ளன. அங்கேயுள்ள கல்மரப் படிவங்களைக் காணும்போது வியப்பு ஏற்படாமல் இருக்காது. இவை கற்கள், மரங்களாக மாறினவா? இல்லை பசுமரங்கள், பாறைகளாக மாறினவா என்று ஒரு கணம் திகைக்க வைக்கும்.
ஆம், இவை அனைத்தும் ‘பாறைகளாகிவிட்ட பச்சை மரங்கள்'தான். இப்புவியின் தோற்றத்தையும் தாவரங்கள் அடைந்த பரிணாம வளர்ச்சியையும் பறைசாற்றவந்த பாறைப் படிவங்கள் இவை.
தற்போது கல்மரங்கள் காணப்படும் இப்பகுதிகள், அவை உருவான காலத்தில் இன்றைய நிலப்பரப்பைப் போன்றதாக இருந்திருக்கவில்லை; வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆறுகள், வெள்ளப்பெருக்குகள் கடற்கரைச் சூழல்கள், அவற்றுடன் தொடர்புடைய படிவுச்சூழல்களின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தன.
எப்படி மாறுகிறது?
கடற்கரையை ஒட்டிய பகுதிகள், ஆறுகள் கடலுடன் கலக்கும் கழிமுகங்கள், வெள்ளப்பெருக்குப் பகுதிகளில், நீரோட்டத்தால் அடித்துவரப்பட்ட மரங்கள் சேறு, பிற படிவங்களுடன் புதையுண்டன.
மரங்கள் புதைந்த பின்னர், அவற்றின் மீது மணல், வண்டல், களிமண், பிற படிவங்களும் தொடர்ந்து ஒன்றன் மீது ஒன்றாக நீண்ட காலத்துக்குப் படிந்துகொண்டே இருந்தன. இந்தப் படிவங்களின் எடை காரணமாகக் காலப்போக்கில் அவை இறுக்கமடைந்தன (compaction).
பின்னர், படிவத் துகள்களுக்கு இடையிலுள்ள இடைவெளிகளில் கனிமங்கள் படிந்து, அவற்றை ஒன்றோடு மற்றொன்று பிணைத்தன (cementation). தளர்வான படிவங்கள் இதன் மூலம் படிவப்பாறைகளாகப் (sedimentary rocks) படிப்படியாக மாறின. புதைந்த வண்டல் பாறைகளாக மாறும்போதும், அதற்குப் பின்னரும், அவற்றுக்குள் இயற்பியல், வேதியியல் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன.
நீரில் கரைந்த சிலிகா பொதுவாக ஆர்த்தோசிலிசிக் அமிலம் (H4SiO4) என்கிற வடிவில் காணப்படுகிறது. கரைந்த சிலிகாவைக் கொண்ட நிலத்தடி நீர், புதைந்த மரத்தின் பிளவுகள், நுண்துளைகள், செல்சுவர்களில் உள்ள நுண்துளைகள், செல்களின் உள் வெற்றிடங்கள் வழியாக ஊடுருவுகிறது.
சிலிகா நிறைந்த திரவங்கள் மரத்திசுக்களின் நுண்துளைகளுக்குள் நுழைந்து, அங்கு சிலிகாவைப் படியவைக்கும் நடைமுறை சிலிகமயமாக்கம் (silicification) எனப்படுகிறது. இப்படிப் படியும் சிலிகா, மரத்தின் நுண்ணிய உடற்கூறு அமைப்புகளைப் பாதுகாக்க உதவுகிறது.
இதன் விளைவாக, தாவரங்களின் நீர்கடத்தும் டிரக்கீடுகள் (tracheids), சைலம் கதிர்கள் (xylem rays), கதிர்திசைப் புழைகள் (radial pits) போன்ற நுண்ணிய உடற்கூறு அமைப்புகள் இம்மரங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன.