

அந்தமான், நிக்கோபார் தீவின் இயற்கை, காடுகள், காட்டுயிர் முக்கியத்துவம் குறித்துக் கடந்த 30 ஆண்டுகளாகப் பேசியும் எழுதியும் வருபவர், பங்கஜ் ஷேக்சாரியா. அவர் எழுதிய The Great Nicobar Betrayal நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு, ‘நிகோபார் பெருவஞ்சனை’ நூல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் ஃபிரண்ட் லைன் ஆசிரியர் வைஷ்ணா ராய் நூலை வெளியிட்டார். ‘பிரகிருதி அறக்கட்டளை’யின் நிறுவனர் ரன்வீர் ஷா முன்னிலை வகித்தார்.
நூல் வெளியீட்டைத் தொடர்ந்து, நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ள மிகப்பெரிய நிலப்பரப்பான பெரும் நிக்கோபார் தீவில் திட்டமிடப்பட்டுள்ள ரூ.72,000 கோடி மதிப்பிலான மாபெரும் வளர்ச்சித் திட்டம் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் பங்கஜ் பேசினார்.
பொருளாதார வளர்ச்சிக்கு வாக்குறுதி அளிப்பதாக இத்திட்டம் கூறினாலும், இந்தத் தீவின் மழைக்காட்டுச் சுற்றுச்சூழல் அமைப்புக்கும், பழங்குடி மக்களுக்கும் இது கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எப்போ தெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சுற்றுலா, வணிகச் சுரண்டலுக்கான பகுதியாகவே இத்தீவுகளை அரசாங்கம் பார்த்துவருகிறது.
பெரும் நிக்கோபார் தீவில் துறைமுகம், விமான நிலையம், மின் நிலையம், புதிய நகரியம் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்கட்டமைப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்களின் மூலம் இத்தீவின் மக்கள் தொகை 8,000-லிருந்து 3,50,000 ஆக உயர்த்தப்பட உள்ளது.
இதனால் கடுமையான நீர்த்தட்டுப்பாடு ஏற்படுவதோடு, உள்ளூர்ப் பழங்குடி மக்களின் மீதும் பல்வேறு நச்சுத்தன்மை வாய்ந்த தொற்றுப் பரவும் அபாயம் / பாதகமான தாக்கங்கள் ஏற்படும். இந்தத் திட்டத்திற்காக சுமார் 130 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகள் அழிக்கப்படவுள்ளன.
அரசாங்கப் புள்ளிவிவரங்களின்படி, ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் மொத்தம் 18.65 லட்சம் மரங்கள் இருந்தாலும், பகுதி பகுதியாக அதிகபட்சமாக 7.11 லட்சம் முதல் 9.64 லட்சம் மரங்கள்வரை வெட்டப்படும். மிக உயரமான மரங்களும் ஆந்தைகள் போன்ற ஓரிட வாழ் பறவைகள் வாழும் மரங்களும் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
எப்படி இருந்தாலும் இதனை நடைமுறைக்கு உதவாத ஒரு வெற்று வாக்குறுதியாகவே ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு மரத்தை ‘உயரமான மரம்' என்று தீர்மானிப்பதற்கான அளவுகோல் என்ன என்பதில் எந்தத் தெளிவும் இல்லை. மேலும், இந்த விரிவான காடுகளில் ஆந்தைகளைக் கண்டறிவது மிகவும் அரிது என்பதால், அவை வாழும் குறிப்பிட்ட மரங்களைக் கண்டறியும் பணி மிகவும் கடினமானதாகிறது.