

பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்தின் தெற்கு எல்லையில், சோழிங்கநல்லூர் பகுதியை ஒட்டிய பெரும்பாக்கம் சதுப்புநிலத்துக்குள் கான்கிரீட் அடித்தளம், தூண்கள், இரும்புக் கம்பிகளுடன் கூடிய தடுப்புச்சுவர் அமைக்கும் பணி அரசால் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது மழையால் பணி தற்காலிகமாக நின்றுள்ளது.
சேலையூர், மாடம்பாக்கம், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, தாழம்பூர், சிறுசேரி போன்ற தெற்குப் பகுதிகளில் இருந்து மழைக்காலத்தில் வடக்கு நோக்கிப் பாயும் மழைநீர் இந்தச் சதுப்புநிலம் வழியாகப் பரவி ஒக்கியம் மடுவு வழியாகக் கடலுக்குச் செல்கிறது. பெருமழைக் காலத்தில் இப்பகுதி வெள்ள நீர் பரவலாக விரிந்துசெல்லும் இடமாகும்.
இங்கு அமையும் எல்லைச் சுவர் அந்த நீரோட்டத்தைத் தடுத்தால் சுற்றியுள்ள சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, பெரும் பாக்கம் குடியிருப்புகளில் மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே வடக்குப் பள்ளிக்கரணையில் காமகோடி நகர் அருகே புதிதாகக் கட்டப்பட்ட எல்லைச் சுவர்கள் அப்பகுதியில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்திவருகின்றன; அதே தவறு இங்கும் நிகழக் கூடாது.
உயிரினங்களுக்கு ஆபத்து
இந்தச் சுவரின் கான்கிரீட் தூண்களும் இரும்புக் கம்பிகளும் பருந்து, கழுகு போன்ற வேட்டைப் பறவைகளுக்கும் காகங்களுக்கும் அமரும் இடங்களாக மாறக்கூடும்.
இதனால் வலசை வரும் வாத்துகள், உள்ளான்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பறவைகள் உணவு தேடும் பரந்து விரிந்த நிலப்பரப்பும், தரையில் கூடு அமைத்து இனப்பெருக்கம் செய்யும் உள்ளூர்ப் பறவைகளுக்கான வாழ்விடமும் பள்ளிக்கரணைச் சதுப்பு நிலத்தில் குறையும் அபாயம் உள்ளது. இதுபோக மீன்கள், ஆமைகள், ஊர்வன, பூச்சிகளின் நகர்வுப் பாதையும் பாதிக்கப்படக்கூடும்.
வனத் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தக் காப்புக் காட்டுச் சதுப்புநிலத்துக்குள்ளேயே ஒரு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது; எல்லைச் சுவர் கட்டுமானத் துக்காகப் பறவைகளின் வாழ்விடத்துக்குள் வாகனங்கள் சென்றுவருகின்றன. சதுப்புநிலத்துக்குள் கற்கள், எம்-சாண்ட் குவிக்கப்பட்டுள்ளன; குப்பை கொட்டப் பட்டுள்ளது; வாகனத் தடங்களும் உருவாகியுள்ளன.
பாதுகாப்பு தேவை
பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்துக்குள் ஏற்படும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவே எல்லைப் பாதுகாப்பு என்று கூறப்பட்டாலும், இந்தத் திட்டம் சதுப்புநிலத்தின் சூழலைப் பாதிப்பதுடன், சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ளப் பேரிடர் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.
எனவே, சோழிங்கநல்லூர் அருகே பெரும்பாக்கத்தில், பள்ளிக்கரணையின் தென்பகுதி சதுப்புநிலத்துக்குள் சுவர் அமைக்கும் திட்டத்தை வனத் துறை முழுமையாகக் கைவிட்டு, மாற்று வழியில் இவ்விடத்தைப் பாதுகாக்க வேண்டும்.
இந்த இடம் பள்ளிக்கரணை ராம்சர் தலத்தின் பகுதி; அதை ஒட்டிய பகுதி வெள்ள நீர் வடியும் முக்கிய இடம் என்பதால், இப்பகுதியைத் ‘தாக்கம் செலுத்தும் மண்டல’மாக (zone of influence) அறிவித்துப் பாதுகாக்க வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றம் (Crl.O.P. 4413/2013) 2016இல் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், சதுப்புநிலத்தின் எந்த இடத்திலும் எவ்விதக் கட்டுமானமும் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, சதுப்புநிலத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கொட்டகை, கட்டுமானப் பொருள்கள், குப்பைகளை, பறவைகளுக்கு இடையூறின்றி விரைவாக அகற்றி, சதுப்புநிலத்தையும் பல்லுயிர்களையும் பாதுகாக்க வேண்டும்.
- wetlandconservationnetwork@gmail.com