

ஓவியம்: எம். சுந்தரன்
சங்க இலக்கியத்தில் மற்ற திணைகளைப் போலவே நெய்தல் திணையும் முக்கியத்துவம் அளித்துப் பாடப் பட்டுள்ளது. சங்க காலம், ஐந்து திணைகளையும் சமமாகவே கருதியுள்ளது. ஐங்குறுநூற்றில் அம்மூவனாரும், கலித்தொகையில் நல்லந்துவனாரும் நெய்தலைச் சிறப்புறப் பாடி இருக்கிறார்கள்.
ஒப்பீட்டு அளவில் நவீனத் தமிழ்ப் பசுமை இலக்கியத் துறையில் மண்ணிலிருந்து கிளைத்துவந்த எழுத்தாளர்கள் குறைவு. அதேபோல, கடலோடி எனப்படும் கடல் பழங்குடிச் சமூகத்தில் இருந்து எழுத வந்திருப்பவர்களில் முதன்மையானவர் வறீதையா கான்ஸ்தந்தின்.
நவீன மனித இனம் எனப்படும் Homo sapiens sapiens ஆப்ரிக்காவிலிருந்து 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வெளியேறிக் கடலோரமாகவே இடம்பெயரத் தொடங்கினார்கள்.
அப்படி வந்தவர்களில் சிலர் தமிழ்நாட்டிலும் தங்கிவிட்டார்கள் என்கின்றன அறிவியல் ஆராய்ச்சிகள். அப்படிப் பார்த்தால், ஆதி மனிதர்களுக்குக் கடற்கரைகளே இரண்டாம் தாய்மடி.
ஆனால், இந்த மண்ணின் மலை, சமவெளிப் பூர்வகுடி மக்களின் உரிமைகளும் குரலும் காலம் காலமாகப் புறக்கணிக்கப் பட்டுவருவது போலவே, கடல் பழங்குடிகளின் உரிமை களுக்கான குரலும் செவிமடுக்கப்படுவதில்லை.
காலநிலை மாற்றம் போன்ற உலகின் மிகத் தீவிரமான சிக்கல்கள் நம்மைப் பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டன. காலம் காலமாகக் கடலுடனும் பருவநிலைகளுடனும் உறவாடும் அவர்களது மரபறிவு இந்தப் பின்னணியிலும்கூட உரிய மதிப்புடன் அணுகப்படுவதில்லை, கலந்துரையாடல்கள் பெரிதாக நடப்பதில்லை.
கடலோடிகளின் குரல்
இன்றுவரை மலைப்பழங்குடிகள் அரசியல்ரீதியில் வலுவில்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்களின் குறைவான எண்ணிக்கை. நாட்டின் இரண்டாவது நீளமான கடற்கரைப் பகுதியைக் கொண்ட தமிழ்நாட்டில் சுமார் 600 மீனவக் கிராமங்களும் 10 லட்சம் மீனவர்களும் இருப்பதாகக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன.
இந்தியாவின் மொத்தக் கடல் மீன் உற்பத்தியில் நேரடியாக 10-12 சதவீதம் தமிழகத்தினுடையது. மக்களின் புரதத் தேவையைப் பெருமளவு நிறைவுசெய்யும் கடலோடிகள், அரசியல்ரீதியில் மிகப் பெரிய சக்தியாக மாற முடியாமல் இருப்பதற்கு, அவர்கள் ஒருங்கிணையாமல் இருப்பது காரணமாக இருக்கலாம்.
தமிழ்நாட்டின் கடலோரமாகவே பயணித்தால் ஒவ்வொரு 25, 50 கி.மீ. தொலைவைக் கடந்த பின்னும் உள்ள மீனவக் கிராமங்களில் மீன்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன, அவர்களின் பண்பாடும் மாறுபடுகிறது.
இந்தப் பின்னணியில், அந்தச் சமூகத்திலிருந்து ஓர் எழுத்துக் குரலாக வறீதையா வந்திருக்கிறார். அவர்களது மரபறிவையும் பாடுகளையும் எழுத்தில் பதிவுசெய்கிறார். கடுமையான சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்கொண்டிருக்கும் கடலையும், கடலோடிகளான மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பட்ட சிக்கல்களையும் ஒட்டுமொத்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் பின்னணியில் வைத்துப் பேசுகிறார்.