

வீட்டில் தலைவலிக்கு வாங்கிய மாத்திரை மீந்துவிட்டதா? காய்ச்சலுக்கு வாங்கிய ‘சிரப்’ காலாவதி ஆகிவிட்டதா? உடனடியாக அதை வீட்டுக் குப்பைத் தொட்டியிலோ கழிப்பறை ‘சிங்க்’கிலோ ஊற்றி, ‘சுத்தம் செய்துவிட்டோம்’ என்கிற நிம்மதியுடன் நாம் கடந்துபோகிறோம்.
ஆனால் இந்தச் சிறிய செயலே, ஒட்டுமொத்தப் பூமிக்கும் நம்மால் நிகழும் மிக ஆபத்தான, படிப்படியான சேர்க்கை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஒரு வீட்டின் கழிப்பறையிலிருந்து தொடங்கும் இந்தச் சிறிய நீரோட்டம், இறுதியில் ஒட்டுமொத்த நீர்-உணவுச் சங்கிலியையும் சென்றடைவது இதன் உண்மையான அளவை உணர்த்துகிறது. இது ஒரு தனிநபரின் சொற்பச் செயலாகத் தெரிந்தாலும், கோடிக்கணக்கான வீடுகளில் நாள்தோறும் இதே செயல் நிகழும்போது அதன் சேர்க்கை விளைவு பேரளவானதாக மாறுகிறது.
நிலத்தடி நீரில் கலக்கும் வேதிப்பொருள்கள்
குப்பைத் தொட்டியில் போடப்படும் மாத்திரைகள் திறந்தவெளிக் குப்பைக் கிடங்குகளை அடைந்து, மழைக் காலத்தில் கரைந்து, அவற்றில் உள்ள வீரியமிக்க வேதிப்பொருள்கள் மெல்ல மெல்ல நிலத்தடி நீரை அடைகின்றன.
கழிப்பறையில் பிளஷ் செய்யப்படும் மாத்திரைகளும் சிரப்புகளும் நேராக நீர்நிலைகளையோ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையோ சென்றடை கின்றன; சாதாரண சுத்திகரிப்பு அமைப்புகள் குடிநீரில் உள்ள பாக்டீரியா, அழுக்கு போன்றவற்றை நீக்க வடிவமைக்கப்பட்டவையே தவிர, இந்த நுட்பமான வேதிப்பொருள்களைச் சுத்திகரிக்க அவற்றால் முடியாது; அதனால் அவை அப்படியே ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கலக்கின்றன.
நுண்ணுயிர் எதிர்ப்பு ஆபத்து
இதில் மிக மோசமான விளைவு நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகளால் ஏற்படுகிறது. மீதமான இந்த மருந்துகளைக் குப்பையில் போடும்போது, சூழலில் உள்ள பாக்டீரியாக்கள் அவற்றின் குறைந்த வீரியத்துக்குத் தொடர்ந்து ஆட்படுவதால், அந்த மருந்தை எதிர்த்து வாழப் பழகிக்கொள்கின்றன. இதன் விளைவாக உருவாவதே ‘சூப்பர்பக்ஸ்’.
சாதாரண நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கே அடங்காத பாக்டீரியாக்கள். நாளை நமக்கோ நம் குழந்தைகளுக்கோ தீவிரத் தொற்று ஏற்படும்போது, மருத்துவமனையில் எந்தச் சக்திவாய்ந்த மருந்தும் வேலை செய்யாமல் போகும் நிலைக்கு இதுவே முதன்மைக் காரணமாகிறது.
உலகச் சுகாதார நிறுவனம் (WHO) சுட்டிக்காட்டும் மிகப் பெரிய உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்களில் இந்த ‘நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பாற்றல்’ (ஆன்ட்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்) முதன்மையானதாக இருக்கிறது. ஓர் எளிய காயத்தொற்றுகூட உயிருக்கு ஆபத்தாகமாறும் எதிர்காலத்தை இது உருவாக்கிக் கொண்டிருக்கிறது.