

நீர்நில வாழ்விகளில் ஒன்றான தவளைகள் படிமலர்ச்சி அடைந்து 25 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்கின்றனர். அதற்கான ‘முந்து-தவளை’ (Proto-frog) புதைபடிவச் சான்று (Triadobatrachus) மடகாஸ்கரில் கிடைத்துள்ளது. அது டிரையாசிக் சிற்றூழிக் காலக்கட்டத்தைச் சேர்ந்ததாகும்.
ஆனால், மூலக்கூறு கடிகாரக் (Molecular Clock) காலக்கணிப்பின்படி, மற்ற நீர்நில வாழ்விகளிடமிருந்து அதற்கும் முன்னரே தவளைகள் பிரிந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது. அதன் காலம் முந்தைய பெர்மியன் பெருங்காலம் வரையில் நீள்கிறது. அதன்படி தவளைகள் 26.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிரினமாகிறது.
ஏன் சிமிட்டுகிறது?
சேற்று உளுவைகள் போலன்றி படிமலர்ச்சியில் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்த தவளைகள் மூன்று கண் இமைகளைக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது கண் இமைக்கு ‘நிக்டிடேட்டிங் சவ்வு’ (Nictitating Membrane) என்று பெயர். இது நீருக்குள் இருக்கையில் கண்களைப் பாதுகாத்திட உதவுகிறது.