

மழைப் பாடகர்கள் இன்னும் தம் இன்னிசை நிகழ்ச்சியைத் தொடங்கவில்லை. கார் காலமான ஆவணி பிறந்துவிட்டது. 2026 ‘சூப்பர் எல் நினோ’ ஆண்டு என்பதால், தென் மேற்குப் பருவமழை பொய்த்துள்ளது. எனவே, காவிரியில் நீரில்லை. வடிநிலப் பகுதிகள் வறண்டு கிடக்கின்றன. பின் எப்படி அவர்கள் பாட வருவார்கள்? காவிரிக் கரையிலிருந்து கவிதைக் கரைக்குச் செல்வோம். புகழ்பெற்ற ஜப்பானியக் கவிஞர் பாஷோ எழுதிய ஹைக்கூ ஒன்று உள்ளது. ‘தவளை’ இடம் பெறுகின்ற ஹைக்கூ அது. ஏறக்குறைய 170 வடிவங்களில் மொழிபெயர்க்கப்பட்ட புகழ்பெற்ற ஹைக்கூ.
பழைய குளம் அது
ப்ளாப்!
தவளை
ஒரு குளத்தின் கரையில் நிற்கிறார் பாஷோ. அது பதினேழாம் நூற்றாண்டிலேயே பழைய குளம். தவளை நீரில் குதிக்கிறது. ஆழ் அமைதியில் ஓர் அசைவியக்கம். நீரில் ஓசை! நீரோசை மட்டுமே வெளியில் கேட்கிறது. நீரின் ஆழத்தைப் போன்று புலனாகாத உள்ளத்தில் ஆயிரம் ஓசைகள்.. ஆயிரம் பொருள்கள்! ஏன் நீரோசையை மட்டும் பாஷோ பதிவுசெய்கிறார்? தவளையின் அழைப்பு ஓசை ஏன் கேட்கவில்லை? அது என்ன பெண் தவளையா? மழையின் பாடலைப் பாடும் ஆண் தவளைகள் என்னவாயின? அது தகுந்த பருவம் இல்லையா? அது இரவா.. பகலா? அதிலும் ஏன் ஒரே ஒரு தவளை மட்டும் உள்ளது? தவளைகள் அருகி விட்டனவா? அது பதினேழாம் நூற்றாண்டின் காட்சியா? அல்லது காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட எதிர்வரும் நூற்றாண்டின் சாட்சியா? இந்தக் கவிதை தரும் திறப்புகள் ஏராளம்.