ஒரு காடோடி ஏற்படுத்திய கிளர்ச்சி | மாதம் ஓர் ஆளுமை

ஓவியம்: எம். சுந்தரன்

ஓவியம்: எம். சுந்தரன்

Updated on
3 min read

நவீனத் தமிழ் பசுமை இலக்கியத்துக்கு சு.தியடோர் பாஸ்கரன், ச.முகமது அலி, ‘பூவுலகின் நண்பர்கள்' நெடுஞ்செழியன், பாமயன் உள்ளிட்டோர் வித்திட்டவர்கள் என்றால், சமூக நீதி, அரசியல், பண்பாட்டுக் கூறுகளுக்கு அதை நகர்த்தி சமூக விவாதத்துக்கு உட்படுத்தியவர் நக்கீரன்.

நெடுஞ்செழியன் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் ஏற்கெனவே அதைத் தொடங்கியிருந்தன என்கிறபோதிலும், அது வலுவாகத் தொடரவில்லை. சுற்றுச்சூழல் பிரச்சினை என்பது முதலில் அரசியல் பிரச்சினை, சமூக நீதி அடிப்படையில் மக்களை மோசமாகப் பாதிக்கிறது, நமது பண்பாட்டின் வேர்களில் இருந்து அறிவியல்பூர்வச் செயல்பாடுகளை மீட்டெடுப்பதன் மூலம் எளிய மக்களுக்குச் சுற்றுச்சூழல் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும் என்பதைத் தன் எழுத்து, பேச்சு வழியாகத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார் நக்கீரன்.

பொருள் தேடும் உலகில்...

பெரியார் கொள்கைகளுடன் களத்தில் போராடிய குடும்பத்தில் பிறந்தவர் நக்கீரன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அன்றைய இளைஞர்கள் பலரைப் போலவே வேலைக்காக வெளிநாடு சென்றார். உலகின் மாபெரும் காடுகளில் ஒன்றான போர்னியோவில் வெட்டுமரத் தொழில் சார்ந்து பணிபுரிந்த அவர், பின்னர் மாலத்தீவில் வேலை பார்த்தபோது 2004 ஆழிப்பேரலையில் சிக்கினார்.

பொருள் தேடும் படலத்தில் வழக்கமான மனிதர்களைப் போலவே ஓடிக்கொண்டிருந்தாலும், இலக்கிய ஆர்வம், தமிழின் ஆதிச் சுற்றுச்சூழல் அக்கறை சார்ந்த நினைவுகளை முழுமையாகத் தொலைக்காமலும் சமூக நீதி சார்ந்த தன் குடும்பப் போராட்ட வேர்களை முற்றிலும் மறக்காமலும் இருந்தார். வெட்டுமரத் தொழில் அவர் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருந்தது.

கண்மூடித்தனமான காடழிப்பு அவரை இயல்பாக இருக்கவிடவில்லை. தன்னை மனிதர்கள் கட்டுமீறித் தொந்தரவு செய்வதை நிறுத்துவதற்கான எச்சரிக்கை மணிகளாகப் பல சமிக்ஞைகளை இயற்கை கொடுக்கும்.

ஆழிப் பேரலை போன்ற பேரழிவுகளும் இயற்கையின் ஆற்றலை உணர்த்தும். இப்படியாக இயற்கை குறித்த விழிப்பு, ஆழ் நினைவுகளில் இருந்து மீண்டெழுந்து மரத்துப்போகாத அவரது உணர்வுகளை மீட்டெடுத்துக் கொண்டிருந்தது எனலாம்.

காடோடி

அடிப்படையில் கவிஞரான நக்கீரன், தமிழ்நாடு திரும்பிய பின் எழுத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சுற்றுச்சூழல் துறை சார்ந்து எழுதத் தொடங்கி, பின் அதிலேயே மூழ்கிவிட்டார். அவர் எழுதிய ‘மழைக்காட்டின் மரணம்' எனும் சிறு நூலே போர்னியோ காட்டின் வெட்டுமரத் தொழில் குறித்துச் சுற்றுச்சூழல் அக்கறையுடன் தமிழில் முதலில் பேசியிருந்தது.

அதை விரித்து எழுதுமாறு நண்பர்கள் கேட்டபோது, அதன் உண்மைத் தன்மை-பல்வேறுபட்ட நேரடித் தொடர்புகள் காரணமாக அபுனைவு நூலாக அதை எழுதுவதில் உள்ள சிக்கல்களை விவரித்த அவர், ‘காடோடி' என்கிற பெயரில் புனைவு நூலாக விரித்தார். தன்வரலாற்றுத்தன்மை கொண்ட புனைவு அது.

சா.கந்தசாமியின் ‘சாயாவனம்' தொடங்கித் தமிழில் சுற்றுச்சூழல் புனைவுகள் பல உண்டு. அதேநேரம் புத்தாயிரம் ஆண்டுக்குப் பின் பெரிதாக வரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் வெளியான ‘காடோடி', வாசகர் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in