

செம்படி மரம்
எங்கள் காட்டில் பூவரசு மரக் கன்றுகள் நான்கு நட்டு வைத்திருந்தோம். அவற்றில் இரண்டு காய்ந்துவிட்டன. இரண்டு மட்டும் அதிகம் வளராவிட்டாலும், உயிரோடு உள்ளன. பூவரசு மரத்தை நாட்டுத் தேக்கு எனச் சொல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
தேக்கு மரத்தைப் போல் உறுதியாக இருக்கும் போலுள்ளது. அதன் காய்களைப் பம்பரம்போல் சுற்றி விடுவதைச் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். பூக்களும் அழகாக இருக்கும். வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பூவரசு மரத்திலிருந்து பழுத்த இலையொன்று வாயிற் படியில் விழுந்திருந்தது.
பிறகு மழை பெய்ததால் இலை அப்படியே படி மீது ஒட்டிக்கொண்டது. அந்த இடத்தை நாங்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை. அதனால் அது எங்கள் கண்களில் படவில்லை.
சில நாள்களுக்குப் பின் பார்த்தபோது, நனைந்த இலை வெயிலில் காய்ந்து தன் வடிவத்தை அங்கே பதித்துவிட்டதைக் கண்டோம். காய்ந்த இலை காற்றில் பறந்தபின், அந்த இடத்தில் பதிந்திருந்த அதன் வடிவம் இதயம் போலவே அழகுறக் காட்சியளித்தது.