

அடர்ந்த காடுகள், மலைச் சரிவுகள், ஆற்றங்கரைகள் ஆகியவை கருநாகம் / ராஜநாகத்தின் (King Cobra) இயல்பான வாழ்விடங்கள் என இதுவரை நம்பப்பட்டது. உலகின் மிக நீளமான நச்சுப்பாம்பான கருநாகம் மனிதர்களை தவிர்த்து, அடர்ந்த மழைக்காட்டில் மட்டுமே வாழும் உயிரினம்.
ஆனால் சமீபத்தில் வெளியான ஓர் அறிவியல் ஆய்வு, இந்த நம்பிக்கையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. கோவா மாநிலத்தில் கருநாகங்கள் ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், மனிதர்கள் அதிகம் நடமாடும் கிராமம், சிறுநகரப் பகுதிகளில் தென்பட்டுள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. அவை அங்கு வந்திருக்கக் காரணம் ரயில்களாக இருக்கலாம் என்பதுதான் ஆச்சரியம்.
புதிய ஆய்வு
2002 முதல் 2024 வரை கோவாவில் நடைபெற்ற கருநாகம் மீட்புச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாம்பு மீட்பு அமைப்புகள், வனத்துறையின் உதவியுடன் தரவுகள் சேகரிக்கப்பட்டன. 47 இடங்களில் கருநாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலான இடங்கள் கோவாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த காடுகள், ஈரமான காட்டுப்பகுதிகள், ஆற்றங்கரைகள். கருநாகம் பெரும்பாலும் மற்ற பாம்புகளையே உணவாகக் கொள்ளும் என்பதால், பாம்புகள் அதிகம் உள்ள காடுகள் அதன் வாழ்விடமாக அமைவது இயல்பானதே.