

தாவரங்களை உண்ணும் பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், பூச்சிகளை உண்ணும் தாவரத்தைப் பற்றிப் பலர் அறிந்திருக்க மாட்டோம். அதுவே அழுகண்ணி அல்லது பனிதாங்கி என்று அழைக்கப்படும் Sundew தாவரம். இதன் அறிவியல் பெயர் Drosera burmanni. இது Droseraceae குடும்பத்தைச் சேர்ந்தது.
இதன் வாழிடங்கள் பொதுவாக ஈரப்பதம் மிக்க, தண்ணீர் தேங்கிய சதுப்பு நிலங்கள், புல்வெளிகள். இது நீர்நிலைகளின் ஓரங்களில் சூரிய ஒளி படரும் இடங்களை விரும்புகிறது; நைட்ரஜன் குறைபாடுள்ள, அமிலத்தன்மை கொண்ட மணற்பாங்கான அல்லது களிமண் கலந்த ஈரமான சூழலில் வளர்கிறது; பட்டன் பூ (Eriocaulon), முட்டைப்பாசி (Utricularia) போன்ற தாவரங்களுடன் வாழிடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
இது 6 - 15 செ.மீ. உயரம்வரை வளரக்கூடிய ஒருபருவத் தாவரம். இது அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலான மண்ணில் ஈரப்பதம் மிகுந்த காலங்களில் தனது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக்கொள்கிறது. அதாவது, பூத்துக் காய்த்து விதைகளை மண்ணில் பரப்பி, வறட்சிக் காலத்திற்கு முன்பே காய்ந்துவிடுகின்றன.
இலைகளின் தனித்தன்மை
இலைகள் தரையோடு ஒட்டிய வட்ட (Rosette) வடிவில் காணப்படுகின்றன. இதன் இலை நா வடிவில் அடிப்பக்கம் குறுகலாகவும் நுனி நோக்கிச் செல்லச்செல்ல அகன்றும் இருக்கும். இலையின் நிறம் ஆரம்பத்தில் பச்சையாக இருக்கும். மேலும் முதிர்ச்சியடையும்போது அடர் சிவப்பு, ஊதா நிறமாக மாறுகிறது.