

சென்னையில் பள்ளிக்கரணை அருகேயுள்ள நன்மங்கலம் காப்புக்காடு வாயிலின் இருபுறமும் ஓங்கி உயர்ந்த மரங்களைக் கொண்ட பசுமை போர்த்திய நிழற்சாலைகள் நம்மை வரவேற்கும். நன்மங்கலம் காப்புக்காடு, வெப்பமண்டல உலர் பசுமைமாறாப் புதர்க்காடு வகையைச் சார்ந்தது. இந்தக் காப்புக்காடு சுமார் 320 ஹெக்டேர் பரப்பளவுடன் பல்லுயிர்களின் சொர்க்கபுரியாக விளங்குகிறது.
இங்கு 420 வகைத் தாவரங்கள், 125 வகைப் பறவைகள், 40 வகை வண்ணத்துப்பூச்சிகள், 20 வகைத் தட்டான்கள்- ஊசித் தட்டான்கள் வாழ்கின்றன. இவற்றில் மிகவும் அரிதான உயிரினங்களும் அடங்கும்.
இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றியும், வலசைவரும் பறவைகள் பற்றியும் நேரடி அனுபவங்களை வழங்கி, இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியை இந்தக் காட்டில் இயற்கை நடையை ஏற்பாடு செய்வதன் மூலம் வழங்கிவருகிறோம்.
பசுமை வண்ணம்
சற்று உள்ளே சென்றதும் சந்தனமரமும் செம்மரமும் நம்மை வரவேற்கின்றன! நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்கிற அறைகூவலுடன், தங்களால் மக்கள் என்னென்ன பயன்களைப் பெறுகின்றனர் என்பதைச் சொல்லி கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றன, மருத்துவக் குணம்கொண்ட தான்றியும் இலுப்பையும்.