

சார்லஸ் டார்வின் தனது எச்.எம்.எஸ். பீகிள் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது 1832 அக்டோபர் 31இல் ஓர் ஆச்சரியமான விஷயத்தைக் கவனித்தார். திடீரென்று நூற்றுக்கணக்கான சிலந்திகள் வானத்திலிருந்து கப்பலில் உயிரோடு வந்து விழுந்தன.
அவர் இருந்தது நடுக்கடலில். சிலந்திகளால் பறக்க முடியாது. பிறகு எப்படி இவ்வளவு சிலந்திகள் நிலத்திலிருந்து கடலுக்கு வந்திருக்க முடியும்? ஒரு வேளை பறவைகள் தூக்கி வந்து போட்டிருக்குமா என்று பார்த்தால், அங்கே பறவைகளும் இல்லை.
அவருக்கு இந்த நிகழ்வு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. டார்வினுக்குப் பிறகு பல்வேறு ஆராய்ச்சிகள் இது குறித்து நடந்துள்ளன. காற்று ஊதப்பட்ட பலூன்போல சிலந்திகள் வானத்தில் பறப்பதால் இது ‘spider ballooning’ எனப்படுகிறது.
எவ்வாறு பறக்கின்றன?
சிலந்திகள் வானத்தில் பறக்கும்போது அதன் இழைகள் (silk threads) மேல்நோக்கி விரிந்திருப்பதைக் கண்டறிந்து இருக்கிறார்கள். அதேபோல் பறக்கும்போது தரையிலிருந்து சில கிலோமீட்டர் உயரத்திலும், சில நூறு கிலோமீட்டர் தூரத்திற்கும் தாண்டிப் போவதும் கண்டறியப்பட்டிருக்கிறது. சிலந்திகள் எவ்வாறு பறக்கின்றன.
முதலாவது கருதுகோள் - அந்தந்தப் பிரதேசத்தில் வேகமாக வீசும் காற்றானது சிலந்திகளை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குத் தூக்கிச்செல்கிறது. அறிவியல் உலகம் சிறிது காலம் இது சரி என நம்பியது.
இரண்டு சிக்கல்கள் எழுந்தன. சில நேரம் காற்றே வீசாத இடங்களில்கூடச் சிலந்திகள் பறந்து வானத்தில் வந்தன. இன்னொரு காரணம், சிலந்திகள் மேலே எழும்ப அதன் எடையைவிட அதிகமான விசையைக் காற்று கொடுத்தால் மட்டுமே இது சாத்தியம்.